ஒரு பக்கம் போர்.. மறுபக்கம் “ஆபரேஷன் சிந்தூர்” டைட்டிலுக்கு போட்டி!
பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் "ஆபரேஷன் சிந்தூர்" தாக்குதலை மையமாகக் கொண்டு, 15-க்கும் மேற்பட்ட பாலிவுட் தயாரிப்பு நிறுவனங்கள் திரைப்படத் தலைப்பு உரிமைக்காகப் போட்டி போடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது திரையுலகில் சர்வ சாதாரண நடைமுறை என்றாலும், இந்தத் தலைப்புக்கான போட்டி அதிக ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

ஆபரேஷன் சிந்தூர்
பாகிஸ்தானில் இருக்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக இந்தியா தாக்குதல் நடவடிக்கையை தொடங்கியுள்ள நிலையில் “ஆபரேஷன் சிந்தூர்” (Operation Sindoor) என்ற டைட்டிலை பதிவு செய்ய பாலிவுட்டைச் சேர்ந்த தயாரிப்பு நிறுவனங்கள் (Bollywood Studios) போட்டிப் போட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. FWICE எனப்படும் மேற்கிந்திய சினிமா ஊழியர்கள் கூட்டமைப்பு தலைவர் பி.என். திவாரி தான் இந்த தகவலை தெரிவித்துள்ளார். அதில், “2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 நடைபெற்ற பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக இந்தியா “ஆபரேஷன் சிந்தூர்” என்ற நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த 9 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. இந்திய ராணுவத்தின் இந்த தைரியமான நடவடிக்கைக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இப்படியான நிலையில் திரையுலகினரும் இந்த சம்பவத்தை திரைக்கதையாக கொண்டு வருவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் தான் ஆபரேஷன் சிந்தூர் தலைப்புக்கு உரிமைக்கோரி பல தயாரிப்பாளர்கள் திரைப்பட தலைப்புகளை பதிவு செய்யும் சங்கங்களில் ஒன்றான இந்திய மோஷன் பிக்சர் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதிவு செய்துள்ளனர். இதுவரை 15 திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் நிறுவனத்தினர் பதிவு செய்திருக்கிறார்கள்” என அவர் கூறினார்.
இதெல்லாம் சர்வ சாதாரணம்
திரைப்படத்துறையை பொறுத்தவரை இது போன்ற நிகழ்வுகள் நடப்பது மிகவும் சர்வ சாதாரணமான ஒன்று என சொல்லப்படுகிறது. காரணம் இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவில் ஏதேனும் சம்பவங்கள் நிகழ்ந்தால் அதனை மையமாகக் கொண்டு படங்கள், வெப் சீரிஸ்கள், கதைகள் ஆகியவை உருவாக்கப்படும். அந்த சம்பவங்களின் போது சூட்டப்படும் பெயர்கள் டைட்டிலாக வைக்கப்படும். ஒரு படம் எடுக்கப்படாவிட்டாலும் அந்த தலைப்பை பதிவு செய்வது மிகவும் பாதுகாப்பானது என சொல்லப்படுகிறது.
இந்திய சினிமாவை பொருத்தவரை போர், ராணுவம், காவல்துறை சம்பந்தப்பட்ட படங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. அதனை தயாரிப்பாளர்கள் சரியாக கணித்துக் கொண்டுதான் ஆபரேஷன் சிந்தூர் டைட்டிலுக்கு போட்டி போட்டு வருகிறார்கள். விரைவில் இது தொடர்பான படம் அல்லது வெப் சீரிஸ் உருவாவதற்கான வாய்ப்புகளும் உள்ளது.
இந்த தலைப்பை பதிவு செய்துள்ள நபர்களில் ஒருவரான தயாரிப்பாளர் அசோக் பண்டிட் இந்தியா டுடே ஊடகத்திடம் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “தான் ஆபரேஷன் சிந்தூர் டைட்டிலை பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளேன். ஆனால் இந்த டைட்டிலில் படம் உருவாகுமா என்பது பற்றி தெரியவில்லை. என்னை போல் இந்த டைட்டிலை பதிவு செய்துள்ள அனைவரும் படம் எடுப்பார்களா என்பது தெரியாது. காரணம் ஒரு ஆர்வம் மிகுதியால் இப்படி நடக்கிறது. தலைப்பு பதிவு செய்வது தான் ஒரு படம் உருவாவதில் முதல் படியாகும்” என கூறியுள்ளார்.
இந்த டைட்டில் போட்டியில் மகாவீர் ஜெயின் என்ற நிறுவனம்தான் முதன் முதலில் பெயரை பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அதே சமயம் டி சீரிஸ் மற்றும் ஜி ஸ்டூடியோஸ் ஆகியோரும் டைட்டிலுக்கு விண்ணப்பித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.