Guru Peyarchi 2025: மிதுன ராசிக்கு செல்லும் குரு பகவான்.. நடக்கப்போகும் மாற்றம் என்ன?
2025-ம் ஆண்டு மே மாதம் 11 அல்லது 14-ம் தேதி நடைபெறும் குரு பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத செலவுகள், குடும்பத்தில் சிறு பிரச்சனைகள் ஏற்படலாம். ஆனால், தொழில் வாழ்க்கையில் அமோக முன்னேற்றம், சம்பள உயர்வு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு போன்ற நல்ல செய்திகள் காத்திருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

ஜோதிடத்தை பொருத்தவரை கிரகங்களின் பெயர்ச்சி மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. நவகிரகங்களில் ஒன்றான குரு ஒவ்வொரு ஆண்டும் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைந்து வருகிறார். குரு பெயர்ச்சி (Guru Peyarchi 2025) என அழைக்கப்படும் இந்த செயல்பாடானது 2025 ஆம் ஆண்டு வாக்கிய பஞ்சாங்கத்தில் மே 11ஆம் தேதி நடைபெற உள்ளது. அதேசமயம் திருக்கணித பஞ்சாங்கத்தில் மே 14ஆம் தேதி குரு பெயர்ச்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் இந்த குரு பெயர்ச்சியில் குருபகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதனால் மிதுன ராசி பெறப்போகும் பலன்கள் மற்றும் செய்ய வேண்டிய பரிகாரங்கள் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.
சாஸ்திரத்தை பொருத்தவரை ராமபிரான் குருபகவான் அவருடைய ராசியில் சஞ்சரித்த போது தான் வனவாசம் சென்றார் என்பது உள்ளது. இத்தகைய குரு பெயர்ச்சியால் மிதுன ராசியினருக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறைவதற்கான வாய்ப்பு உள்ளது. சுபக்காரியங்களில் சிறு தடங்கல்கள் ஏற்படலாம். அது மட்டுமல்லாமல் குடும்பத்திற்காக அதிக அலைச்சலும் உழைப்பும் செய்ய வேண்டிய சூழல் உண்டாகும்.இந்த காலகட்டத்தில் வீடு மாறுவதற்கான சாத்திய கூறுகள் அமையும். மருத்துவச் செலவுகள் ஏற்படும் என்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக செயல்படவும்.
தொழில் வாழ்க்கை அமோகமாக இருக்கும்
பாக்கியஸ்தானத்தில் சனி மற்றும் ராகுவிற்கு குருபகவானின் பார்வை கிடைக்கிறது. இதன் காரணமாக மேலதிகாரிகளின் உதவி கிடைப்பது பணியிடத்தில் உற்சாகத்தை உண்டாக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் கடின பணிகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சம்பள உயர்வு தொடர்பான நல்ல செய்திகள் வந்து சேரும். வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு அமையும்.
மிதுனத்துக்கு ஜென்ம ராசியில் குரு பெயர்ச்சி அடைவதால் வியாபாரத்தில் கடுமையான போட்டிகள் இருக்கும். நல்ல விற்பனை இருந்தாலும் எதிர்பார்த்ததை விட அதிகமான லாபம் இருந்தாலும் சமயோஜிதமாக செயல்பட்டால் மட்டுமே முன்னேற முடியும். தொழில்கள் விரிவடைவதற்கான வாய்ப்புகள் வரும். சனி மற்றும் ராகு இடையேயான கூட்டு சேர்க்கை வியாபாரத்தை மேலும் விரிவாக்கும். பார்ட்னர்கள் ஒத்துழைப்பால் வருமானம் பெருகும். முதலீட்டில் கவனமுடன் செயல்படவும். வியாபாரம் தொடர்பாக வெளிநாடுகளுக்கு சென்று வரும் வாய்ப்புகள் அமையும்.
பெண்களுக்கான பலன்கள்
பெண்களைப் பொறுத்தவரை குடும்பத்தில் மிகவும் நெருங்கிய உறவினர்களுடன் சற்று அனுசரித்து செல்வது மனதிற்கு நிம்மதி அளிக்கும். வீண் செலவுகள் அதிகரிக்கும் என்பதால் சிக்கனம் தேவை. கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் அது உடனடியாக நீங்கும். குருபகவான் பார்வையில் சனி மற்றும் ராகு இருப்பதால் வேலைக்கு செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் சூழல் மன நிறைவை அளிக்கும்.
மிதுன ராசியில் குரு பெயர்ச்சி அடைந்திருப்பதால் இந்த ராசிக்காரர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இடத்தில் அன்பாக பழகுங்கள். முடிந்தவரை முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. குரு பெயர்ச்சி நடைபெற்றவுடன் முடிந்தவரை ஆலங்குடி, குருவித்துறை ஆகிய கோயில்களில் ஏதேனும் ஒன்றிற்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும் என சொல்லப்பட்டுள்ளது.
(ஜோதிட நம்பிக்கையின்படி இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் உண்மைகளின் துல்லியத்திற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)