Peanuts : தினமும் ஊறவைத்த வேர்க்கடலையை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?
Peanuts Health Benefits : பாதாம், வால்நட் போன்ற விலையுயர்ந்த பொருட்களை விட மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் வேர்க்கடலையில் உடலுக்கு நன்மை பயக்கும் பல சத்துகள் நிறைந்துள்ளன. குறிப்பாக தினமும் நீரில் ஊற வைத்த வேர்க்கடலையை சாப்பிடும்போது அவை சரும பிரச்னைகளை சரி செய்வது, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவது போன்ற பல நன்மைகள் அடங்கியுள்ளன.

மாதிரி புகைப்படம்
வேர்க்கடலையில் உள்ள இயற்கை கொழுப்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகின்றன. நீங்கள் அவற்றை தண்ணீரில் ஊறவைத்து உட்கொண்டால், அவை எளிதில் ஜீரணமாகி, விரைவான ஆற்றலை அளிக்கும். இவை கடின உழைப்பு செய்பவர்களுக்கு நல்ல ஆற்றல் தரும் உணவாகச் செயல்படுகின்றன. வேர்க்கடலையில் உள்ள பொட்டாசியம், இரும்பு, துத்தநாகம், செலினியம், தாமிரம் மற்றும் கால்சியம் போன்ற பல தாதுக்கள் நிறைந்துள்ளன. இவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை சமநிலைப்படுத்தவும் உதவுகின்றன.
நீரில் ஊறவைத்த வேர்க்கடலையை நாம் தினமும் சாப்பிடுவதால், அவை நமது உடலில் உள்ள தசைகளை வலுப்படுத்தும் தன்மை கொண்டது. இவை தசைச் சிதைவைத் தடுக்க உதவுகின்றன. எனவே உடற்பயிற்சி செய்பவர்களுக்கு அவற்றின் பயன்பாடு அதிக நன்மை பயக்கும். காலையில் ஊறவைத்த வேர்க்கடலையை சாப்பிடும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் மூளை மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். இவற்றில் உள்ள வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள் மூளை செல்களுக்கு உணவாகச் செயல்படுகின்றன. இதன் விளைவாக, நினைவாற்றல் மேம்படுகிறது.
சரும ஆரோக்கியம் மேம்படும்
வேர்கடலையை ஊறவைத்து சாப்பிடுவது சரும பிரச்னைகளை சரி செய்யும், முடி ஆரோக்கியமாக வளர உதவும். இவை உடலில் இருந்து ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்ற உதவுகின்றன. எனவே, விரைவில் வயதாவதை இது தாமதமாக்கும். வேர்க்கடலையில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் எலும்பு வலிமையை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. வயதுக்கு ஏற்ப ஏற்படும் எலும்பு பலவீனத்தைக் குறைப்பதற்கான இயற்கையான தீர்வு இது.
நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது
ஊறவைத்த வேர்க்கடலையை வெல்லத்துடன் கலந்து சாப்பிடுவது முதுகு வலியிலிருந்து நிவாரணம் அளிக்கும். வெல்லத்தில் உள்ள இயற்கையான சத்துக்கள் வேர்க்கடலையுடன் சேரும்போது அதை ஒரு நல்ல இயற்கை மருந்தாக மாற்றுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு ஊறவைத்த வேர்க்கடலை ஒரு வரப்பிரசாதமாக செயல்படுகிறது. இவை இரத்த சர்க்கரை அளவை சம நிலைப்படுத்த உதவுகின்றன. இதன் குறைந்த கிளைசெமிக் குறியீடு காரணமாக, நீரிழிவு கட்டுப்பாட்டுக்கான இயற்கை சிகிச்சையாக இதைக் கருதலாம்.
பல ஊட்டச்சத்துக்களின் நிறைந்த வேர்க்கடலையை, ஊறவைத்து சாப்பிடுவதால் அது உடலுக்கு அதிக நன்மைகளை வழங்குகின்றன. பாதாம் போன்ற விலையுயர்ந்த பொருட்களைக் காட்டிலும் விலை குறைவாக கிடைக்கும் வேர்க்கடலையில் அதிக நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன. எனவே தினமும் காலையில் ஒரு சிறிய அளவு எடுத்துக்கொள்வது உங்கள் ஆரோக்கியத்தை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், பல நோய்களைத் தடுக்கவும் உதவும்.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)