பாஜக பெண் பிரமுகர் வெட்டிக் கொலை.. தலையை துண்டித்த கொடூரம்.. தஞ்சையில் பயங்கரம்!
Thanjavur Woman BJP Cader Murder : தஞ்சாவூர் மாவட்டத்தில் பாஜக பெண் பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2025 மே 5ஆம் தேதியான நேற்று இரவு வீட்டில் சென்றுக் கொண்டிருந்த பாஜக பிரமுகர் சரண்யாவை மர்ம கும்பல், தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது.

பாஜக பெண் பிரமுகர் வெட்டிக் கொலை
தஞ்சாவூர், மே 06: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் பாஜக பெண் பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு அவரது கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு செல்லும் வழியில் மர்ம நபர்கள் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளார். அவர் மதுரை மத்திய தொகுதி மாநகர பாஜக பிரமுகர் சரண்யா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாலன் (45). இவரது மனைவி சரண்யா (35). இவருக்கு முன்னதாக, மதுரையைச் சேர்ந்த சண்முகசுந்திரன் என்பவருடன் திருமணம் நடந்தது.
பாஜக பெண் பிரமுகர் வெட்டிக் கொலை
இவர்கள் 15 வயதில் சாமுவேல் என்ற மகனும், 13 வயதில் சரவணன் என்ற மகனுடன் மதுரையில் வசித்து வந்துள்ளனர். கடந்த 2021ஆம் ஆண்டு சண்முகசுந்தரம் இறந்துவிட்டார். இதனை அடுத்து, சரண்யா பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பாலன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். மேலும், இவர்கள் இருவரும் டிராவல்ஸ் மற்றும் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், 2025 மே 5ஆம் தேதியான இரவு சரண்யா கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு திரும்பி சென்றுக் கொண்டிருந்தார். சரண்யா சென்றுக் கொண்டிருக்கும்போது, அவரை மர்ம கும்பல் வழிமறித்தது.
பின்னர், சரண்யாவை மர்ம கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். அங்கு சரண்யா தலை துண்டிக்கப்பட்டு, ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், சரண்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
தலையை துண்டித்த கொடூரம்
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், முன்விரோதம் காரணமாக பாஜக பிரமுகர் சரண்யா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் கூறுகின்றனர். இருப்பினும், இவரை யார் கொலை செய்ததது? காரணம் என்ன? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்டது அப்பகுதி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்தில் கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொலை சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. இதில், அரசியல் பிரமுகர்களும் கொலை செய்யப்பட்டு வருகிறது. இதனால், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாக எதிர்க்கட்சி குற்றச்சாட்டி வருகின்றனர். அண்மையில் கூட, ஈரோட்டில் தம்பதி கொலை செய்யப்பட்டது மாநிலத்தையே உலுக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.