New UPI Rule : யுபிஐ மூலம் பணம் அனுப்பப்போறீங்களா? புதிய விதியை தெரிஞ்சுக்கோங்க!
UPI New Rule: பயனர்கள் பாதுகாப்பாக பணம் அனுப்பும் நோக்கில் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் யுபிஐயில் ஒரு புதிய மாற்றத்தை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. அதன் படி இனி யுபிஐயில் வங்கியில் என்ன பெயர் இருக்கிறதோ அதுவே இடம்பெறும். இது குறித்து விரிவாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
இந்தியாவில் (India) டிஜிட்டல் பரிவர்த்தனைகளை பாதுகாக்கும் நோக்கில் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) ஒரு முக்கியமான மாற்றத்தை யுபிஐ (Unified Payments Interface) அமைப்பில் கொண்டு வர உள்ளது. ஜூன் 30, 2025 முதல் இந்த புதிய விதி நேரடியாக அமலுக்கு வரும். Google Pay, PhonePe, Paytm, BHIM போன்றவை ஆப்கள் மூலம் பணம் அனுப்பும் நபர் தனது மொபைல் காண்டாக்டில் எப்படி பெயரை சேமித்து வைத்திருக்கிறார் என்பதைக் கொண்டு அந்த பெயரையே காட்டுகின்றன. ஒரே மாதிரியான பெயரில் ரெண்டு பேர் கூட இருக்கலாம். இதனால் நம்மால் தவறான நபர்களுக்கு பணம் வாய்பபிருக்கறது. அதே போல மிகப்பெரிய மோசடி சம்பவங்களும் நடைபெறலாம். இதனை தவிர்க்க புதிய விதி அமலுக்கு வரவிருக்கிறது.
புதிய விதி என்ன சொல்கிறது?
இதன்படி இனிமேல் யுபிஐ மூலமாக பணம் அனுப்பும்போது, நம் மொபைலில் நாம் பணம் அனுப்பவிரும்பும் நபரின் பெயர் நம் மொபைல் காண்டாக்ட் படி இல்லாமல் அவர் வங்கியில் என்ன பெயர் கொடுத்திருக்கிறாரோ அதன் படி காட்டும். இதனால் அவசரத்தில் தவறான நபர்களுக்கு பணம் அனுப்புவது தவிர்க்கப்படும். இந்த புதிய விதியின் படி நாம் ஒருவருக்கு பணம் அனுப்பும்போதோ கடைகள் அல்லது வணிக நிறுவனங்களுக்கு பணம் அனுப்பும்போதோ அவர்கள் வங்கியில் அவர்கள் என்ன பெயர் அளித்திருக்கிறார்களோ அதுதான் நமது யுபிஐ ஆப்பில் காட்டும். மேலும் நாம் செல்போன் நம்பர், யுபிஐ ஐடி, அல்லது கியூஆர் கோட் மூலம் பணம் அனுப்பினாலும் வங்கியில் என்ன பெயர் இருக்கிறதோ அதுவே நமக்கு காட்டும். இதன் மூலம் நாம் சரியான நபருக்கு பணம் அனுப்பியதை உறுதி செய்து கொள்ளலாம்.
பயனாளர்களுக்கு கிடைக்கும் பலன்கள் என்ன?
- உண்மையான பெயரை உறுதிப்படுத்திக் கொண்டு பணம் அனுப்பலாம். எனவே இதனால் ஆபத்துக்கள் குறையும்.
- நாம் பணம் அனுப்பும் நபரின் அடையாளத்தை அல்லது அவரது உண்மையான பெயரை தெரிந்துகொள்ளலாம். இது மோடிகள் நடைபெறும்போது ஒருவரை அடையாளம் காணுவதற்கோ அல்லது புகார் அளிப்பதற்கோ போதுமானதாக இருக்கும்.
- ஒரே போன்ற பெயர்களால் ஏற்படும் தவறுகளை தவிர்க்க முடியும்.
பயனாளர்கள் கவனிக்க வேண்டியவை
-
யாருக்கு பணம் அனுப்புகிறீர்கள் என்பதை உறுதியாகப் பார்த்து அனுப்ப வேண்டும்.
-
பெயர் தொடர்பான சந்தேகம் இருந்தால், சம்மந்தப்பட்ட நபரை அணுகி உறுதி செய்துகொள்ள வேண்டும்.
-
அறிமுகமற்ற நபர்கள் அளிக்கும் QR கோடுகளை ஸ்கேன் செய்வதை தவிர்க்கவும்.
-
சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனை நடந்தால், உடனடியாக பேங்க் அல்லது யுபிஐ ஆப்களின் கஸ்டமர் கேர் மூலம் புகாரளிக்கவும்.
இந்த புதிய யுபிஐ விதி, இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் நம்பிக்கையையும் பாதுகாப்பையும் அதிகரிக்கத் தேவையான ஒரு பொறுப்பான நடவடிக்கை. இனி யாருக்கு பணம் அனுப்புகிறீர்கள் என்பதை உங்கள் கண் முன்னே இருப்பது போல உறுதிப்படுத்த முடியும் – அதுவே பெரிய நன்மை!