Drug Prices : இந்தியாவில் உயரப்போகும் மருந்துகள் விலை.. காரணம் இதுதானா?

India Drug Prices : இந்தியாவில் மருந்துகளின் விலை உயர வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அமெரிக்காவில் மருந்துகளின் விலை 80 சதவீதம் வரை குறைக்க அதிபர் டிரம்ப் முன்வந்துள்ளார். எனவே, அமெரிக்காவில் ஏற்படும் இழப்பை, ஈடுசெய்ய உள்நாட்டிலேயே இந்திய மருந்து நிறுவனங்கள் விலையை உயர்த்தலாம் என கூறப்படுகிறது.

Drug Prices : இந்தியாவில் உயரப்போகும் மருந்துகள் விலை.. காரணம் இதுதானா?

மருந்துகள் விலை

Updated On: 

13 May 2025 10:42 AM

மருந்து விலைகளை குறைக்கும் நோக்கில் அது தொடர்பான உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்தினார். இதனால், அமெரிக்காவில் மருந்துகள் விலை குறைய வாய்ப்புள்ளது. அதே நேரத்தில், இந்தியாவில் மருத்துகள் விலை உயர வாய்ப்புள்ளதாக பொருளதாரா வல்லுநர்கள் கூறுகின்றனர். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக வரி வதிப்பு, விசா முறையில் பல்வேறு மாற்றங்களை செய்து கொண்டு வருகிறார். அந்த வகையில், தற்போது மருந்து விலைகளை குறைக்க அமெரிக்க முன்வந்துள்ளது. பல கட்ட ஆலோசனைக்கு பிறகு, அமெரிக்காவில் விற்கப்படும் மருந்துகளின் விலையை 80 சதவீதம் வரை குறைக்க டிரம்ப் முடிவு செய்துள்ளார். அதற்கான நிர்வாக உத்தரவிலும் கையெழுத்திட்டார். உலக நாடுகளில் விற்பனை செய்வதை விட, குறைவாக மருந்துகள் விற்பனை செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்தியாவில் உயரப்போகும் மருந்துகள் விலை

இதுகுறித்து டிரம்ப் பேசுகையில், “பல ஆண்டுகளாக, அமெரிக்காவில் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் மற்றும் மருந்துகள் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு ஏன் விலையில் அதிகமாக உள்ளன என்பது குறித்து ஆலோசித்தோம். அதே நிறுவன மருந்துகள் மற்ற நாடுகளை விட அமெரிக்காவில் ஐந்து முதல் பத்து மடங்கு அதிகமாக இருக்கும். இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்றார்.

இதனால், இந்தியாவில் மருந்துகள் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்தியாவின் மருந்து ஏற்றுமதியில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கை அமெரிக்கா கொண்டுள்ளது. இது கடந்த நிதியாண்டில் 16 சதவீதம் அதிகரித்தது.

காரணம் என்ன?


இந்தநிலையில், அமெரிக்கா மருந்துகள் விலை குறைப்பதால், இந்தியாவில் மருந்துகள் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. லாபத்தை ஈட்டும் நோக்கில், இந்திய மருந்து நிறுவனங்கள் உள்நாட்டில் மருந்து விலைகளை இந்தியா அதிகரிக்கலாம். இதுகுறித்த பேசிய உலக வர்த்தக மற்றும் ஆராய்ச்சி தலைவர் அஜய் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், “அமெரிக்காவின் இந்த நடவடிக்கையில் உலக நாடுகளின் மருந்துகளின் விலையில் பெரும் மாற்றம் ஏற்படலாம்” என்றார்.

எனவே, இந்தியா மட்டுமின்றி, மற்ற நாடுகளிலும் மருந்துகள் விலையில் மாற்றம் ஏற்படலாம். எந்த நாடுகள் எல்லாம் அமெரிக்காவில் அதிகபட்டியான மருந்துகளை ஏற்றுமதி செய்கிறதோ, அந்த நாடுகளில் மருந்து விலையில் மாற்றம் ஏற்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.