மாமன் படத்திற்கு மற்றவர்களின் கதையை தேர்வு செய்யாததற்கு இதுதான் காரணம் – சூரி விளக்கம்

Actor Soori: நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள படம் மாமன். மே மாதம் 16-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் கதை குறித்தும் மற்றவர்களின் கதையை தேர்வு செய்யாததற்கு காரணம் என்ன என்பது குறித்தும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

மாமன் படத்திற்கு மற்றவர்களின் கதையை தேர்வு செய்யாததற்கு இதுதான் காரணம் - சூரி விளக்கம்

மாமன்

Updated On: 

08 May 2025 18:29 PM

நடிகர் சூரி (Actor Soori_ நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் மாமன். தாய் மாமன் மற்றும் மருமகனின் பாசத்தை மையமாக வைத்து உருவான இந்தப் படம் மே மாதம் 16-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை விமல் நடிப்பில் வெளியான விலங்கு என்ற வெப் சீரிஸின் மூலம் பிரபலமான இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி (Aishwarya Lekshmi) நடித்துள்ளார். மேலும் சூரியின் அக்காவாக லப்பர் பந்து படத்தில் நடித்து பிரபலமான சுவாசிகா நடித்துள்ளார். அப்பாவாக ராஜ்கிரணும் அக்கா கணவராக டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் போஸ்டர் வெளியானதில் இருந்தே ஒரு ஃபேமிலி செண்டிமெண்ட் படம் வரப்போகிறது என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

அந்த வகையில் சமீபத்தில் படத்தின் ட்ரெய்லர் வெளியானது. அதில் நடிகர் சூரி என் பெத்தாரே என்று தனது அக்காவின் வயிற்றில் இருக்கும் குழந்தையை கொஞ்சிக்கொண்டே நீ பொறந்ததும் இந்த தாய் மாமாதான் உன்ன முதல்ல தூக்குவேன். நான் தான் உன்ன வளப்பேன். உனக்கு எல்லாமே நான் தான் செய்வேன் என்று கூறுகிறார்.

அதே போல குழந்தை பிறந்ததும் அந்த குழந்தைக்கு சூரி தான் அனைத்தையும் செய்வது போல ட்ரெய்லரில் காட்டப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க ஃபேமிலி செண்டிமெண்டை அடிப்படையாக கொண்ட இந்தப் படத்தின் கதையை நடிகர் சூரி தான் எழுதியுள்ளார். தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகம் ஆகி பின்பு நாயகன் அவதாரம் எடுத்தார்.

தற்போது நாயகன் அவதாரத்தில் இருந்து நடிகர் சூரி திரைக்கதை ஆசிரியராகவும் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த நிலையில் ஏன் மற்றவர்களின் கதைகளில் நடிக்காமல் தானே கதையை எழுதி நடித்ததாக நடிகர் சூரி சமீபத்தில் பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, விடுதலை, கொட்டுக்காளி, கருடன் என தொடர்ந்து இறுக்கமான படங்களிலேயே நடித்து வந்தேன்.

அதனால் ஒரு ஜாலியான கதையில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் பலரும் வந்து கதை கூறியபோது அதில் எதுவும் எனக்கு பிடித்த மாதிரி இல்லை. இந்த நிலையில் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் எனக்கு நீண்ட நாட்களாகவே தெரியும். அவர் என்னிடம் ஒரு கதை கூறினார். அது அவ்வளவாக எனக்கு செட்டாகவில்லை. பிறகு நான் அவருக்கு இந்த கதையை கூறினேன். அவருக்கு பிடித்துபோனது. பிறகு இந்தப் படத்தை எடுத்தோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மாமன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்திற்கு தணிக்கை குழு சான்றிதழ் வழங்கியுள்ளது. அதன்படி படத்திற்கு U சான்றிதழ் கிடைத்துள்ளது. இதனைப் படக்குழு தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.