Panguni Uthiram: பழனியில் சிறப்பாக கொண்டாடப்படும் பங்குனி உத்திரம்.. ஏன் தெரியுமா?

இந்த நாளில் பழனியில் இருந்து சைவ சமயத்தை சேர்ந்தவர்கள் ஈரோடு மாவட்டம் கொடுமுடிக்கு சென்று அங்கு ஓடும் காவிரி நீரை எடுத்து வருவார்கள். பழனியில் போகரால் நிறுவப்பட்டிருக்கும் நவபாசன முருகன் சிலை வெயிலால் சிதைந்து போகாமல் இருக்க அந்த மூலிகைகள் நிறைந்த காவிரி நீரை இந்த பங்குனி உத்திர நாளில் ஊற்றி குளிர்விப்பார்கள்.

Panguni Uthiram: பழனியில் சிறப்பாக கொண்டாடப்படும் பங்குனி உத்திரம்.. ஏன் தெரியுமா?

பழனி முருகன்

Published: 

07 Apr 2025 16:25 PM

பங்குனி உத்திரம் (Panguni Uthiram) என்பது இந்து சமூக மக்களிடையே கொண்டாடப்படும் மிக முக்கியமான ஆன்மிக நிகழ்வாகும் (Spiritual Events). பங்குனி மாதத்தில் வரும் உத்திரம் நட்சத்திரத்தில் இந்த பண்டிகையானது கொண்டாடப்படுகிறது. இந்நாளானது பல்வேறு கடவுள்களின் திருமணங்கள் நடைபெற்ற நாளாக கருதப்படுகிறது. இவ்வளவு ஏன் சிவபெருமான், பார்வதியை மணந்ததும் இந்நாள் தான் என சொல்லப்படுகிறது. தென் மாவட்டங்களில் (South Districts) பங்குனி உத்திரம் குலதெய்வத்திற்குரிய தினமாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் இந்த நன்னாள் முருகப்பெருமானுக்குரிய சிறப்பான தினங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. முருகனுக்கு தமிழ்நாட்டில் அறுபடை வீடுகள் இருக்கும் நிலையில் மூன்றாம் படை வீடான பழனி தான் பங்குனி உத்திரம் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும் இடமாகும்.

2025 ஆம் ஆண்டு பங்குனி உத்திரமனாது ஏப்ரல் 11 ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இப்படியான நிலையில் பழனியில் மட்டும் ஏன் இந்த பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன் வரலாறு என்ன என்பது பற்றி நாம் காணலாம்.

அசுரர்களின் தொல்லைகளை அடக்க நினைத்த முருகப்பெருமான் தனது தந்தை சிவபெருமான், தாய் பார்வதி ஆகியோரை வணங்கி விட்டு தனது பயணத்தை படைகளுடன் தொடங்கினார். செல்லும் வழியில் முருகன் தலைமையிலான படைகளை வழிமறிக்கும் பொருட்டு ஒரு சிறிய மலை பெரிதாக வளர ஆரம்பித்தது. அகத்திய முனிவர் கொடுத்த சாபத்தால் அசையாமல் மலையாகி நின்ற கிரவுஞ்சன் தான் இத்தகைய செயலில் ஈடுபடத் தொடங்கினான்.

தன்னைக் கடந்து செல்பவர்களை ஏமாற்றும் பொருட்டு அவன் தொல்லை தந்து கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. அதே சமயம் அந்த மலை அமைந்துள்ள இடத்திற்கு அருகில் மாயாபுரி பட்டினம் என்ற இடம் உள்ளது. அங்கு சூரபத்மனின் தம்பியான யானை முகம் கொண்ட தாரகாசூரன் ஆட்சி செய்து தேவர்களை மிகுந்த துன்பத்திற்கு உள்ளாகி வருகிறான் என்ற தகவல் நாரதர் மூலமாக முருகனுக்கு தெரிய வருகிறது.

தாரகாசுரனுடன் போர்

இதனைத் தொடர்ந்து அவர் தனது தளபதி வீரபாகுவிடம் படைவீரர்களில் பாதி பேரை அழைத்துக் கொண்டு தாரகாசூரனை அழித்து வரும்படி கட்டளையிடுகிறார். இதனை அறிந்த தாரகாசுரனும் தனது படைகளுடன் புறப்பட்டு வர ஓர் இடத்தில் இரு தரப்புக்கும் இடையே மிகப் பெரிய அளவில் போர் நடைபெறுகிறது.

இந்தப் போரில் யுத்தம் செய்த தாரகாசுரன் முருகப்பெருமான் படை வீரரான வீரகேசரியை முதலில் சாய்த்தார். இதனைக் கண்ட வீரபாகு கோபம் கொண்ட தாரகாசூரனை கடுமையாக தாக்கினான். இதனால் ஆத்திரமடைந்த தாரகாசுரன் தனது திரிசூலத்தால் வீரபாகுவின் மார்பில் குத்தினான் நிலைகுலைந்து போன வீரபாகு சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்து எழுந்து மீண்டும் கடுமையாக தாரகாசூரனை தாக்கினார்.

இதற்கு பதில் தாக்குதல் நடத்த முடியாமல் மிரண்டு போன தாரகாசூரன் தனது மாயவேலைகளை காட்டத் தொடங்கினான். எலியாக மாறி அந்த கிரவுஞ்சன் மலைக்குள் சென்றான். வீரபாகவும் அவனை தொடர்ந்து மற்றவீரர்களும் மலைக்குள் சென்று தேட தாரகாசூரன் முருகப்பெருமானின் படைகளை தாக்கத் தொடங்கினார். இதனை எல்லாம் நாரதர் மூலம் தெரிந்து கொண்ட முருகன் நேரடியாக போர்க்களத்திற்கு வந்து தாரகாசூரனை தாக்கினார்.

ஆனால் தாக்குதலை சமாளிக்க முடியாமல் மீண்டும் எலியாக மாறிய அவன் மலைக்குள் சென்று ஒளிந்து கொண்டான். அவனது தந்திரத்தை அறிந்த முருகப்பெருமான் தனது வேலாயுதத்தை கையில் எடுத்து வீசி எறிந்தார். அந்த வேல் மழையை சுக்குநூறாக உடைந்தது. தாரகாசூரனும் இறந்தார். இதன் பிறகு முருகப்பெருமான் தெய்வானையை மணந்த அந்த நாள்  பங்குனி உத்திர திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. பழனியில் 10 நாள் திருவிழா நடைபெறும் நிலையில் தேரோட்டம் நடைபெறுவது சிறப்பு வாய்ந்ததாகும்.

(இணையத்தில் உலாவும் ஆன்மிக தகவல்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)