Tamil Nadu Weather Forecast: தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பநிலை.. அடுத்த சில நாட்களில் மழை.. லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!
Tamil Nadu Weather Update: கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்துள்ளது. ஈரோடு, கரூர் போன்ற இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39° செல்சியஸ் பதிவாகியுள்ளது. அடுத்த ஏழு நாட்களுக்கு தென் தமிழ்நாடு, வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

வானிலை நிலவரம்
சென்னை, ஏப்ரல் 23: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை (Weather Update) அறிக்கையின்படி, கடந்த 24 மணிநேரத்தில் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், தென் தமிழ்நாட்டின் ஒருசில இடங்களிலும் மழை (Rain) பெய்துள்ளது. மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. தமிழ்நாட்டை பொறுத்தவரை கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச வெப்ப நிலையாக ஈரோடு (Erode) , கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையம், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் 39.0° செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. எனினும், ஒருசில இடங்களில் சற்று வெப்பநிலை குறைந்துள்ளது.
தமிழக உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 34–39° செல்சியஸூம், தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகள் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 33–36° செல்சியஸூம், உயரமான மலைப்பகுதிகளில் 21–29° செல்சியஸூம் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு:
தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல், தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, 2025 ஏப்ரல் 23ம் தேதியான இன்று தென் தமிழ்நாட்டின் ஒருசில இடங்களிலும், வட தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2025 ஏப்ரல் 24ம் தேதியான நாளை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், 2025 ஏப்ரல் 24ம் தேதி முதல் 2025 ஏப்ரல் 29ம் தேதி வரை தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
2025 ஏப்ரல் 23ம் தேதியான இன்று முதல் 2025 ஏப்ரல் 26ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், ஒருசில பகுதிகளில் வெப்பத்தின் காரணமாக மக்கள் சற்று அசௌகரியத்தை எதிர்கொள்வார்கள்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
2025 ஏப்ரல் 23ம் தேதியான இன்று சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
2025 ஏப்ரல் 24ம் தேதியான நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழ்நாட்டின் கடலோரப்பகுதிகள், வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அரபிக்கடல் ஆகிய பகுதிகளில்2025 ஏப்ரல் 23ம் தேதியான இன்று முதல் 2025 ஏப்ரல் 27ம் தேதி வரை மீனவர்களுக்கான எச்சரிக்கை என்று ஏதுமில்லை.