பாகிஸ்தான் உளவாளிகளுக்கு தகவல் பகிர்ந்த யூடியூபர்? கைது செய்யப்பட்டதற்கான காரணம் என்ன?
YouTuber Arrested For Spying : பாகிஸ்தானில் பயணம் செய்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்திரா, நாட்டின் பாதுகாப்பு தொடர்பான முக்கிய தகவல்களை பகிர்ந்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். 'Travel with Jo' என்ற தனது யூடியூப் சேனலில் பாகிஸ்தான் கலாச்சாரம், உணவு, சுற்றுலா அனுபவங்களைப் பகிர்ந்திருந்த அவர், சமீபத்தில் பஹல்காம் தாக்குதல் குறித்து வீடியோ வெளியிட்டிருந்தார்.

யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா
டெல்லி, மே 17 : ஹரியானா (Haryana) மாநிலத்தைச் சேர்ந்த பிரபல யூட்யூப்பர் (Youtuber) ஜோதி மல்ஹோத்திரா பாகிஸ்தான் உளவாளிகளுக்கு முக்கிய தகவல்களை பகிர்ந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ‘Travel with Jo’ என்ற யூட்யூப் சேனலை நடத்தி வரும் ஜோதி, இந்தியா முழுவதும் பயணித்து அங்குள்ள சிறப்பம்சங்களை வீடியோவாக பதிவேற்றியதால், சமூக ஊடகங்களில் பாலோயர்களைப் பெற்றுள்ளார். அவரது யூட்யூப் சேனலுக்கு சுமார் 3.77 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். அதே நேரத்தில், ‘travelwithjo1’ என்ற அவரது இன்ஸ்டாகிராம் கணக்கிலும் 1.32 லட்சம் ஃபாலோயர்களை கொண்டிருக்கிறார்.
சர்ச்சைக்குரிய பாகிஸ்தான் பயணம்
இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பாகிஸ்தான் சென்றதையும், அங்கு பயணித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததையும் போலீசார் குறிப்பிடுகின்றனர். அவரது வீடியோக்களில், அட்டாரி – வாகா எல்லையை கடக்கும் தருணம், லாகூரின் அனார்கலி பஜார், பஸ்ஸில் பயணித்த அனுபவம், மற்றும் பாகிஸ்தானில் உள்ள பெரிய இந்து கோயிலான கடாஸ் ராஜ் கோயில் ஆகியவை குறித்து பதிவு செய்துள்ளார்.
அதேபோல், பாகிஸ்தானிய உணவுகள் குறித்தும், இந்தியா – பாகிஸ்தான் கலாச்சார ஒப்பீடுகளும் அவரது வீடியோக்களில் இடம்பெற்றுள்ளன. இவரது ஒரு புகைப்படத்தில் இஷ்க் லாகூர் என்ற உருது வாசகம் இருப்பது போலீசாரின் கவனத்திற்கு வந்துள்ளது.
காஷ்மீர் பயணமும், தாக்குதல் குறித்த வீடியோவும்
ஜோதி கடந்த ஆண்டு காஷ்மீர் சென்றபோது எடுத்த வீடியோக்களும், டால் லேக்–இல் ஷிகாரா பயணமும், ஸ்ரீநகரிலிருந்து பனிஹால் வரை ரயில்பயணம் செய்த வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பந்தமான வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். “பஹல்காம் காஷ்மீர்: நாம் மீண்டும் காஷ்மீர் செல்லலாமா?” என்பது அந்த வீடியோவின் தலைப்பாக இருந்தது.
மத்திய அரசு நடவடிக்கை
இந்த சம்பவத்திற்குப் பின்னணி குறித்து விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகின்றது. நாட்டின் பாதுகாப்பு தொடர்பான தகவல்களை வெளிநாட்டு உளவாளிகளுக்கு வழங்கியதாக கூறப்படும் இந்த விவகாரம் தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஜோதியின் மூலமாக நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் சூழ்நிலையில், சமூக ஊடகங்கள் மூலம் தனிப்பட்ட பயண வீடியோக்கள் வெளியிடும் பிரபலங்களின் நடவடிக்கைகள் மீது இனி மத்திய அரசு தீவிர கண்காணிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கணிக்கின்றனர்.
கடந்த ஏப்ரல் 2025 அன்று ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை தொடர்ந்தனர். இதனையடுத்து அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய அரசு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற அதிரடி நடவடிக்கையைத் தொடங்கியது.