NEET PG 2025: முதுகலை மருத்துவப்படிப்பு..! சீட் பிளாக் செய்வதை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
NEET PG Seat Blocking: உச்சநீதிமன்றம், நீட் PG முதுகலை மருத்துவப் படிப்பில் இடங்களை முன்கூட்டியே பிளாக் செய்வதைத் தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. கல்லூரிகள் கட்டண விவரங்களை வெளியிட வேண்டும், தேசிய அளவிலான கவுன்சிலிங் அட்டவணை செயல்படுத்தப்படும் எனவும், இடப் பிடிப்புக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. இதில் ஆதார் அட்டை அடிப்படையிலான கண்காணிப்பு முறையும் அறிமுகம் செய்யப்படும்.

டெல்லி, மே 22: முதுகலை மருத்துவப்படிப்பில் (NEET PG) முன்கூட்டியே மருத்துவ சீட்கள் பிளாக் செய்யப்படுவதை தடுக்க உச்சநீதிமன்றம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அவ்வாறு செய்யும் வேட்பாளர்கள் வரவிருக்கும் தேர்விலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் உச்சநீதிமன்றம் (Supreme Court) எச்சரிக்கை விடுத்துள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே.பி.பர்திவாலா மற்றும் நீதிபதி ஆர். மகாதேவன் அமர்வு முதுகலை மருத்துவப்படிப்பு தொடர்பான வழக்கை விசாரித்தபோது, அதிக எண்ணிக்கையிலான முதுகலை மருத்துவ இடங்கள் பிளாய் செய்யப்பட்டு, பின்னர் காலியாக இருப்பது குறித்து கவலை தெரிவித்தனர்.
உச்சநீதிமன்றம் அறிவுரை:
இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் கூறியதாவது, மருத்துவக் கல்லூரி கவுன்சிலிங் தொடங்குவதற்கு முன்பு அனைத்து கட்டணங்கள் தொடர்பான தகவல்களை பகிரங்கப்படுத்த வேண்டும். மருத்துவ சீட்டுகள் பிளாக் செய்யப்படுவதை தடுக்க, வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க வேண்டும் என்றும், காலக்கெடு செயல்முறை உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்தது. மேலும், கவுன்சிலிங் செயல்முறையின் நியாயத்தைப் பராமரிக்க மத்திய அரசும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கூறியது.
வழிகாட்டு நெறிமுறை வெளியீடு:
- அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் மாநில அளவிலான சுற்றுகளை சீரமைக்கவும், சீட் பிளாக் செய்வதை தடுக்கவும் தேசிய அளவிலான கவுன்சிலிங் அட்டவணை செயல்படுத்தப்படும்.
- அனைத்து மருத்துவ தனியார்/ நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் கல்விக் கட்டணம், விடுதி, பாதுகாப்பு கட்டண வைப்புத்தொகை மற்றும் இதர கட்டணங்கள் பற்றிய விவரங்களை வெளியிட்டு, ஆலோசனை கட்டணம் கட்டாயமாக்கப்படும்.
- தேசிய மருத்துவ ஆணையத்தின் (NMC) கீழ் ஒரு மையப்படுத்தப்பட்ட கட்டண ஒழுங்குமுறை கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.
- புதிய விண்ணப்பதாரர்களுக்கான கவுன்சிலிங்கை மீண்டும் திறக்காமல், முதலில் தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்களை சிறந்த இடங்களுக்கு மாற்ற, சுற்று 2க்குப் பிறகு மேம்படுத்தல் சாளரம் அனுமதிக்கப்பட வேண்டும்.
- சீட் பிளாக் செய்யும் முறைக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும். அதில் டெபாசிட் செய்யப்பட்ட பாதுகாப்பு கட்டணம் பறிமுதல் செய்யப்படும். அவ்வாறு செய்யும் வேட்பாளர்கள் எதிர்கால NEET-PG தேர்வுகளில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும். இதற்கு உடந்தையாக ஈடுபட்ட கல்லூரிகளை கருப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
- ஆதார் அட்டை அடிப்படையிலான இருக்கை கண்காணிப்பு செயல்படுத்தப்பட வேண்டும்.
சீட் பிளாக் செய்வது என்றால் என்ன..?
நீட் முதுகலை கவுன்சிலிங்கில் பிளாக் சீட் என்பது, விண்ணப்பதாரர்கள் தற்காலிகமாக இடங்களை ஏற்றுக்கொண்டு, பின்னர் வேறு ஒரு இடத்தில் இடம் கிடைத்த பிறகு அவற்றைக் கைவிடும்போது ஏற்படுகிறது. இது முந்தைய சுற்றுகளில் காலியாக இருக்கும் இடங்களை அடைக்கும்போது, குறைந்த விருப்பத்தேர்வுகளுக்கு உறுதியளித்திருக்கக்கூடிய உயர் மதிப்பெண் பெற்ற வேட்பாளர்களுக்கு பாதகமாகிறது. மாநில கவுன்சிலிங்கில் ஏற்படும் தாமதங்கள், கடைசி நேரத்தில் இடங்கள் சேர்க்கப்படுதல் அல்லது நீக்கப்படுதல், ஒதுக்கீட்டுப் பிரிவுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாமை ஆகியவை சிக்கலை மேலும் அதிகரிக்கின்றன.