TV9 Tamil NewsHealth > Foods to Avoid for Bloating and Simple Ways to Prevent It
வயிறு உப்புசத்தால் பிரச்னைகளை எதிர்கொள்கிறீர்களா? தவிர்ப்பது எப்படி ?
Avoid Bloating Naturally : வயிற்று உப்புசம், வாயு பிரச்னை மற்றும் செரிமான கோளாறுகள் போன்றவை தவறான உணவுப் பழக்கங்கள், மசாலா மற்றும் உப்பு அதிகமாக சேர்க்கப்பட்ட உணவுகளால் ஏற்படக்கூடும். முக்கியமான நேரங்களில் இது பிரச்னைகளை ஏற்படுத்தும். இந்த நிலையில் இதனை தவிர்ப்பது எப்படி என பார்க்கலாம்.
நமது உணவில் மசாலாப் பொருட்களுக்கு ஒரு சிறப்பு இடம் உண்டு. அவை உணவுக்கு சுவையையும் நறுமணத்தைத் தருகின்றன. மசாலாவில் (Masala) சேர்க்கப்படும் பொருட்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், அதிகப்படியான நுகர்வு வாயு பிரச்னை, வயிற்று வலி மற்றும் அமிலத்தன்மைக்கு காரணமாக அமைந்துவிடும். உணவில் அதிகப்படியான உப்பு (Salt) சேர்ப்பதும் இதேபோன்ற சூழ்நிலையை உருவாக்குகிறது. சில உணவுகளை சாப்பிட்ட பிறகு வயிறு உப்புசமாகவும், அசௌகரியமாகவும் இருப்பது இயல்பானது. சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது, மோசமான உணவுப் பழக்கம் மற்றும் பல விஷயங்களால் ஏற்படலாம். ஆனால் அவற்றைத் தடுக்க சில எளிய வழிகள் உள்ளன. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
வயிற்று உப்புசத்தைத் தவிர்க்க எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்
சாம்பாரில் அதிக காய்கறிகள் சேர்க்கப்படுவதால் அதில் நமக்கு தேவையான அளவு நார்ச்சத்தும் கிடைத்து விடும். ஆனால் சிலருக்கு சாம்பார் சாப்பிடுவதால் வயிறு உப்புசம் ஏற்படும். பூசணிக்காய் ஒரு குளிர்ச்சியான மற்றும் காரத்தன்மை கொண்ட காய்கறி. சாம்பாரில் பூசணிக்காயைச் சேர்ப்பதன் மூலம், அது குடல்களை அமைதிப்படுத்தவும், செரிமான முறையை விரைவுபடுத்தவும் உதவுகிறது.
பச்சை பீன்ஸ் சாப்பிட்ட பிறகு சிலருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகும். கொண்டக்கடலையில் ஒலிகோசாக்கரைடுகள் இருப்பதால் அவை ஜீரணிக்க கடினமாக இருக்கும். அதனால் வயிற்றில் ஏற்படும் அமிலத்தன்மையைத் தவிர்க்க சமைக்கும் போது அல்லது அதனை ஊறவைக்கும் போது கொத்தமல்லி மற்றும் மிளகு போன்ற மசாலாப் பொருட்களைச் சேர்க்கவும். இந்த மசாலாப் பொருட்கள் அனைத்தும் செரிமான செயல்முறையைத் தூண்டி குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
வீட்டில் சமைத்த உணவுகள் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது. சரியான பொருட்களைப் பயன்படுத்தி அதைத் தயாரிப்பதில் கவனமாக இருக்க வேண்டும். எனவே, உணவை சமைக்கும்போதும் உண்ணும்போதும் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். வேகமாக சாப்பிடுவதால், உணவோடு காற்றையும் விழுங்க நேரிடும். இது வயிற்றில் வாயு தொல்லையை அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கும்.
உணவுக்கு சுவையையும் நறுமணத்தையும் அளிக்கும் மசாலாப் பொருட்கள் நம் பாரம்பரியத்தின் ஒரு முக்கிய அங்கமாக இருந்தாலும், அவற்றை அதிக அளவை எடுத்துக்கொள்ளும்போது பக்க விளைவுகளையும் சந்திக்க நேரிடும். வயிறு உப்புசம், வாயு பிரச்னை, செரிமானக் கோளாறுகள் ஆகிய பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். எனவே, உணவை சமைக்கும் முறையிலும், பயன்படுத்தும் பொருட்களிலும் கவனமாக இருக்க வேண்டும்.
நமக்கு ஏற்ற உணவுப் பழக்கங்களை கடைபிடிப்பதன் மூலம் மட்டுமே உடல்நலத்தை பாதுகாக்க முடியும் . மிதமான அளவில் மசாலாப் பொருட்கள், நார்ச்சத்து அதிகமான காய்கறிகள், சரியான நேரத்தில் சாப்பிடுவது, மெதுவாக உண்பது போன்ற எளிய பழக்கங்களை மேற்கொள்வதன் மூலம் நாம் வயிற்று சம்பந்தமான பிரச்சனைகளை முற்றிலும் தவிர்க்க முடியும்.