அடிக்கடி மன அழுத்தம் ஏற்படுதா? இந்த எளிய டிப்ஸ்களை டிரை பண்ணுங்க!
Simple Tips to Manage Stress : மன அழுத்தம் தற்போது பெரிய பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. நண்பர்களுடன் சிறிது நேரம் உரையாடினாலே ஸ்டிரெஸ் என்ற வார்த்தையை அவர்கள் அடிக்கடி பயன்படுத்துவதை கேட்டிருப்போம். உங்கள் அன்றாட பழக்கவழக்கங்கள் மற்றும் சிந்தனை முறைகளில் சிறிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் மன அழுத்தத்தை எளிதாக குறைக்கலாம்.

மாதிரி புகைப்படம்
நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் பல்வேறு வகையான மன அழுத்தங்களைச் (Stress) சந்திக்கிறோம். மன அழுத்தம் என்பது அனைவருக்குமே இயல்பாக ஏற்படக் கூடிய ஒன்றுதான். ஆனால் அதனை எப்படி நாம் கையாள்கிறோம் என்பது தான் அதில் உள்ள சிக்கல் இருக்கிறது. சில பேர் அதனை எளிதாக கடந்து அடுத்த வேலையை நோக்கி சென்றுவிடுவார்கள். ஆனால் பலர் அதிலேயே தேங்கி விடுகிறார்கள். தினசரி பழக்கவழக்கங்கள் மற்றும் சிந்தனை முறைகளில் சிறிய, நிலையான மாற்றங்களைச் செய்வது பெரும்பாலும் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும். எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் மேஜிக் (Magic) போல மாற்றிவிட முடியாது என்றாலும், மன அழுத்தத்தை நிர்வகிக்கவும் குறைக்கவும் சில எளிய மற்றும் நடைமுறைகளை இந்த கட்டுரையில் பார்க்கலாம்
ஆழமாக மூச்சு விடுதல்
ஒரு ஆழமான மூச்சை இழுத்து சில கணங்கள் அதைப் பிடித்து, பின்னர் மெதுவாக உங்கள் வாய் வழியாக மூச்சை வெளியே விடுங்கள். இது ஒரு நல்ல மன அழுத்த நிவாரணி. இது நரம்பு மண்டலத்தை சுறுசுறுப்பாக்கி உடலையும் மனதையும் அமைதிப்படுத்தும். இதை எங்கும், எந்த நேரத்திலும் செய்யலாம்.
சிறிய இடைவெளிகளை எடுங்கள்
நீங்கள் வேலை செய்து கொண்டிருந்தாலோ அல்லது படித்துக் கொண்டிருந்தாலோ, ஒவ்வொரு மணி நேரத்திற்கும் அல்லது இரண்டு மணி நேரத்திற்கும் 5-10 நிமிட இடைவெளி எடுத்துக் கொள்ளுங்கள். அருகில் கொஞ்சம் நடந்து சென்று வாருங்கள், ஜன்னலுக்கு வெளியே பாருங்கள். ஒரு பாடலைக் கேளுங்கள். இது சோர்வைப் போக்கி மனதிற்கு சிறிய ஓய்வை அளிக்கிறது
தூக்கம்
இரவில் 7-9 மணி நேரம் நன்றாகத் தூங்குங்கள். வார இறுதி நாட்கள் உட்பட, வழக்கமான தூங்கும் நேரத்தைப் பராமரிக்கவும். தூக்கமின்மை உங்களை அதிக சோர்வடையச் செய்து, கவனச் சிதறலை ஏற்படுத்தி, மன அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும். தூக்கம் உங்கள் மூளைக்கும் உடலுக்கும் உற்சாகத்தை அளிக்கிறது.
நடைபயிற்சி
15 நிமிடங்கள் விறுவிறுவென நடக்கவும். உங்களுக்கு பிடித்த பாடலுக்கு டான்ஸ் ஆடவும். இப்படி திடீர் உடல் செயல்பாடு எண்டோர்பின்களை வெளியிடும், இது மனநிலையை மேம்படுத்தவும் மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவும். இது மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான இயற்கையான வழி.
அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிடுங்கள்
நண்பர்கள், குடும்பத்தினர் அல்லது செல்லப்பிராணிகளுடன் நேரத்தை செலவிடுங்கள். ஒரு சிறிய தொலைபேசி அழைப்பு, ஒரு சிறிய உரையாடல், அல்லது ஒன்றாக உணவு உண்பது கூட ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். சமூக தொடர்புகள் மகிழ்ச்சியான உணர்வுகளைத் தருகின்றன. மேலும் தனிமையுணர்வை குறைத்து மன அழுத்தத்திலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப உதவுகின்றன.
தியானம் பயிற்சி செய்யுங்கள்
அமைதியான இடத்தைக் கண்டுபிடித்து கண்களை மூடிக்கொண்டு மூச்சு விடுவதை கவனியுங்கள். தொடர்ந்து செய்துவந்தால் மன அழுத்தம் ஏற்படாமல் நம்மை பாதுகாக்கும்.