அடுத்த 5 நாட்களுக்கு கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள்? லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!
Tamil Nadu Weather update : தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கேரள மாநிலத்தில் 3 அல்லது 4 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது. இதன் காரணமாக, தமிழகத்திலும் நல்ல மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

மழை
சென்னை, மே 22 : தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் (tamil nadu weather update) தெரிவித்துள்ளது. மேலும், சென்னையிலும் நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 மார்ச் மாதம் முதலே கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கியது. இந்த கோடை வெயில் 2025 மே முதல் வாரம் வரை இருந்தது. பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரியை கடந்து பதிவானது. அதன்பிறகு, மே மாதத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து மழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாகவே மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. சென்னையிலும் கூட, கடந்த இரு தினங்களாகவே விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.
அடுத்த 5 நாட்களுக்கு கொட்டப்போகும் மழை
இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம். அதாவது, வடகர்நாடக கோவா கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் 2025 மே 21ஆம் தேதி காலை 8.30 மணியளவில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால், அடுத்த 12 மணி நேரத்தில், அதே பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும். இது வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதற்கடுத்த 36 மணி நேரத்தில் வலுவடையக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, 2025 மே 22ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதியிலும் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னையை பொறுத்தவரை 2025 மே 22ஆம் தேதியான இன்று நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக் கூடும்.
தென்மேற்கு பருவமழை
மேலும், அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2025 மே 22ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை அரபிக் கடலில் கடந்த வாரம் தொடங்கியது. இதனை அடுத்து, கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்னும 3 அல்லது 4 தினங்களுக்கு தொடங்க உள்ளது. இதனால், கேரளாவில் மழை தாக்கம் அதிகமாக இருக்கும். அதே நேரத்தில், தமிழகத்தில் சில பகுதிகளிலும் பரவுவதற்கான வாய்ப்புள்ளது உள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளது.