நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு.. இன்று தீர்ப்பு!

Pollachi Case Verdict : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கோவை மகளிர் நீதிமன்றம் 2025 மே 13ஆம் தேதியான இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது. நீதிபதி ஆர்.நந்தினி தேவி காலை 10 மணிக்கு தீர்ப்பை வெளியிடுகிறார். கடந்த 6 ஆண்டுகளாக இந்த வழக்கின் விசாரணை நடந்து வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கட உள்ளது.

நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு.. இன்று  தீர்ப்பு!

பொள்ளாச்சி வழக்கு

Updated On: 

13 May 2025 13:45 PM

கோவை, 2025 மே 13 : ஒட்டுமொத்த நாட்டையை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை (Pollachi Harassment Case) வழக்கில் 2025 மே 13ஆம் தேதியான இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது. இந்த தீர்ப்பை கோவை மகளிர் நீதிமன்றம் வழங்குகிறது. ஆறு ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்து வந்த நிலையில், 2025 மே 13ஆம் தேததியான இன்று தீர்ப்பு வெளியாகுகிறது. கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 2018, 2019ஆம் ஆண்டு வரை இளம்பெண்களை மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு

இந்த கொடூரம் பெண்களுக்கு ஓராண்டாகவே நடந்து வந்ததாக தெரிகிறது. 2019 பிப்ரவரி 14ஆம் தேதி பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் ஒரு கல்லூரி மாணவி புகார் அளித்தார். இதன் மூலம், இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது.

முதலில் பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். பிறகு இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட கொஞ்சம் நாட்களில், சிபிஐக்கு மாற்றப்பட்டது.  வழக்கின் தீவிரத்தை அறிந்து இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த வழக்கில் சபரிராஜன் (32), கே. திருநாவுக்கரசு (34), எம். சதீஷ் (33), டி. வசந்தகுமார் (30), ஆர். மணி (32), மணிவண்ணன் (32), பி. பாபு (33), டி. ஹரோனிமஸ் பால் (32), கே. அருளானந்தம் (39), எம். அருண்குமார் (39), ஆகியோர் இந்த கொடூர செயலை செய்ததை சிபிஐ அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதனை அடுத்து, அவர்களின் செல்போன் மற்றும் மடிக்கணினிகளை ஆய்வு செய்ததில், பல்வேறு பெண்களை மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து, 2019ஆம் ஆண்டு திருநாவுக்கரசு, சபரீசன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகியோர் கைதாகினர்.

இன்று தீர்ப்பு வழங்கும் நீதிமன்றம்

மேலும், ஹரன்பால், பாபு, அருளானந்தம், அருண்குமார் ஆகியோர் 2020ஆம் ஆண்டு கைதாகினர். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேர் கைதாகிய நிலையில், இந்த வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. பல கட்ட விசாரணைகள் நடந்தது.  சென்னை உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி விசாரணை நடத்தப்பட்டது. வழக்கில் 40க்கும் மேற்பட்ட சாட்சிகளை நீதிமன்றம் விசாரித்தது.

மேலும், பாதிக்கப்பட்ட 8 பெண்களும் குற்றச்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சாட்சியம் அளித்தனர். இந்த வழக்கின் ஒவ்வொரு விசாரணையின்போது குற்றச்சாட்டப்பவர்கள் 9 பேரும் சேலம் சிறையில் இருந்தபடியே, வீடியோ மூலம் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கில் தற்போது, அனைத்து சாட்சிகளிடமும் விசாரணை முடிந்துள்ளன.

2025 ஏப்ரல் 5ஆம் தேதி இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரிடம் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 313-ன் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, ஓவ்வொவரிடமும் 50 கேள்விகள் கேட்கப்பட்டனர். இதற்கு அவர்கள் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தனர். இதன்பிறகு, குறுக்கு விசாரணை என அனைத்து நடவடிக்கைகளும் தீவிரமாக நடந்து முடிந்தது.

இந்த நிலையில், கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வந்த பொள்ளாச்சி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. குற்றம்சாட்டப்பவர்கள் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுவார்கள். இதன்பிறகு கோவை மகிளா நீதிமன்ற நீதிபதி ஆர்.நந்தினி தேவி காலை 10 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறார். இவர் தற்போது கரூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு இருக்கிறார். இந்த வழக்கின் விசாரணையை ஆரம்பத்தில் இருந்தே இவரே கையாண்டு வந்ததால், இந்த வழக்கில் அவரே தீர்ப்பு வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.