Video: 14 வருடங்களுக்கு பிறகு மதுரையில் விஜய் – தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!
TVK Chief Vijay in Madurai : நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் ஜன நாயகன் படத்தின் படப்பிடிப்பிற்காக கொடைக்கானல் செல்கிறார். இந்த நிலையில் 14 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை வந்துள்ள அவருக்கு மதுரை விமான நிலையத்தில் ரசிகர்களும் தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

மதுரையில் விஜய்
தமிழக வெற்றிக் கழகம் (Tamilaga Vettri Kazhagam) என்ற கட்சியைத் தொடங்கி முழு நேர அரசியலில் இறங்கியுள்ள நடிகர் விஜய் (Vijay) தனது கடைசிப் படமான ஜன நாயகன் (Jana Nayagan) படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, துணிவு உள்ளிட்ட படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கி வருகிறார். இந்தப் படத்தை கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இந்தப் படத்தில் விஜயக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, ஸ்ருதி ஹாசன், கௌதம் வாசு தேவ் மேனன், பிரகாஷ் ராஜ், மமிதா பைஜு, டிஜே அருணாச்சலம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இந்தப் படம் வருகிற 2026 ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகிறது.
14 வருடங்களுக்கு பிறகு மதுரையில் விஜய்
இந்தப் படத்தின் இறுதி கட்டப்பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அரசியல் கலந்த கமர்ஷியல் படமாக இருக்கும் என் கூறப்படுகிறது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக நடிகர் விஜய் மே 1, 2025 அன்று மதுரை வழியாக கொடைக்கானல் செல்லவிருக்கிறார். கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கு பிறகு மதுரைக்கு விஜய் வந்துள்ளார். முன்னதாக வேலாயுதம் படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றது. அதற்காக விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் மதுரை வந்திருந்தனர்.
மதுரை விமான நிலையத்தில் குவிந்த ரசிகர்களால் பரபரப்பு
விஜய் மதுரை வரவிருப்பதாக தகவல் பரவ ஆயிரக்கணக்கான விஜய் ரசிகர்களும் தவெக தொண்டர்களும் மதுரை விமான நிலையத்தில் காலை 7 மணி முதலே குவியத் தொடங்கினர். இதனால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. மேலும் விஜய் ரோட் ஷோ நடத்தவிருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் விஜய் ரோடு ஷோ நடத்த காவல்துறையினரிடம் அனுமதி பெறவில்லை எனவும் மீறி நடத்தப்பட்டால் உறிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மதுரை மாநகர் காவல் ஆணையர் தெரிவித்தார்.
முன்னதாக கோவையில் கடந்த ஏப்ரல் 26, 2025 அன்று தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி கருத்தரங்கு நடைபெற்றது. அப்போது கோவை விமான நிலையத்தில் இருந்து கருத்தரங்கு நடைபெறும் அரங்கு வரை விஜய் செல்ல அவர் பின்னாடியே அவரது ரசிகர்களும் தொண்டர்களும் படையெடுத்து சென்றனர். அதில் ஒரு சிலர் ஹெல்மெட் அணியாமலும், கார் கதவுகளை திறந்த படியும் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் ஒரு சிலர் விஜய் ரோடு ஷோ சென்ற வாகனத்தில் குதித்து பரபரப்பை ஏற்படுத்தினர்.
மதுரை ரசிகர்களுக்கு விஜய்யின் கோரிக்கை
என்னை பின் தொடர்ந்து வரவேண்டாம் நான் சினிமா படப்பிடிப்பிற்கு செல்கிறேன் , வேறொரு கட்சி நிகழ்வில் உங்களை நேரில் சந்திக்கிறேன்.
Press ஆ Meet பண்ண சொன்னவன் எல்லாம் Line ல வா ! #TVK pic.twitter.com/NUSqzhvK4X
— Prasanna OG (@OGprasanna) May 1, 2025
இதன் ஒரு பகுதியாக சென்னை விமான நிலையத்தில் கட்சி தொடங்கியதில் இருந்து முதன் முறையாக செய்தியாளர்களை விஜய் சந்தித்தார். அப்போது பேசிய விஜய், மதுரை மக்கள் அனைவருக்கும் வணக்கம். உங்கள் அன்புக்கு கோடான கோடி நன்றிகள். ஜனநாயகன் படப்பிடிப்பிற்காக கொடக்கானல் செல்கிறேன். கூடிய சீக்கிரம் மதுரை மண்ணில் கட்சி சார்பாக வேறு ஒரு சந்தர்ப்பத்தில் உங்கள் எல்லோரையும் சந்தித்து பேசுகிறேன். மதுரை விமான நிலையம் வந்து உங்களை பார்த்து விட்டு நான் என் வேலையை பார்க்க போய்விடுவேன். நீங்களும் பத்திரமாக அவரவர் வீட்டுக்கு செல்லுங்கள்.
யாரும் என் காரை பின் தொடராதீர்கள். பைக்கில் வேகமாக வருவது, மேலே நின்று கொண்டு பைக் ஓட்டுவது, ஹெல்மெட் அணியாமல் வருவது இதுபோன்ற காட்சிகள் எல்லாம் பார்க்கும்பொழுது மனதுக்கு ரொம்ப பதட்டமாக இருக்கிறது. விரைவில் உங்களை சந்திக்கிறேன் அனைவருக்கும் மே தின வாழ்த்துகள் என தெரிவித்திருந்தார்.
மதுரையில் விஜய்க்கு உற்சாக வரவேற்பு
அழகர் வாராரு 🥺🔥@actorvijay pic.twitter.com/QMIukiQLIp
— Nellai District TVK IT Wing (@NellaiTVKITWing) May 1, 2025
இந்த நிலையில் மதுரை வந்த விஜய்யிற்கு அவரது ரசிகர்களும் கட்சித் தொண்டர்களும் மலர்களைத் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் வாகனத்தில் நின்று அனைவருக்கும் கையசைத்த படி சென்றார். அவர் வாகனத்தை பின் தொடர வேண்டாம் என அறிவுறுத்தியும் ரசிகர்களும் தொண்டர்களும் பின் தொடர்ந்தபடியே சென்றனர்.