இனி வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்பா..? வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா எச்சரிக்கை!

Tamil Nadu Weather Update: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக அனல் காற்றுக்கு பதிலாக மிதமான முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் இன்று அதிகாலை முதல் மழை பெய்கிறது. மே 21 அன்று அரபிக்கடலில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது. இதனால் மே 22 அன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வடக்கு நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோயம்புத்தூர் மலைப்பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இனி வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்பா..? வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா எச்சரிக்கை!

மழை நிலவரம்

Published: 

19 May 2025 16:55 PM

சென்னை, மே 19: கோடைக்காலத்திலும் கூட தமிழ்நாட்டில் (Tamil Nadu Weather) கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையை பொறுத்தவரை (Chennai Rains) நேற்று அதாவது 2025 மே 18ம் தேதி வரை வெயில் சுட்டெரித்த நிலையில், 2025 மே 19ம் தேதியான இன்று அதிகாலை முதல் வெயில் தாக்கம் குறைந்து மழை பெய்தது. கர்நாடக கடலோர பகுதிகளை அடுத்த மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வருகின்ற 2025 மே 21ம் தேதியில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, வருகின்ற 2025 மே 22ம் தேதியில் அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்றும், இதன்பிறகு இது வடக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடைய கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில், இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையத்தில் இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா செய்தியாளர்களை சந்தித்து, கோயம்புத்தூர் மாவட்டம் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்தார்.

இனி வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்பா..?

சென்னை வானிலை ஆய்வு மையத்தில் இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, “தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மார்ச், ஏப்ரல், மே என இன்று வரை என பெய்த கோடை மழையானது 192. 7 மி.மீட்டர். பொதுவாக இயல்பு நிலை என்பது 101.4 மி.மீட்டர் ஆகும். இது சராசரி நிலையை விட 90 சதவீதம் அதிகம். கடந்த சில நாட்களாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் ஏதோ ஒரு பகுதியில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, இது இயல்பை ஒட்டி அதிகமாக பதிவாகியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் உள்ள ரிஷிவந்தியம் 14 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. கள்ளக்குறிச்சி, நாமக்கல், கடலூர், தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்துள்ளது.

கனமழை எச்சரிக்கை என்று பார்க்கும்போது, 2 நாட்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 2025 மே 19ம் தேதியான இன்று கோயம்புத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பூர், ஈரோடு கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பத்தூர் ,வேலூர் ராணிப்பேட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் விருதுநகர் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

2025 மே 20ம் தேதியான நாளை நீலகிரி மாவட்டத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம். கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.” என்றார்.