நாடு கடத்துவதை தள்ளி வைக்க வேண்டும்.. மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Supreme Court Stays Deportation of 6 Pakistani's | இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களை இந்திய அரசு வெளியேற்றி வருகிறது. அந்த வகையில் பெங்களூரில் வசிக்கும் பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட நபர் தொடர்ந்த மனுவில் உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு வழங்கியுள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

நாடு கடத்துவதை தள்ளி வைக்க வேண்டும்.. மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மாதிரி புகைப்படம்

Published: 

02 May 2025 15:04 PM

டெல்லி, மே 2 : இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களை இந்திய அரசு வெளியேற்றி வரும் நிலையில், பாகிஸ்தானை (Pakistan) சேர்ந்த 6 பேரை நாடு கடத்தும் நடவடிக்கையை தள்ளி வைக்க மத்திய அரசுக்கு (Central Government) உச்ச நீதிமன்றம் (Supreme Court) உத்தரவு பிறப்பித்துள்ளது. பாகிஸ்தானுக்கு நாடு கடத்துவது எதிராக அவர்கள் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பஹல்காமில் பயங்கரமாக கொலை செய்யப்பட்ட சுற்றுலா பயணிகள்

ஜம்மு மற்றும் காஷ்மீரின் (Jammu & Kashmir) பஹல்காம் (Pahalgam) பகுதியில் ஏப்ரல் 22, 2025 அன்று சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இருவர் உட்பட, 26 சுற்றுலா பயணிகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (The Resistance Front) பொறுப்பேற்றது. இதனால் மிகுந்த ஆத்திரத்திற்கு உள்ளான இந்தியா, பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கியது.

அந்த வகையில் இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் அடுத்து 24 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. மேலும் இந்தியாவிற்கு வந்துள்ள பாகிஸ்தானியர்கள் விசாக்கள் ரத்து செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. எனவே இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் தங்களது விசாக்கள் ரத்து செய்வதற்கு முன்பாகவே நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்தது. இதன் காரணமாக ஏராளமான பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேறினர்.

உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இந்த நிலையில் பெங்களூருவில் வசிக்கும் பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட நபர் ஒருவர் தானும் தனது குடும்ப உறுப்பினர்கள் 5 பேரும் பாகிஸ்தானுக்கு நாடுக் கடத்தப்படுவதற்கு எதிராக உச்ச நீதிமனறத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். மேலும், தங்களின் இந்திய பாஸ்போர் மற்றும் ஆதார் கார்டு உள்ளதாகவும் அவர் மனுவில் கூறியுள்ளார். இந்த மனு இன்று (மே 2, 2025) உச்ச நீதிமனறத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், மனுவை விசாரித்த நீதிபதிகள் பாகிஸ்தானுக்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிராக மனு தக்கல் செய்த 6 பேரின் குடியுரிமை ஆவனங்களை சரிபார்க்க உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், ஆவணங்களை சரிபார்க்கும் வரை நாடு கடத்தும் நடவடிக்கையை தள்ளி வைக்கவும் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.