போர் பதற்றம் காரணமாக சென்னையில் 10 விமானங்கள் ரத்து..!
Chennai Flights Cancelled: இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பதற்றத்தின் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வான்வெளி கட்டுப்பாடுகளால் 5 புறப்படும் மற்றும் 5 வருகை விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மும்பை, சண்டிகர், சிவமுகா, ஹிண்டன் போன்ற இடங்களுக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் 10 விமானங்கள் ரத்து
சென்னை மே 08: இந்தியா–பாகிஸ்தான் (Chennai – Pakistan War Tension) எல்லையில் நிலவும் போர் பதற்றத்தை தொடர்ந்து, வான் மண்டல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் இன்று சென்னை விமான நிலையத்தில் (Chennnai Airport) இருந்து புறப்படும் ஐந்து விமானங்களும், வரவுள்ள ஐந்து விமானங்களும் மொத்தம் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரத்து செய்யப்பட்ட விமானங்களில் சில நேரடி சேவைகளாகவும், சில இணைப்பு விமானங்களாகவும் இருந்தன. பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயணிகள் விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு நிலையை உறுதி செய்த பின்னர் பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பயணிகள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்
இந்தியா–பாகிஸ்தான் எல்லையில் ஏற்பட்டுள்ள தீவிர போர் பதற்றம் காரணமாக விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலளிக்க இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்துள்ளது. இதில் 70க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் கடுமையான பதிலடி அளிக்க முடிவு செய்த நிலையில், எல்லைப் பகுதியில் நிலவும் பதற்றம் அதிகரித்துள்ளது.
போர் பதற்றம் காரணமாக சென்னையில் 10 விமானங்கள் ரத்து
இந்த சூழ்நிலையில், பாதுகாப்பு நடவடிக்கையாக இந்திய அரசு பல வான் மண்டலங்களில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன் நேரடி விளைவாக, இன்று சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய ஐந்து விமானங்களும், சென்னைக்கு வரவிருந்த ஐந்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பாதிக்கப்படும் விமானங்கள்
ரத்து செய்யப்பட்ட புறப்பாட்டு விமானங்கள்: ஹிண்டன் (காசியாபாத் அருகே), மும்பை (2 விமானங்கள்), சண்டிகர் மற்றும் சிவமுகா.
ரத்து செய்யப்பட்ட வருகை விமானங்கள்: மும்பை (2), சண்டிகர், சிவமுகா மற்றும் ஹிண்டன் ஆகிய இடங்களில் இருந்து வரவிருந்தவை.
பாதுகாப்பு நடவடிக்கையாக ரத்து:
இந்த விமானங்களில் சில நேரடியாக வான் மண்டல கட்டுப்பாட்டு பகுதிகளுக்குச் செல்ல வேண்டியவையாக இருந்தன; சிலர் பிற நகரங்கள் வழியாக இணைப்பு விமானங்களாக இருந்தன. எல்லையோரம் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இவை அனைத்தும் பாதுகாப்பு கருதி முன்கூட்டியே ரத்து செய்யப்பட்டுள்ளன.
பயணிகளுக்கு அறிவுறுத்தல்:
விமானத்தில் பயணம் திட்டமிட்டுள்ளவர்கள், தங்களது பயணத்தை மேற்கொள்வதற்கு முன் விமான நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு தற்போதைய நிலையை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மறு அறிவிப்பு வரும் வரை இந்த நடவடிக்கைகள் தொடரும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வகையில், போர் சூழ்நிலையின் தாக்கம் நகர விமான நிலையங்களிலும் நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.