ஓடும் ஆட்டோவில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. தப்பிக்க கீழே குதித்ததால் பரபரப்பு!

Nursing Student Jumped Off From Running | பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அந்த வகையில், லக்னோவில் ஓடும் ஆட்டோவில் நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட நிலையில், அதில் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள அந்த பெண் ஓடும் ஆட்டோவில் இருந்து கீழே குதித்துள்ளார்.

ஓடும் ஆட்டோவில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. தப்பிக்க கீழே குதித்ததால் பரபரப்பு!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

Updated On: 

24 May 2025 09:02 AM

லக்னோ, மே 24 : பாலியல் வன்கொடுமையில் இருந்து தப்பிக்க, நர்சிங் மாணவி ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அவரது கூட்டளிகள் மூன்று பேரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், ஆட்டோவில் பயணித்த நர்சிங் மாணவிக்கு நடந்தது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஓடும் ஆட்டோவில் நர்சிங் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை –  இணையத்தில் வைரலாகும் பரபரப்பு சிசிடிவி காட்சி

லக்னோவில் நர்சிங் கல்லூரி மாணவி ஒருவர், கல்லூரி முடித்துவிட்டு வீடு திரும்புவதற்காக ஆட்டோ ஒன்றில் ஏறி உள்ளார். அப்போது, ஆட்டோ ஓட்டுநர் தனது நண்பரை ஆட்டோ ஓட்டும்படி கூறிவிட்டு, மாணவியின் அருகில் வந்து அமர்ந்துள்ளார். மாணவி தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த நிலையில் அதனை கண்டு கொள்ளாமல் இருந்துள்ளார். இந்த நிலையில், ஆட்டோ ஓட்டுனர் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி, மாணவி இறங்க வேண்டிய இடம் வந்ததும் வேகமாக ஆட்டோவை ஓட்டி சென்றுள்ளனர். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த மாணவி, உடனடியாக ஆட்டோவில் இருந்து கீழே குறித்துள்ளார். மாணவி ஆட்டோவில் இருந்து கீழே குதித்ததை கவனித்தா அந்த பகுதி மக்கள் ஓடி வந்து மாணவியை மீட்டுள்ளனர். அதன் பின்னர் பொதுமக்கள் உதவியுடன் மாணவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிசிடிவி காட்சி மூலம் விசாரணையை முடுக்கிய போலீசார்

மாணவி ஆட்டோவில் இருந்து கீழே குதித்தது அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த நிலையில், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் அதனை மையப்படுத்தி விசாரணையை மேற்கொண்டுள்ளனர். அதன் அடிப்படையில், ஆட்டோ ஓட்டுனர் மற்றும் அவர்களின் மூன்று நண்பர்கள் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அந்த நான்கு பேரிடம், போலீசார் விசாரணை நடத்திய நிலையில் அவர்களுக்கு ஏற்கனவே குற்றப் பின்னணி இருப்பது தெரியவந்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.