AIADMK Criticism: பாஜகவினர் இனி அதிமுகவை விமர்சிக்கக் கூடாது.. எச்சரித்த பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்..!
BJP-AIADMK Alliance: தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுகவை சமூக வலைதளங்களில் விமர்சிக்கும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். 2026 தேர்தலைக் கருத்தில் கொண்டு, இதுபோன்ற செயல்களைத் தடுக்க சமூக வலைதள செயல்பாடுகளை கண்காணிக்கும் புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. கூட்டணி கட்சியை விமர்சிப்பது கட்சிக்கு தீங்கு விளைவிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
சென்னை, மே 22: பாஜகவில் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களாக இருந்துகொண்டு கூட்டணியில் உள்ள அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை (AIADMK) விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் (Nainar Nagendran) எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதுபோன்ற செயல்பாடுகள் இனி நடைபெறாமல் இருக்க பாஜகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் சமூக வலைதள செயல்பாடுகளை கண்காணிக்க புதிதாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார். வருகின்ற 2026ம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை (2026 Tamil Nadu Assembly Election) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி வைத்துள்ளது குறிப்பிட்டத்தக்கது.
நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை:
தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜக ஊடகப் பிரிவு நிர்வாகிகள் கூட்டம் நேற்று அதாவது 2025 மே 21ம் தேதி மாலை கமலாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின்போது நயினார் நாகேந்திரன் சமூக வலைதள செயல்பாட்டாளர்கள் மற்றும் பாஜகவின் ஊடகப் பிரிவு நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார். தொடர்ந்து நயினார் நாகேந்திரன், பாஜக ஊடகப் பிரிவு நிர்வாகிகள் கூட்டத்தில், 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுகவை தொடர்ந்து விமர்சித்துவரும் , அதிக பின்தொடர்பாளர்களை கொண்ட பாஜகவினரின் 15 சமூக வலைதள கணக்குகளை குறிப்பிட்டு, இனி வரும் காலங்களில் இதுபோல் நடைபெறக்கூடாது என தெரிவித்தார்.
பாஜக கூட்டம்:
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்வோர் சந்திப்பு கூட்டம் மாநில தலைவர் திரு @nainarnagendran தலைமையில் நடைபெற்றது@DrTamilisai4BJP , @VanathiBJP
வழிகாட்டினார்கள்
அமைப்பு பொது செயலாளர் திரு கேசவ விநாயகன் முன்னிலையில்
2026 தேர்தலை நோக்கி உருவாகும்… pic.twitter.com/j6dVBrgy9M— Karu.Nagaraajan (@KaruNagarajan) May 21, 2025
இந்த கூட்டத்தில் பேசிய நயினார் நாகேந்திரன், “பாரதிய ஜனதா கட்சியில் இருந்து கொண்டு கூட்டணி கட்சியான அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிடுவோர் மீது கட்சி ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும். பாஜக-வில் வார் ரூம், அரசியல் இனி இருக்க கூடாது. பாஜகவினரின் சமூக வலைதள செயல்பாடுகளை கண்காணிக்க புதிதாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, MEN ( Media empower network ) என்று பெயரிடப்பட்டுள்ள குழு அமைக்கப்பட்டுள்ளது, இந்த குழு மூலம் பாரதிய ஜனதா கட்சியினர் பங்கேற்கும் ஊடக விவாதம், சமூக வலைதள பதிவுகளை கண்காணிப்பது போன்ற பணிகளில் ஈடுபட உள்ளனர்.
மேலும், பாரதிய ஜனதா கட்சியில் இருக்கும் எந்த தனி நபருக்கும் ஆதரவாகவும் எதிராகவும், மற்ற நிர்வாகிகளை விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிடக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.