மோசடி வழக்கில் சிக்கிய நடிகை அருணா மற்றும் அவரது கணவர்.. வீட்டில் அமலாக்கத்துறை சோதனை..
Actress Aruna: ஆஸ்பயர் ஃபிட்னஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் தல்வால்கர்ஸ் ஹெல்த் கிளப் பிரைவேட் லிமிடெட் மும்பை, நாசிக் மற்றும் புனே நகரங்களில் 20 ஜிம்களைத் திறப்பதற்காக சிரியன் கத்தோலிக்க வங்கியிடமிருந்து கடன் பெற்றன. இதில் மோசடி நடைபெற்றதாக கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கோப்பு புகைப்படம்
சென்னை, ஜூலை 9, 2025: கல்லுக்குள் ஈரம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அருணா மற்றும் அவரது கணவர் தொழிலதிபர் மன்மோகன் குப்தா தொடர்பான நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியா முழுவதும் உடற்பயிற்சி கூடங்கள் ஹெல்த் கிளப்புகள் அமைத்த தல்வால்கர்ஸ் குழுமத்தின் வங்கி மோசடியில் தொடர்பு உள்ளதால் இந்த அமலாக்கத்துறை சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்மோகன் குப்தா மற்றும் நடிகை அருணா ஜிம் பாக் பிட்னஸ் சிஸ்டம் என்ற நிறுவனத்தின் இயக்குனர்கள் ஆவர்.
வழக்கு பின்னணி என்ன?
உடற்பயிற்சி கூடங்களுக்கு தேவையான உபகரணங்களை சப்ளை செய்யும் இந்த நிறுவனம் தல்வால்கர்ஸ் குழுமத்திற்கு அவர்கள் உருவாக்கிய உடற்பயிற்சி கூடங்களுக்கு உபகரணங்களை சப்ளை செய்ததாக கூறி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையில், தல்வால்கர்ஸ் குழுமம் சிரியன் கத்தோலிக் வங்கியில் வாங்கிய கோடிக்கணக்கான ரூபாய் வங்கி கடனை சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்துள்ளது.
அதனை மீண்டும் தங்கள் குழுமத்திற்கு பணத்தை பெற்றுக் கொள்ளும் வகையில் ஜிம் பாக் பிட்னஸ் சிஸ்டம் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனமும் நித்தாஷ் இன்ஜினியரிங் கன்சல்டிங் நிறுவனமும் உதவியது தெரியவந்துள்ளது. 28.40 கோடியை ஜிம்பாக் ஃபிட்னஸ் சிஸ்டம் மற்றும் நிதாஷ் இன்ஜினியரிங் அண்ட் கன்சல்டிங்கிற்கு மாற்றப்பட்டு மீண்டும் தல்வால்கர்ஸ் குழுமத்துக்கே சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக விசாரணையில் அம்பலமானது.
4 குற்றப்பிரிவுகளின் கீழ வழக்கு பதிவு:
ஆஸ்பயர் ஃபிட்னஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் தல்வால்கர்ஸ் ஹெல்த் கிளப் பிரைவேட் லிமிடெட் ஆகியவை 2018 ஆம் ஆண்டில் மும்பை, நாசிக் மற்றும் புனே நகரங்களில் 20 ஜிம்களைத் திறப்பதற்காக சிரியன் கத்தோலிக்க வங்கியிடமிருந்து கடன் பெற்றன. வங்கியில் இருந்து மோசடியாக கடன் பெற்று, அந்த நிதியை வேறு நோக்கத்திற்காகப் பயன்படுத்தியதாக தல்வால்கர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு மும்பை பொருளாதார குற்றப்பிரிவில் நான்கு வழக்குகள் பதிவு செய்தது.
இந்த ஹெல்த் கிளப் சங்கிலி தற்போது மொத்தம் ரூபாய் 450 கோடி கடன் திருப்பிச் செலுத்தாமல் பல்வேறு வங்கிகளை மோசடி செய்ததாக அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படையில் தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அருணா மற்றும் மோகன் குப்தாவின் வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.