காலையில் எழுந்திருக்கும் போதே உடல் சோர்வா? இதோ 5 முக்கிய காரணங்கள்!
Feel Tired Right After Waking Up: அரிதாகவேனும் காலையில் எழுந்தவுடன் உடல் சோர்வாக இருந்தால், அதனை மெதுவாகப் பாராட்டாமல் காரணங்களைத் தேட வேண்டும். முதலில், ஆழ்ந்த தூக்கம் இல்லாததால் அதிக நேரம் தூங்கினாலும் புத்துணர்ச்சி ஏற்படாது. தைராய்டு சுரப்பி செயலிழப்பு இருந்தால் உடல் மெதுவாக செயல்பட்டு சோர்வடையலாம். நீரிழிவு நோயால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து, சோர்வு, தாகம், பசி ஆகியவை ஏற்படுகின்றன.

காலையில் எழுந்திருக்கும் போதே உடல் சோர்வா
காலை எழுந்ததும் புத்துணர்ச்சியுடன் செயல்பட வேண்டியதுதான். ஆனால், சிலருக்குக் காலையில் எழுந்திருக்கும் போதே உடல் சோர்வாகவும், களைப்பாகவும் உணரலாம். அதிக வேலை, நீண்டநேரப் பணி அல்லது தீவிரமான காய்ச்சலுக்குப் பிறகு ஏற்படும் உடல் சோர்வு இயல்பானது. ஆனால், வழக்கத்திற்கு மாறாகக் காலையில் எழுந்ததும் சோர்வு ஏற்பட்டால், அதற்கான காரணங்களை கண்டறிவது அவசியம். ஏனெனில், இந்த காலைநேர சோர்வு நாளடைவில் நாள் முழுவதும் உங்களைப் பலவீனப்படுத்துவதோடு, மன அழுத்தத்தையும் ஏற்படுத்தக்கூடும்.
1. ஆழ்ந்த உறக்கமின்மை
ஆழ்ந்த தூக்கம் என்பது மிகவும் முக்கியமானது. நாம் குறட்டை விட்டுத் தூங்கினாலே நல்ல தூக்கம் என்று நினைத்துக்கொள்வோம், ஆனால் அது ஆழ்ந்த தூக்கம் கிடையாது. நாம் தூங்கும் இடத்தில் போதுமான காற்று இல்லாவிட்டாலும், தூங்கும் நேரத்தில் ஏற்படும் மாற்றம் அல்லது போதிய நேரம் தூங்க முடியாவிட்டாலும் நாள் முழுவதும் உடல் சோர்வாக இருக்கும். எனவே, தூங்கி எழுந்தவுடன் சோர்வாக உணர்ந்தால், உங்களின் இரவு நேர தூக்கம் பற்றி சிந்திப்பது அவசியம்.
2. தைராய்டு சுரப்பு குறைபாடு
உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு தைராய்டு சுரப்பு சீராக இருப்பது மிக முக்கியம். பலர் ஆரம்ப நிலையில் இதன் அறிகுறிகளைத் தீவிரமாக உணர்வதில்லை. உடல் சோர்வு, களைப்பு போன்ற அறிகுறிகள் தீவிரமாகும் போது, மருத்துவரை அணுகி தைராய்டு பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இதற்கான முறையான சிகிச்சை பெற்றால் உடல் சோர்வு நீங்கி, புத்துணர்ச்சி பெறலாம்.
3. நீரிழிவு நோயின் தாக்கம்
சர்க்கரை நோய்க்கான அறிகுறிகளில் பெரும்பாலும் உடல் சோர்வு இல்லை என்று நினைத்து விட்டுவிடுகிறோம். உண்மையில் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது அதிக பசி, தாகம், அடிக்கடி சிறுநீர் கழிப்பது போலவே உடல் சோர்வும் அதிகமாகும். எனவே, இரத்தத்தில் சர்க்கரை அளவு சரியாக உள்ளதா என்று பரிசோதித்துக் கொள்வது அவசியமான ஒன்றாகும்.
4. இரத்த சோகை (அனீமியா)
இரத்த சோகைக்கான முதல் மற்றும் முக்கிய அறிகுறி உடல் சோர்வுதான். உடல் சோர்வு தொடர்ந்து இருந்துகொண்டே இருந்தால் இரத்த சோகை பரிசோதனை செய்வது அவசியம். ஏனெனில் இரத்த சோகை இருக்கும் போது உடலில் இரத்தத்தின் அளவு குறையக்கூடும். அப்போது உடல் செய்யக்கூடிய வேலைகளில் அதிகப்படியான தொய்வு உண்டாகக் கூடும். இது பெரும்பாலும் இரும்புச்சத்து குறைபாட்டால் பெருமளவு வரக்கூடும்.
5. இரத்த அழுத்த ஏற்றத்தாழ்வுகள்
இரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு உடல் சோர்வும் அதீத களைப்பும் இருக்கும். தொடர்ந்து சோர்வோடு காலையில் எழுந்திருக்கும் போதே தலைவலியும் இருந்தால் அவை பெரும்பாலும் இந்நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். சிலருக்கு எழுந்தவுடன் தலை பாரமாக இருக்கக்கூடும். அவர்களுக்கும் இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கலாம்.
இவர்கள் மருத்துவரிடம் சென்று நின்ற நிலையில், உட்கார்ந்த நிலையில், படுத்த நிலையின் இரத்த அழுத்தத்தின் அளவை கண்டறிய வேண்டும். தொடர்ந்து உங்களுக்கு உடல் சோர்வு இருந்தால், பத்து நாட்கள் வரை தொடர்ந்து காலையில் எழும்போதெல்லாம் சோர்வை உணர்ந்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகி உரிய காரணத்தை அறிந்து சிகிச்சை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம்.