போரினால் உண்டாகும் சேதங்களுக்கு இன்சூரன்ஸ் பாதுகாப்பளிக்குமா?
Does Insurance Cover War : இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றம் அதிகரிக்கின்ற நிலையில், பொதுமக்கள் தங்களது லைஃப் இன்சூரன்ஸ் மற்றும் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்கள் இவ்வாறான சூழ்நிலைகளில் பாதுகாப்பளிக்குமா என மக்களிடையே கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து விரிவாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று ஜம்மு காஷ்மீரின் (Jammu and Kashmir) பஹல்காம் (Pahalgam) பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) என்ற பெயரில் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானும் பதில் தாக்குதலில் ஈடுபட்டது. குறிப்பாக கடந்த சில நாட்களாக இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் பெரும்பாலான மக்கள் தங்களது உடல்நலம் மற்றும் சொத்துக்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து சிந்திக்கத் தொடங்கியிருக்கிறார்கள். குறிப்பாக, இன்சூரன்ஸ் திட்டங்கள் போர் அல்லது போர் சார்ந்த சூழ்நிலைகளால் ஏற்படும் சேதங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமா என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது.
சாதாரண காப்பீட்டு திட்டங்களில் War Exclusion Clause
பொதுவாகவே, பெரும்பாலான சொத்து மற்றும் மருத்துவ காப்பீட்டு திட்டங்களில் War Exclusion Clause எனப்படும் விதி இடம்பெறுகிறது. இதன் மூலம் போர், போராட்டம், அந்நிய நாட்டின் தாக்குதல் மற்றும் பயங்கரவாதம் போன்ற காரணங்களால் நேரும் நேரடி மற்றும் மறைமுக சேதங்களுக்கு காப்பீடு வழங்கப்படாது. எனவே, இது தொடர்பான கோரிக்கைகள் நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.
உதாரணமாக, போரின் போது ஒரு வீடு வெடிகுண்டு தாக்குதலால் சேதமடைந்தால், அந்த வீட்டின் பெயரில் எடுக்கப்பட்ட ஹோம் இன்சூரன்ஸ் அந்த சேதத்தை பாதுகாப்பதில்லை. ஆனால், அதிக ஆபத்து நிறைந்த பகுதிகளுக்கு ஏற்ற சிறப்பு காப்பீடு திட்டங்களை சில நிறுவனங்கள் வழங்குகின்றன. இதற்காக கூடுதல் கட்டணத்தை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வசூலிக்கின்றன.
குறிப்பாக சில டிராவல் இன்சூரன்ஸ் திட்டங்களில் பயங்கரவாதம், அரசால் ஏற்படுத்தப்படும் பயண தடைகள், அவசர மருத்துவ உதவிகள், விமானம் ரத்து போன்ற சூழ்நிலைகளில் பாதுகாப்பை வழங்குகின்றன.
மருத்துவக் காப்பீடு
மருத்துவ காப்பீட்டுகளில், போர் போன்ற சூழ்நிலைகளால் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை வழங்கும் செலவுகள் பொதுவாக காப்பீட்டு திட்டங்களில் கிடையாது. இந்த வகையான செலவுகளை தனிப்பட்ட முறையில் தான் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
லைஃப் இன்சூரன்ஸில் பாதுகாப்பு கிடைக்குமா?
முக்கியமாக, லைஃப் இன்சூரன்ஸ் திட்டங்களில் பயங்கரவாதம் மற்றும் போரினால் உயிரிழப்பு ஏற்பட்டால், அது இயற்கை மரணம் அல்லது விபத்தினால் ஏற்படும் மரணமாக கருதப்படுகிறது. எனவே, இது போன்ற உயிரிழப்புகளுக்கு சம்பந்தப்பட்ட காப்பீட்டு தொகை முழுமையாகக் கொடுக்கப்படும். அதாவது, காப்பீடு பெற்ற நபரின் வாரிசுகள் அல்லது நாமினியாக நியமிக்கப்பட்டவர்களுக்கு முழுமையாக கிடைக்கும்.
இதுபோன்ற பாதுகாப்பு குறித்து அச்சம் நிலவுகின்ற நேரங்களில், உங்கள் காப்பீட்டுப் பாலிசியை நன்கு படித்து புரிந்து கொள்வது அவசியம். எந்தெந்த விஷயங்களுக்கு இன்சூரன்ஸ் பாதுகாப்பு அளிக்காது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். சந்தேகங்கள் இருந்தால் இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் நேரடியாக கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். தேவையான திட்டங்களை கூடுதலாக சேர்க்கும் எண்ணம் இருந்தால் அதனை உடனடியாக செய்வது நல்லது.
எளிய பின்னணி கொண்டவர்களுக்கு காப்பீடு என்பது எதிர்காலத்திற்கான முக்கிய பாதுகாப்பு அம்சமாக பார்க்கப்படுகிறது. ஆனால், போர் போன்ற அபாயகரமான சூழ்நிலைகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டுமானால், அதற்கு முன் கூட்டியே திட்டமிடுவது அவசியம்.