TASMAC : டாஸ்மாக் துணை மேலாளர் அமலாக்கத்துறை முன் ஆஜர்!

Enforcement Directorate Investigation on TASMAC Issue | டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி முறைகேடு நடைபெற்று இருப்பதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டிய நிலையில், அது தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இன்று (மே 19, 2025) டாஸ்மாக் துணை பொது மேலாளரிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

TASMAC : டாஸ்மாக் துணை மேலாளர் அமலாக்கத்துறை முன் ஆஜர்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

19 May 2025 13:02 PM

சென்னை, மே 19 : டாஸ்மாக் (TASMAC – Tamil Nadu State Marketing Corporation) துணை பொது மேலாளர் ஜோதி சங்கர் சென்னையில் உள்ள அமலாக்கத்துறை (ED – Enforcement Directorate) அலுவலகத்தில் அதிகாரிகள் முன் ஆஜராகியுள்ளார். மே 17, 2025 அன்று டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகனிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்திய நிலையில், இன்று (மே 19, 2025) ஜோதி சங்கரிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடைபெற்று வரும் விசாரணை குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரூ.1,000 கோடி – டாஸ்மாக் மீது குற்றம்சாட்டிய அமலாக்கத்துறை

டாஸ்மாக் நிர்வாகத்தில் ரூ.1,000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை மார்ச் 2025-ல் குற்றம் சாட்டியது. இந்த விவகாரம் தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், எதிர்க்கட்சிகளாக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆளும் திமுக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகளின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த அவகையில் மே 17, 2025 அன்று டாஸ்மாக் இயக்குநர் விசாகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கிழிந்த நிலையில் இருந்த வாட்ஸ்அப் ஸ்கிரீன் ஷாட் நகல்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். அதனை தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கு அவரை அழைத்துச் சென்ற அதிகாரிகள் அங்கு வைத்து நீண்ட நேரம் விசாரணை நடத்தினர். அதனை தொடர்ந்து இரண்டாவது நாளாக மே 18, 2025 அன்று விசாகனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

டாஸ்மாக் துணை மேலாளரிடம் அமலாக்கத்துறை விசாரணை

நேற்று (மே 18, 2025) வரை டாஸ்மாக் இயக்குநரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்த நிலையில், இன்று (மே 19, 2025) துணை பொது மேலாளர் ஜோதி சங்கர் சென்னையில் உள்ள அமலாக்கத்துறை ஆஜராகியுள்ளார். அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.