தொடங்கப்போகும் கத்திரி வெயில்.. வெப்பநிலை உயரும்.. வானிலை மையம் அலர்ட்!
Tamil Nadu Weather Alert : தமிழகத்தில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த சில தினங்களில் அக்னி வெயில் துவங்க உள்ள நிலையில், வெப்பநிலை உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, மே 02: தமிழகத்தில் ஒருசில இடங்களில் வெப்பநிலை (Heatwave Alert) இயல்பை விடட அதிகமாக இருக்கும் என வானிலை மையம் (Tamil Nadu Weather ) கூறியுள்ளது. அதே நேரத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் தீவிரமாகி வருகிறது. 2025 மார்ச் மாதம் முதல் வெப்பநிலை கடுமையாக இருந்தது. இதனால், பொதுமக்கள் வெளியே செல்வதற்கு சிரமப்பபடுகின்றனர். மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை 100 டிகிரியை தாண்டி பதிவாகி வருகிறது. வரும் நாட்களில் வெப்பம் மேலும் உயரக் கூடும் என வானிலை மையம் கூறி வருகிறது. அதோடு, 2025 மே 4ஆம் தேதி அக்னி நட்சத்திரம் துவங்குகிறது. இதனால், வரும் நாட்களில் இயல்பை விட அதிக வெப்பம் இருக்கும்.
வெப்பநிலை உயரும்
இந்த நிலையில், அடுத்த சில நாட்களான வானிலை நிலவரத்தை பார்ப்போம். 2025 மே 2ஆம் தேதி முதல் மே 5ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படலாம் என தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை 2025 மே 2ஆம் தேதி வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. 2025 மே 2ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தொடங்கப்போகும் கத்திரி வெயில்
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஆறு இடங்களில் வெப்பநிலை சதம் அடித்துள்ளது. அதன்படி, அதிகபட்சமாக வேலூரில் 103 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகி உள்ளது. அடுத்ததாக, ஈரோட்டில் 102 டிகிரி பாரன்ஹீட், கரூர் பரமத்தி, திருச்சி, திருத்தணி, மதுரை விமான நிலையம் ஆகிய இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த வெயிலின் தாக்கம் வரும் நாட்களில் உயரக்கூடும். கத்திரி வெயில் தொடங்குவதற்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால், வெப்பநிலை அதிகமாகுவதோடு, வெப்ப அலையும் வீசக்கூடும் என வானிலை மையம் கூறி வருகிறது குறிப்பிடத்தக்கது.