சென்னை: சுவர் கட்ட பள்ளம் தோண்டும்போது கிடைத்த வெடிகுண்டு…
WWII Ordnance Found in Chennai: சென்னை எண்ணூரில் வீட்டு கட்டுமானப் பணியின்போது, இரண்டாம் உலகப் போர் காலத்து பீரங்கி வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. முஸ்தபா என்பவரின் வீட்டு மதில் அமைக்கும் பணியின் போது தொழிலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வெடிகுண்டு, 1940-களில் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படுகிறது.

சென்னை எண்ணூரில் பழங்கால வெடிகுண்டு கண்டெடுப்பு
சென்னை மே 22: சென்னை எண்ணூரில் (Chennai Ennore) வீட்டு கட்டுமான பணிக்காக பள்ளம் தோண்டியபோது, இரண்டாம் உலகப்போர் காலத்திய பீரங்கி வெடிகுண்டு (World War II-era artillery shell) ஒன்று துருப்பிடித்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இது முஸ்தபா என்பவருக்கு சொந்தமான இடத்தில் நடந்தது. மர்ம பொருளை பார்த்த அவர் போலீசில் புகார் அளித்தார். அதனை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் வந்து பரிசோதனை செய்தனர். குண்டு 1940-களில் பயன்படுத்தப்பட்டதாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டாம் உலகப்போர் கால பீரங்கி குண்டு கண்டுபிடிப்பு
சென்னை எண்ணூரில், இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் வீசியதாக கூறப்படும் பீரங்கி வெடிகுண்டு ஒன்று, வீட்டு கட்டுமான பணிக்காக பள்ளம் தோண்டியபோது துருப்பிடித்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மண்ணடியைச் சேர்ந்த முஸ்தபா (வயது 52), எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் 5-வது குறுக்குத்தெருவில் பழைய வீடு ஒன்றை வாங்கி, குடியேறும் நோக்கத்தில் மராமத்து பணிகளில் ஈடுபட்டார்.
வடமாநிலத்தை சேர்ந்த மூன்று தொழிலாளர்கள் பள்ளம் தோண்டும் வேலையில் ஈடுபட்டிருந்தனர். வீட்டு மதில் சுவர் அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டியபோது, சுமார் ஒன்றரை அடி ஆழத்தில், உரல் போன்ற அமைப்பில் ஒரு துருப்பிடித்த மர்ம பொருள் கிடைத்தது.
வெடிபொருளாக இருக்கக்கூடும் என சந்தேகம்
இந்த தகவலை தொழிலாளர்கள் உரிமையாளர் முஸ்தபாவிடம் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த முஸ்தபா அந்த பொருளை பார்த்து, புகைப்படம் எடுத்து வலைதளங்கள் வாயிலாக அதைப் பற்றி தகவல்கள் தேடினார். வெடிபொருளாக இருக்கக்கூடும் என சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, எண்ணூர் காவல்துறையிடம் புகார் அளித்தார்.
பீரங்கி குண்டு என்பது உறுதியானது
தகவலறிந்து விரைந்த எண்ணூர் காவல் ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையில் போலீசார், அந்த பொருளை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். அதில், அது பீரங்கி குண்டு என்பது உறுதியானது. பின்னர், ஆவடி வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவின் உதவி ஆய்வாளர் சண்முகம் மற்றும் அவரது குழுவினர் வந்து சிறப்பு பரிசோதனை மேற்கொண்டனர். வருவாய் துறை அதிகாரிகளும், திருவொற்றியூர் தாசில்தார் சகாயராணி அங்கு வருகை தந்து கண்காணிப்பு மேற்கொண்டனர்.
தொடரும் மேலதிக விசாரணை
ஆய்வின் போது, இது இரண்டாம் உலகப்போரின்போது, 1940களில் பயன்படுத்தப்பட்ட பீரங்கி குண்டாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது. இதன் நீளம் 61 செ.மீ. மற்றும் எடை சுமார் 16 முதல் 20 கிலோ வரை இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. சம்பவ இடத்தருகே பழைய இரும்புப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை இருந்ததாகவும், அந்தக் குண்டு அடையாளம் தெரியாத சிலரால் அங்கு போடப்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்றும், காலப்போக்கில் அது மண்ணில் புதைந்து விட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மேலதிக விசாரணை நடந்து வருகிறது.