“யாரையும் விட மாட்டோம்” பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்.. அமித் ஷா உறுதி!

Amit Shah On Pahalgam Terror Attack : பயங்கரவாதிகள் அனைவரையும் ஒழிக்கும் வரையில் எங்களது நடவடிக்கையை நிறுத்த மாட்டோம் என்றும் பயங்கரவாதம் வேரோடு அழிக்கப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார். பஹல்காம் தாக்குதல் தொடர்பாக முதல்முறையாக அமித் ஷா பொதுவெளியில் பேசியிருக்கிறார்.

யாரையும் விட மாட்டோம் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்.. அமித் ஷா உறுதி!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

Updated On: 

02 May 2025 07:22 AM

டெல்லி, மே 02: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு (Pahalgam Terror Attack) தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணமான ஒவ்வொருவரையும் நாங்கள் வேட்டையாடுவோம் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit Shah) தெரிவித்துள்ளார். அசாம் மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, “பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலின் காரணமாக குஜராத் மற்றும் மகாராஷ்டிரா தின கொண்டாட்டங்களை எளிமையான விழாவாக மாற்றியுள்ளோம். முதலில், உயிர் இழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்த விரும்புகிறேன்.

பஹல்காம் தாக்குதலுக்கு தக்க பதிலடி

பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தப்பிக்க மாட்டார்கள். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணமான ஒவ்வொருவரையும் நாங்கள் வேட்டையாடுவோம். 26 பேரைக் கொன்றதன் மூலம் நீங்கள் (பயங்கரவாதிகள்) வெற்றி பெற்றதாக நினைக்காதீர்கள்.

நீங்கள் ஒவ்வொருவரும் சரியான பதில் சொல்ல வேண்டியிருக்கும். இது நரேந்திர மோடி அரசு; யாரும் தப்ப மாட்டார்கள். இந்த நாட்டின் ஒவ்வொரு மூளைகளிலும் பயங்கரவாதத்தை வேரோடு பிடுங்கி எறிவதே எங்களின் நோக்கம். அது விரைவில் நிறைவேறும். இந்தப் போராட்டத்தில் 140 கோடி இந்தியர்கள் மட்டுமல்ல, முழு உலகமும் இந்தியாவுடன் நிற்கிறது.

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தப் போராட்டத்தில் உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து இந்திய மக்களுடன் நிற்கின்றன. பயங்கரவாதம் ஒழிக்கப்படும் வரை, நமது போராட்டம் தொடரும். பயங்கரவாத செயலுக்கு நிச்சயமாக தகுந்த தண்டனை வழங்கப்படும். பஹல்காம் தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும்” என்று கூறினார்.

பஹல்காம் தாக்குதல்

2025 ஏக்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பிரபலமான சுற்றுலா தளமான பஹல்காமில் சுற்றுலா பயணிகளை பயங்கரவாதிகள் கொன்றுள்ளனர். இதில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். 2019 ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு, நடந்த மோசமான தாக்குதல் இதுவே ஆகும். இந்த கொடூர தாக்குதலுக்கு ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருக்கிறது. இருப்பினும், இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக இந்தியா குற்றச்சாட்டி வருகிறது.

இதனை அடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது. மேலும், பஹல்காம் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் எனவும் பிரதமர் மோடியுன் கூறி வருகிறார். கடந்த 7 நாட்களாகவே எல்லையில் இந்திய ராணுவ படைக்கும், பாகிஸ்தான் ராணுவ படைக்கும் துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. அதே நேரத்தில் பயங்கரவாதிகளை தேடும் பணிகளும் நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.