Thirumavalavan Press Meet: பாஜகவுடனான கூட்டணி அதிமுகவிற்கு பாதிப்புதான்.. திருமாவளவன் அதிரடி..!

BJP AIADMK Alliance: திருமாவளவன் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர்களின் ஓய்வூதியப் பிரச்னையை குறித்தும், மே 31 அன்று திருச்சியில் நடைபெறும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மதச்சார்பின்மை பேரணியை அறிவித்தார். மதுரை ஆதீனத்தின் கார் விபத்து குறித்து கருத்து தெரிவித்த அவர், சமூக ஒற்றுமைக்கு எதிரான அவரது கருத்துகளை கண்டித்தார். பாஜக-அதிமுக கூட்டணி 2026 தேர்தலில் தோல்வியடைவதாகவும் அவர் கூறினார்.

Thirumavalavan Press Meet: பாஜகவுடனான கூட்டணி அதிமுகவிற்கு பாதிப்புதான்.. திருமாவளவன் அதிரடி..!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்

Published: 

06 May 2025 17:23 PM

சிதம்பரம், மே 6: விடுதலை சிறுத்தைகள் கட்சி (Viduthalai Chiruthaigal Katchi) தலைவர் திருமாவளவன் (Thirumavalavan) இன்று அதாவது 2025 மே 6ம் தேதி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ கடந்த 3 வாரங்களுக்கு மேலாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக (Annamalai University) வளாகத்தில் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள் ஓய்வுபெற்று கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் ஓய்வூதிய பலன்கள் எதையும் பெறவில்லை. இவர்களின் கோரிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கனிவுடன் பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும்.” என்று தெரிவித்தார்.

விசிக பேரணி:

தொடர்ந்து பேசிய அவர், “வருகின்ற 2025 மே 31ம் தேதி திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ’மதச்சார்பின்மையை காப்போம், மக்கள் எழுச்சி பேரணி’ நடைபெறுகிறது. இந்த பேரணியில் மதச்சார்பின்மைக்கு எதிராக தொடுக்கப்படும் தாக்குதல்களை தடுக்கவும், வக்ப் சட்ட திருத்த்தை வாபஸ் வாங்கவும் வலியுறுத்த இருக்கிறோம். இதில், அகில இந்திய அளவில் ஜனநாயக சக்திகள் ஓரணியின் திரள வேண்டும் என்பதை வலியுறுத்தவும் விதமாக பேரணி நடைபெறவுள்ளது. இதில், பல லட்சம் பேர் பங்கேற்க இருக்கிறார்கள்.” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து மதுரை ஆதீனம் கார் விபத்து குறித்து பேசிய திருமாவளவன், “மதுரை ஆதீனம் அண்மையில் அளித்த பேட்டியில், அவரது உயிருக்கு ஆபத்து என்று தெரிவித்திருந்தது அதிர்ச்சியை தந்தது. அவருக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. அதன்பின், காவல்துறையினர் வெளியிட்ட வீடியோவை பார்த்தபிறகு, கொலை முயற்சி போல் எந்த நிகழ்வும் நடக்கவில்லை. அது எதிர்பாராமல் நடந்த ஒரு விபத்து. அதில், எந்தவொரு ஆபத்துமின்றி மதுரை ஆதீனம் தப்பித்துள்ளார். இப்படி முக்கிய பீடத்தில் இருக்கும் நபர் சமூக பதற்றத்தை குறைக்கும் வகையில் கருத்துகளை சொல்ல வேண்டும்.

ஆனால், தன்னை கொல்ல முஸ்லிம்கள் முயற்சி செய்தார்கள். தன்னை கொல்ல பாகிஸ்தான் சதி செய்தது என்று சொல்வது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது. முஸ்லீம் மக்களுக்கு எதிரான வெறுப்பை பரப்பும்விதமாக இது இருக்கிறது. இது இரு சமூகத்தினரிடையே பிரிவினையை உண்டாக்கும் குற்றச்செயல். எனவே, தமிழ்நாடு அரசு மதுரை ஆதீனம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

பாஜக – அதிமுக கூட்டணி:

பாஜக – அதிமுக கூட்டணி குறித்து பேசிய திருமாவளவன், “வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்தது அதிமுகவிற்கு மேலும் பாதிப்பைதான் கொடுக்குமே தவிர, எந்த பலன்களையும் தராது. இந்த கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். ஆனால், அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை” என்றும் தெரிவித்தார்.

Related Stories