அதிக லாபத்தை தரும் 5 அஞ்சலக சேமிப்பு திட்டங்கள்.. பட்டியல் இதோ!
Top 5 Post Office Schemes | பொதுமக்கள் சேமிப்பதற்காக அரசு பல வகையான சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளதால் அவை மிகவும் பாதுகாப்பானவையாக கருதப்படுகிறது.

மாதிரி புகைப்படம்
மனிதர்களின் வாழ்வில் வருமானம் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு சேமிப்பும் முக்கியமாக கருதப்படுகிறது. சம்பாதிக்கும் பணத்தை அன்றாட செலவுகளுக்காக மட்டுமே பயன்படுத்தும் பட்சத்தில் எதிர்பாராத நேரங்களில் ஏற்படும் நிதி சிக்கல்களை சமாளிப்பது மிகவும் கடினமாகி விடும். இந்த நிலையில் தான் சேமிப்பு கை கொடுக்கும். இதன் காரணமாக தான் சேமிக்க வேண்டும் என பொருளாதார வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர். சேமிப்பை பொருத்தவரை பெரிய தொகை மூலம் தான் தொடங்க வேண்டும் என்று இல்லை. மிக சிறிய அளவு தொகை இருந்தாலே சேமிப்பு அல்லது முதலீடு செய்ய முடியும். இந்த நிலையில், குறைந்த முதலீட்டில் அதிக லாபத்தை வழங்கும் சில அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
அஞ்சலக PPF திட்டம்
அஞ்சலக PPF (Public Provident Fund) திட்டம் ஒரு மிக சிறந்த சேமிப்பு திட்டமாக கருதப்படுகிறது. இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.500 முதல் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்திற்கு 7.1 சதவீதம் வட்டி வழங்கப்படும் நிலையில், இதில் நீண்ட காலம் முதலீடு செய்வது சிறந்த லாபத்தை பெற பயனுள்ளதாக இருக்கும்.
செல்வ மகள் சேமிப்பு திட்டம்
பெண் குழந்தைகளுக்கான சிறப்பான சேமிப்பு திட்டம் தான் சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம். இந்த திட்டம் தமிழில் செல்வ மகள் சேமிப்பு திட்டம் என அழைகப்படுகிறது. இந்த திட்டம் முழுக்க முழுக்க பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை மையப்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு 10 வயதாகும் போது இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் 15 ஆண்டுகள் முதலீடு செய்யும் பட்சத்தில் பெண் குழந்தைகள் வளர்ந்ததும் அவர்களது கல்வி மற்றும் திருமண செலவுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த திட்டத்திற்கு 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படும் நிலையில், வரி விலக்கும் வழங்கப்படுகிறது.
மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ்
மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் என்பது பெண்களுக்கான ஒரு சிறந்த சேமிப்பு திட்டமாகும். இந்த திட்டத்தில் முதலீடு செய்ய பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. இந்த திட்டத்திற்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படும் நிலையில், இந்த திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை முதலீடு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
அஞ்சலக மாதாந்திர வருமான திட்டம்
அஞ்சலக மாதாந்திர வருமான திட்டம் மாதம் மாதம் நிதியை பெறுவதற்கான ஒரு சிறந்த திட்டமாக உள்ளது. இது பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.1,000 முதல் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்திற்கு 7.4 சதவீதம் வட்டி வழங்கப்படும் நிலையில், மூத்த குடிமக்களின் சிறந்த தேர்வாக இது உள்ளது.
தேசிய சேமிப்பு சான்றிதழ்
தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் அனைத்து தரப்பினருக்குமான சிறந்த திட்டமாக உள்ளது. இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகளாக உள்ள நிலையில், இதில் வெறும் ரூ.100 முதலே முதலீடு செய்யலாம். இந்த திட்டத்திற்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.