பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியல் வழங்குவது எப்போது? தேதி அறிவிப்பு

Tamil Nadu Plus 2 Results 2025: தமிழ்நாட்டின் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 2025 மே 8 அன்று வெளியிடப்பட்டன. 7,92,494 மாணவர்களில் 7,53,142 பேர் தேர்ச்சி பெற்று 95.03% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவிகள் 3.54% அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியல் வழங்குவது எப்போது? தேதி அறிவிப்பு

பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் வழங்கும் தேதி

Published: 

08 May 2025 21:20 PM

சென்னை மே 08: தமிழ்நாடு (Tamilnadu) பிளஸ் 2 பொதுத்தேர்வு (Plus 2 Exam) முடிவுகள் இன்று (2025 மே 8) வெளியிடப்பட்டன. மொத்தம் 7,92,494 மாணவர்கள் தேர்வில் பங்கேற்றுள்ளனர். இவர்களில் 7,53,142 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் அடிப்படையில், இந்த ஆண்டு 95.03% என்ற சிறப்பான தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவிகள் மாணவர்களை விட 3.54% அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டமாக அரியலூர் (98.82%) முதல் இடத்தில் உள்ளது. தேர்ச்சி பெற்றவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் மே 12 முதல் வழங்கப்படும். தோல்வியடைந்தவர்களுக்கு ஜூன் 26 முதல் துணைத் தேர்வுகள் நடைபெறவுள்ளன.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: 95.03% தேர்ச்சி

தமிழ்நாடு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2025ஆம் ஆண்டு மார்ச் 3 முதல் மார்ச் 25 வரை நடைபெற்றன. இந்தாண்டின் தேர்வு முடிவுகள் இன்று, 2025 மே 8 ஆம் தேதி காலை 9 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன. மொத்தம் 7,92,494 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், 7,53,142 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 95.03% எனும் உயர் தேர்ச்சி விகிதமாகும். மாணவிகளை விட மாணவர்கள் 0.47% குறைவாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவிகள் தேர்ச்சி விகிதம் உயர்வு

மொத்தம் 3,73,178 மாணவர்கள் தேர்வில் பங்கேற்றனர், இதில் 3,47,670 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல், 4,19,316 மாணவியர்கள் தேர்வில் பங்கேற்றனர், இதில் 4,05,472 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 3.54% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வெழுத 10,049 பேர் சமூக காரணங்களால் தவறினர்.

மதிப்பெண் பட்டியல் வழங்கும் தேதி

தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் (Provisional Certificate) மே 12ஆம் தேதி முதல் அவரவர் பள்ளிகளில் வழங்கப்படும். தனித்தேர்வர்கள் தேர்வு எழுதின மையங்களில் பெற்றுக்கொள்ளலாம். www.dge.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யவும் இயலும்.

மறுமதிப்பீடு மற்றும் விடைத்தாள் நகல்

மதிப்பெண்களில் சந்தேகம் உள்ளவர்கள் விடைத்தாள் நகலை மே 13 முதல் 17 வரை பெற்றுக்கொண்டு மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் பள்ளி வழியாகவே செய்ய வேண்டும்.

துணைத் தேர்வுகள் – 2025 ஜூன் 26 முதல் தொடக்கம்

தோல்வியடைந்த மாணவர்களுக்காக 2025 ஜூன் 26 முதல் துணைத்தேர்வுகள் நடத்தப்படும். தேர்வு அட்டவணை 2025 மே 9-ம் தேதி வெளியிடப்படும். விண்ணப்பங்கள் 2025 மே 14 முதல் 31 வரை பெறப்படும். பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளி வழியாகவும், தனித்தேர்வர்கள் அரசு தேர்வுகள் இயக்கத்தின் சேவை மையம் மூலமும் விண்ணப்பிக்கலாம்.

முதல் 5 மாவட்டங்கள் – அரியலூர் முதல் இடத்தில்

தமிழ்நாட்டில் அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டமாக அரியலூர் (98.82%) தலைப்பிடத்தை பிடித்துள்ளது. அடுத்து:

அரியலூர் – 98.82%

ஈரோடு – 97.98%

திருப்பூர் – 97.53%

கோயம்புத்தூர் – 97.48%

கன்னியாகுமரி – 97.01%

மற்றபடி, வேலூர் மாவட்டம் 90.79% தேர்ச்சி விகிதத்துடன் கடைசி இடத்தில் உள்ளது. காரைக்கால் – 98.12% மற்றும் பாண்டிச்சேரி – 98.57% தேர்ச்சி பெற்றுள்ளன.

அமைச்சர் விளக்கம்: தேர்ச்சி விகிதம் உயர்வு

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறும்போது, கடந்த ஆண்டு விட 0.47% அதிகமான தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டு பதிவாகியுள்ளது என்றார். சென்னையில் தேர்ச்சி விகிதம் குறைவாக, 34-வது இடத்தில் இருப்பது கவலைக்குரியதாகும். இதற்கான காரணங்களை ஆராயும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார். மேலும், செயற்கை நுண்ணறிவு பாடங்கள் 6-ம் வகுப்பு முதல் அறிமுகப்படுத்தப்படும் என்றார்.