முன்கூட்டியே தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. எங்கெல்லாம் மழை பொழிவு இருக்கும்?
Southwest Monsoon: அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இன்று (மே 13, 2025) தென் மேற்கு பருவமழை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கும் மழை இந்த ஆண்டு முன்னதாகவே தொடங்குகிறது. மேலும் இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட அதிகப்படியான மழை இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கோப்பு புகைப்படம்
அந்தமான் கடல், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவு, தெற்கு வங்க கடல் பகுதிகளில் இன்று (மே 13, 2025) தென்மேற்கு பருவ மழை தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவ மழைகளில் இரண்டு வகைப்படும் அவை தென்மேற்கு பருவமழை, வட கிழக்கு பருவமழை ஆகும். தென்மேற்கு பருவமழை தான் இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களுக்கு அதிகப்படியான மழைப்பொழிவை தருகிறது. இந்த தென்மேற்கு பருவ மழை என்பது ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். பொதுவாக ஜூன் மாதம் தொடங்கும் இந்த தென்மேற்கு பருவ மழையானது இந்த ஆண்டு முன்கூட்டியே இன்று தொடங்கியுள்ளது.
தென்மேற்கு பருவ மழை:
தென்மேற்கு பருவ மழை காலத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழைப்பொழிவு அதிகரித்து காணப்படுவதால் அணைகள் மற்றும் பெரும்பாலான நீர் தேவையை இந்த பருவமழை பூர்த்தி செய்கிறது. அந்தமான் நிக்கோபார் தீவுகளில் தொடங்கும் பருவமழை படிப்படியாக குமரிமுனை கேரளா வட மாநிலங்களுக்கு நோக்கி செல்லும். கோடை காலம் தொடர்ந்து தொடங்கும் முதல் பருவம் மழை என்பதால் இந்த தென்மேற்கு பருவ மழை மீது எப்போதும் எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருக்கிறது. கடந்த ஆண்டு அதாவது 2024 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை ஆனது சற்று தாமதமாக ஜூன் முதலாம் வாரத்தில் தொடங்கியது.
தென்மேற்கு பருவமழை தொடங்கிய முதலே கேரளா மாநிலம், டெல்டா மாவட்டங்கள், வட மாநிலங்களில் அதிகப்படியான மழைப்பொழிவு இருக்கும். ஆனால் இந்த தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட அதிகமாகவே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பொறுத்த வரையில் தென்மேற்கு பருவ மழை அந்த அளவிற்கு பயனளிக்காது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு வடக்கிழக்கு பருவ மழை தான் அதிகப்படியான மழை பொழிவை கொண்டு வரும். தென்மேற்கு பருவ மழை முக்கியமாக டெல்டா மாவட்டங்களில் நல்ல மழைப்பொழிவை தரும். இந்நிலையில் மே 13, 2025 ஆம் தேதியான இன்று தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மழை எப்படி இருக்கும்?
இது ஒரு பக்கம் இருக்க மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பலத்த காற்றுடன் அதாவது மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மே 14 2025 அன்று நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவ மழை இன்று தொடங்க இருக்கும் நிலையில் நாளை முதல் தமிழகத்தில் படிப்படியாக மழைப்பொழிவு அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது
மழைப்பொழிவு ஒரு பக்கம் இருந்தாலும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை என்பது இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக பதிவாகக்கூடும் எனவும் இதன் காரணமாக வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் அதிகபட்ச வெப்பநிலை என்பது 38 முதல் 39 டிகிரி செல்சியஸ் வரையும் குறைந்தபட்ச வெப்பநிலை என்பது 29 முதல் 30 டிகிரி செல்சியஸ் வரையும் இருக்கக்கூடும்.