வாழ்க்கையை மாற்றும் “கண் திருஷ்டி” பிரச்னை.. கண்டறிவது எப்படி?

வாழ்க்கையில் தடங்கல்கள் ஏற்படும் போது கண் திருஷ்டி பற்றிய பேச்சு மக்களிடத்தில் பரவலாக எழுகிறது. இது பொறாமை அல்லது தீய நோக்கத்தால் ஏற்படும் என்று கருதப்படுகிறது. காலில் வலி, தூக்கமின்மை, குடும்பச் சண்டை, பொருளாதார இழப்பு போன்ற அறிகுறிகள் மூலம் இதை கண்டறியலாம்.

வாழ்க்கையை மாற்றும் “கண் திருஷ்டி” பிரச்னை.. கண்டறிவது எப்படி?

கண் திருஷ்டி பிரச்னை

Updated On: 

14 May 2025 11:23 AM

வாழ்க்கையானது ஒவ்வொருவருக்கும் இன்பம், துன்பம் என இரண்டற கலந்து இருக்கும். அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பது நினைக்க முடியாத அளவுக்கு இருக்கும் வாழ்க்கையானது ஜோதிட சாஸ்திரம், கிரகங்களின் நிலை ஆகியவற்றின் மூலம் ஓரளவு கணிக்கப்பட்டிருக்கும். ஜோதிட சாஸ்திரங்கள் அனைத்தும் வாழ்க்கையில் 100 சதவீதம் மாற்றத்தை உண்டாக்குபவை இல்லை என சொல்லப்பட்டாலும், அது நம்பிக்கையின் வெளிப்பாடாக இருப்பதால் காலத்துக்கும் பின்பற்றப்பட்டு வருகிறது. இப்படியான நிலையில் நாம் சரியான திசையில் முன்னேறி சென்று கொண்டிருக்கும்போது ஏதேனும் தடங்கல், சறுக்கல் வந்தால் உடனே நம் மீது கண் திருஷ்டி இருப்பதாக பெரியவர்கள் சொல்வார்கள். மேலும் அதற்கேற்ப பரிகாரமும் செய்வார்கள். அதனைப் பற்றிய தகவல்களைக் காணலாம்.

கண் திருஷ்டி

சாஸ்திரத்தைப் பொறுத்தவரை கண் திருஷ்டி என்பது ஒருவரின் வளர்ச்சி மற்றும் புகழைப் பார்த்து மற்றவர் கொள்ளும் பொறாமை அல்லது தீய நோக்கத்துடனான பார்வை என சொல்லப்பட்டுள்ளது. இது தனி மனித வாழ்க்கையில் மட்டுமல்லாது தொழில், கல்வி, திருமணம், காதல் என அனைத்திலும் மாற்றத்தை உண்டாக்கக்கூடும். எனவே நாம் இத்தகைய கண் திருஷ்டி விஷயத்தில் கவனமுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கண் திருஷ்டி இருப்பதை கண்டறிவது எப்படி?

நன்றாக செல்லும் வாழ்க்கையில் ஏற்படும் சில பல நடவடிக்கைகள் வைத்து இவற்றை நாம் கணிக்கலாம். கண் திருஷ்டியானது முதலில் காலில் தான் படும் என சொல்வார்கள். நாம் சுறுசுறுப்பாக இயங்க தேவைப்படுவது கால்கள் தான். அப்படியான பட்சத்தில் அடிக்கடி காலில் அடிபடும். உடல் அசதி பெறும். அடிக்கடி தூக்கமின்மையால் வருவது போல கொட்டாவி வந்து கொண்டே இருக்கும். எந்த ஒரு வேலையில் கவனம் இருக்காது. வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களிடையே அடிக்கடி சண்டை வரும்.

மனைவியுடனான தொடர்பில் அடிக்கடி சண்டை, விரிசல் ஆகியவை உண்டாகும். இறை வழிபாட்டில் கூட மனம் செல்லாது. மன உளைச்சல் அதிகமாகும். பொருளாதார ரீதியான இழப்புகள் தொடர்ச்சியாக நிகழும். மருத்துவ செலவுகள் வந்துக் கொண்டே இருக்கும். கெட்ட கனவால் அவதி, இரவில் தூக்கமின்மை பிரச்னை உண்டாகும். தற்கொலை, மற்றவர்களை தாக்க முற்படுவது, எரிந்து விழுவது போன்ற எதிர்மறையான எண்ணங்கள் வந்துக் கொண்டே இருக்கும்.

குழந்தைகளைப் பொறுத்தவரை சாப்பிடாமல் இருப்பது, தொடர்ச்சியாக அழுவது போன்ற பிரச்னைகள் மூலம் நாம் அறிந்துக் கொள்ளலாம். இத்தகைய விஷயங்கள் தொடர்ச்சியாக இருந்தால் உடனே அதுதொடர்பான பரிகாரங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இவை ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு பாணியில் பின்பற்றப்படும் என்பதால் குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களிடம் கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள்.

(ஆன்மிக நம்பிக்கையின்படி இந்த செய்தியில் உள்ள தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)