6 மாதங்களில் 5 கொலை.. நகைகள் டார்கெட்.. அதிரவைத்த கொலையாளிகள் குறித்து போலீஸ் ரிப்போர்ட்!
4 Arrested in Sivagiri Murder Case | ஈரோடு மாவட்டம் சிவகிரி இரட்டை கொலை வழக்கில் காவல்துறையினர் 4 பேரை கைது செய்துள்ளனர். வயதான தம்பதி கொலை செய்யப்பட்ட விவகாரம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். இதன் மூலம் மேலும் சில முக்கிய தகவல்களும் வெளியாகியுள்ளன.

செய்தியாளர் சந்திப்பு
ஈரோடு, மே 19 : ஈரோடு மாவட்டம் சிவகிரியில் நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில் கைதான குற்றவாளிகள் 6 மாதங்களில் 5 பேரை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்துள்ளது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த காவல்துறையினர், குற்றவாளிகள் குறித்த பகீர் பின்னணியை தெரிவித்துள்ளனர். அதன்படி, கைது செய்யப்பட்ட 4 பேருக்கும் வேறு சில கொலை வழக்கிலும் தொடர்பு உள்ளதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர். இந்த நிலையில், சிவகிரி கொலை வழக்கு குறித்து காவல்துறையினர் கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சிவகிரியில் அரங்கேறிய இரட்டை படுகொலை
ஈரோடு மாவட்டம், சிவகிரியில் பகுதியில் ராமசாமி (வயது 75) மற்றும் அவரது மனைவி பாக்கியம் (வயது 67) ஆகியவர்கள் தங்களது தோட்ட வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில், அவர்களது வீட்டை நீண்ட நாட்களாக நோட்டமிட்டு வந்த கொள்ளையர்கள், ஏப்ரல் 29, 2025 அனறு முதிய தம்பதிகளை தாக்கி படுகொலை செய்துவிட்டு அவர்களது வீட்டில் இருந்த 14 சவரன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
நகை மற்றும் பணத்தை கொள்ளையடிக்க முதிய தம்பதிகள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில், இரண்டு நாட்கள் கழித்து அவர்களின் சடலங்கள் அழுகிய நிலையில் மீட்கப்பட்டன. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். குறிப்பாக தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட காவல்துறையினரை கொண்டு 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
சிவகிரி இரட்டை கொலை வழக்கு குறித்து பேசிய காவல்துறை அதிகாரிகள்
இந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், செய்தியாளர்களை சந்தித்த போலீசார் சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர். இது குறித்து கூறிய அவர்கள் சிவகிரி கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலையில் ஈடுபட்ட 3 பேர் கொள்ளையடித்த நகைகளை ஞானசேகரனிடம் ஒப்படைத்த நிலையில், அவரை போலீசார் கைது செய்துள்ளனர். பல்லடத்தில் 3 பேரை கொலை செய்ததும் தாங்கள் தான் என கைதான 4 பேரும் ஒப்புக்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இந்த 4 பேரும் தோட்டத்து வீடுகளை குறிவைத்து வீட்டில் இருப்பவர்களை கொலை செய்து கொள்ளையடித்து வந்துள்ளனர். அவர்கள், கொலை செய்வதற்காக மரக்கட்டைகளை பயன்படுத்தி வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சிவிகரி கொலை வழக்கில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய காவல்துறை அதிகாரிகள் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளையும் பறிமுதல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.