அதிமுக – பாஜக கூட்டணி தொடருமா என தெரியவில்லை.. திருமாவளவன் பரபரப்பு பேட்டி!
Thirumavalavan spoke about AIADMK - BJP Alliance | விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அதிமுக - பாஜக கூட்டணி குறித்து அவ்வப்போது தனது கருத்துக்களை முன்வைத்து வருகிறார். இந்த நிலையில், இன்று (மே 19, 2025) திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் அதிமுக - பாஜக கூட்டணி குறித்து மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார்.

கோப்பு புகைப்படம்
திருச்சி, மே 19 : அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (AIADMK – All India Anna Dravida Munnetra Kazhagam) – பாரதிய ஜனதா கட்சி (BJP – Bharatiya Janata Party) கூட்டணி தொடருமா என தெரியவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். அதுமட்டுமன்றி திராவிட முன்னேற்ற கழக கூட்டணி குறித்தும் அவர் பேசியுள்ளார். இந்த நிலையில், செய்தியாளர் சந்திப்பில் திருமாவளவன் பேசியது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வரும் கட்சிகள்
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக, நாதக, தவெக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட உள்ளன. நேற்று (மே 18, 2025) நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 2026 சட்டமன்ற தேர்தலிலும் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கட்சிகள் தங்களது நிலைப்பாட்டை தெரிவித்து வரும் நிலையில், சீமான் இவ்வாரு அறிவித்துள்ளார்.
முன்னதாக அதிமுக – பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில், திமுக கூட்டணியில் எந்த வித மாற்றமும் இன்றி தொடர்கிறது. இந்த நிலையில், தவெக எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்பது குறித்த எதிர்ப்பார்ப்பும் எழுந்துள்ளது. இவ்வாறு அரசியல் களம் மிகவும் பரபரப்பாக உள்ள நிலையில், திமுக கூட்டணி குறித்தும், அதிமுக – பாஜக கூட்டணி குறித்து விசிக தலைவர் தொல் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
அதிமுக – பாஜக கூட்டணி குறித்து பேசிய தொல் திருமாவளவன்
இன்று (மே 19, 2025) திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், தமிழ்நாட்டில் திமுக கூட்டணி தான் கூட்டணி என்ற வடிவத்துடன் உள்ளது. எதிர்க்கட்சிகள் கூட்டணி என்ற ஒரு வடிவத்தையே எட்டவில்லை. அதிமுகவும் பாஜகவும் இணைந்து தேர்தலை சந்திப்போம் என்று அறிவித்துள்ளார்கள். ஆனால் அவர்களின் கூட்டணி தொடருமா என்பது தெரியாது என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், அதே கூட்டணியில் இருந்த பாமக இதுவரை எந்த கூட்டணி என அறிவிக்கவில்லை. தேமுதிகவும் இதுவரை தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை. அதனால் அவர்களின் கூட்டனி இன்னும் வடிவம் பெறவில்லை என்று கூறியுள்ளார். மேலும், விஜய்யை அதிமுக கூட்டணியில் இணைக்க விரும்புவதாக செய்திகள் வருகின்றன. அதை அவர் ஏற்றுக்கொள்வாரா அல்லது என்னுடைய தலைமையில் நீங்கள் வாருங்கள் என கூப்பிடுவாரா என தெரியவில்லை. எனவே எதிர்க்கட்சியில் கூட்டணி என்கிற முகாந்திரம் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.