CBSE Fail Policy: வேடிக்கை பார்க்க முடியாது.. சிபிஎஸ்இ முடிவுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் கண்டனம்!
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், சிபிஎஸ்சி பள்ளிகளில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை தோல்வி என அறிவிக்கும் புதிய கொள்கையை கடுமையாக கண்டித்துள்ளார். இது மாணவர்களின் இடைநிற்றலை அதிகரிக்கும் என அவர் எச்சரித்துள்ளார். பெற்றோர்கள் இந்த நடவடிக்கைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாடு, மே 2: சிபிஎஸ்சி கல்வியில் (CBSE Education) குறைந்த மதிப்பெண் பெற்றால் ஃபெயில் ஆகும் நடவடிக்கைக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் (Anbil Mahesh Poyyamozhi) கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், “குறைந்த மதிப்பெண் எடுத்தால் பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றல் அதிகரிக்கும் என அவர் கூறியுள்ளார். அதேசமயம் பெற்றோர்கள் சிபிஎஸ்சி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இத்தகைய திட்டங்களின் காரணமாகத்தான் தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு (Tamilnadu Government) எதிர்க்கிறது என விளக்கம் அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ்ஃபெயில் என அறிவிப்போம் என கூறி கையெழுத்து கேட்டால் பெற்றோர்கள் எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
அது மட்டுமல்லாமல் சிபிஎஸ்சி அமைப்பின் இந்த நடவடிக்கையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றும், கடனை வாங்கி சிபிஎஸ்இ பள்ளியில் சேர்க்கும் பெற்றோர் இந்த திட்டத்தால் எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாவார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். நான் திமுகவினரின் பிள்ளைகளுக்காக பேசவில்லை எனவும் அனைத்து மாணவர்களுக்காகவும் பேசுகிறேன்” எனவும் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
சிபிஎஸ்இ கல்வியின் புதிய திட்டம்
சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் 3,5 மற்றும் 8 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் ஆண்டு இறுதி தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்தால் அவர்களை ஃபெயில் என அறிவிக்கும் நடைமுறை அமலுக்கு வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. 2020 தேசிய கல்விக் கொள்கை விதிகளின்படி கட்டாய தேர்ச்சி முறை மாற்றப்பட்டு இந்த புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. 2024 – 2025 ஆம் ஆண்டு நடந்த பொதுதேர்வில் இந்த முறையானது அமலுக்கு வராது என்றும், 2025 -2026 ஆம் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதற்கான ஒப்புதல் கடிதங்களை பெற்றோரிடம் இருந்து சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் பெற்று வருவதாகவும் வெளியாகி உள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் உள்ள மாவட்டங்களில் சிபிஎஸ்சி எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கொள்கைகளை பின்பற்றி பள்ளிகள் செயல்பட்டு வருகிறது . புதிதாகவும் பள்ளிகள் ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் தொடங்கப்பட்டு வரும் நிலையில் சிபிஎஸ்இ கல்வியில் எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்ற விதி இருந்து வருகிறது.
தற்போது அதில் மாற்றம் கொண்டுவரப்பட்டு 30 சதவீதத்திற்கும் குறைவான மதிப்பெண் எடுக்கும் 3,5,8 வகுப்பில் படிக்கும் மாணவ – மாணவியர்களை ஃபெயில் என அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அறிவிப்பானது மத்திய அரசால் நடத்தப்படும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு பொருந்தும் என சொல்லப்பட்டுள்ளது.
ஏற்கனவே பள்ளியில் அதிகரித்த இடைநிற்றலை தடுக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசின் மாநில கல்வியில் எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்பது அமலில் இருந்து வருகிறது. இதன் காரணமாக குறிப்பிடத்தக்க மாற்றம் பள்ளி கல்வியில் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது