போர் பதற்றம்: பாகிஸ்தானுக்கு தமிழகத்தின் மருந்து ஏற்றுமதி நிறுத்தம்

India-Pakistan Tension: தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் மருந்து மற்றும் மூலப்பொருட்களின் ஏற்றுமதி இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றத்தின் காரணமாக முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழக நிறுவனங்களுக்கு சுமார் ரூ.100 கோடி இழப்பு ஏற்படலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், தேச நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், உள்நாட்டு மருந்து தேவை பாதிக்கப்படாது என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

போர் பதற்றம்: பாகிஸ்தானுக்கு தமிழகத்தின் மருந்து ஏற்றுமதி நிறுத்தம்

பாகிஸ்தானுக்கு தமிழகத்தின் மருந்து ஏற்றுமதி நிறுத்தம்

Published: 

10 May 2025 09:42 AM

தமிழ்நாடு மே 10: இந்தியா–பாகிஸ்தான் (India–Pakistan) இடையே நிலவும் போர் பதற்றத்தைக் கருத்தில் கொண்டு, தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் மற்றும் மூலப்பொருட்கள் ஏற்றுமதி முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ரூ.100 கோடி வரை இழப்பு ஏற்படும் என்றாலும், தேச நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியா உலகளவில் மருந்து உற்பத்தியின் முன்னணி நாடாக இருக்கிறது. தமிழக மருந்து ஏற்றுமதி (Tamil Nadu pharmaceutical exports) மதிப்பு ஆண்டுக்கு ரூ.10,000 கோடியை எட்டுகிறது. உள்நாட்டுக்குத் தேவையான மருந்துகளில் எந்தத் தட்டுப்பாடும் இருக்காது என உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானுக்கு மருந்து ஏற்றுமதி நிறுத்தம்: தமிழக நிறுவனங்களின் முடிவு

இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவும் போர் பதற்றத்தைத் தொடர்ந்து, தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு மருந்து மற்றும் அதன் மூலப்பொருட்கள் ஏற்றுமதி நடவடிக்கைகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து மருந்து உற்பத்தியாளர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.

ரூ.100 கோடி இழப்பும் ஏற்றுமதி நிறுத்தமும்

இந்த முடிவால் சுமார் ரூ.100 கோடி வரை இழப்பு ஏற்படும் என்றாலும், தேச நலனைக் கருத்தில் கொண்டு இந்த முக்கியமான முடிவை எடுத்துள்ளதாக மருந்து உற்பத்தியாளர்கள் கூறியுள்ளனர். பாகிஸ்தானுக்கு உயிருக்குப் பயன்படும் முக்கிய மருந்துகளுக்கான மூலப்பொருட்கள் தற்போது அனுப்பப்படுவதில்லை.

மத்திய அரசின் உத்தரவின்பேரில் நடவடிக்கை

உச்சகட்ட போர் சூழ்நிலை காரணமாக, பாகிஸ்தான் பெற்றுவந்த அனைத்து சலுகைகள் மற்றும் பலன்களை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி மருந்து ஏற்றுமதியையும் தடை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை ஆதரித்த தமிழ்நாடு மருந்து உற்பத்தியாளர் சங்கம் ஏற்றுமதியை நிறுத்தியுள்ளது.

இந்தியா: உலக மருந்து உற்பத்தியில் முன்னணி

இந்தியாவின் மருந்து சந்தை உலகளவில் முக்கியமானது. உலகில் உற்பத்தியாகும் மருந்துகளில் 60% இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகிறது. அமெரிக்கா, பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியா மருந்து ஏற்றுமதி செய்கிறது. குறிப்பாக ‘ஜெனரிக்’ மருந்துகளின் உற்பத்தியில் இந்தியா முன்னணியில் உள்ளது.

தமிழக மருந்து ஏற்றுமதியின் அளவு

தமிழகத்திலிருந்து மட்டும் ஆண்டுக்கு ரூ.8,000 கோடி முதல் ரூ.10,000 கோடி மதிப்பிலான மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதில் பாகிஸ்தானுக்கான உயிர் காக்கும் மருந்துகளின் மூலப்பொருட்கள் மட்டுமே ரூ.100 கோடி மதிப்புடையதாகும்.

மருந்து பற்றாக்குறை ஏற்படுமா?

தமிழகத்துக்குத் தேவையான சில முக்கிய மூலப்பொருள்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. அதில் எந்தவிதமான தடையும் இல்லை என மருந்து உற்பத்தியாளர் சங்கத் தலைவரும், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மாநில மருந்து உற்பத்தியாளர் சங்கத் தலைவருமான டாக்டர் ஜெயசீலன் தெரிவித்தார். எனவே, போர் சூழ்நிலை எவ்வளவு தீவிரமாக இருந்தாலும், உள்நாட்டு மருந்து தேவையில் எந்தத் தடையும் ஏற்படாது என்றும் அவர் உறுதியாக கூறினார்.