மீண்டும் உயரும் UPI மற்றும் Rupay கட்டணங்கள்? – யாருக்கு பாதிப்பு?

UPI: பெரிய வணிகங்களில் 50%க்கும் அதிகமான பரிவர்த்தனைகள் கார்டுகளின் மூலம் நடைபெறுகின்றன. எனவே, அவர்கள் யுபிஐ பரிவர்த்தனைகளுக்காக எம்டிஆர் கட்டணத்தை செலுத்துவது பெரிய சுமையாக இருக்காது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பேமெண்ட் கவுண்சில் ஆப் இந்தியாவின் தலைவர் விஸ்வாஸ் பட்டேல், அரசாங்கம் பெரிய வணிகர்களுக்கு பரிவர்த்தனை கட்டணங்களைத் தள்ளுபடி செய்வதை விமர்சித்தார்.

மீண்டும் உயரும் UPI மற்றும் Rupay கட்டணங்கள்? - யாருக்கு பாதிப்பு?

யுபிஐ பணப்பரிவர்த்தனை

Published: 

21 Mar 2025 11:48 AM

எம்டிஆர் எனப்படும் வணிகர் தள்ளுபடி கட்டணம் (Merchant Discount Rate) கட்டணத்தை மீண்டும் கொண்டு வர மத்திய அரசு முயற்சி செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. தி எகனாமிக்ஸ் டைம்ஸ் வெளியிட்ட தகவலின்படி, யூனிபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் (UPI) மற்றும் ரூபே (Rupay) டெபிட் கார்டுகள் மூலம் நடைபெறும் பரிவர்த்தனைகளில் வணிக தள்ளுபடி விகிதத்தை மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்துவருவதாக கூறப்படுகிறது. பணப்பரிவர்த்தனை முறைகளில் எம்டிஆர் என்பது வணிகர்கள் வங்கிகளுக்கு பண பரிவர்த்தனைச் சேவைக்காக செலுத்தும் கட்டணமாகும். தற்போது, தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் (NPCI) மூலம் செயல்படுத்தப்படும் யுபிஐ மற்றும் ரூபே டெபிட் கார்டு பரிவர்த்தனைகளில் எம்டிஆர் கட்டணம் விதிக்கப்படவில்லை.

வணிகர்களுக்கான புதிய கட்டண அமைப்பு

அரசு யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான கட்டண அமைப்பை படிநிலை முறையில் வகைப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. அதன்படி, பெரிய வணிகர்களுக்கு அதிக கட்டணம் விதிக்கப்படும் என்றும் சிறிய வணிகர்களுக்கு குறைவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக ஆண்டு வருமானம் ரூ.40 லட்சத்திற்குக் குறைவாக உள்ள வணிகர்களுக்கு யுபிஐ பரிவர்த்தனைகள் தொடர்ந்தும் இலவசமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

2021-22 பட்ஜெட்டில் எம்டிஆர் கட்டணம் நீக்கப்பட்ட பின்னணி

தற்போது பெரிய வணிகர்கள் ஏற்கனவே விசா, மாஸ்டர் கார்டு டெபிட் கார்டுகள் மற்றும் அனைத்து கிரெடிட் கார்டுகளுக்கும் எம்டிஆர் கட்டணம் செலுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ருபே டெபிட் கார்டுகளுக்கும் இதே கட்டண விதிமுறையை அமல்படுத்தப்படவுள்ளது. தற்போது 2021-22 நிதியாண்டு பட்ஜெட்டில் எம்டிஆர் கட்டணம் நீக்கப்பட்டதால், யுபிஐ பரிவர்த்தனைகள் இலவசமாக செய்யும் வகையில் மாற்றம் செய்யப்பட்டது. இதன் மூலம் டிஜிட்டல் பேமென்ட்களை ஊக்குவிக்க அரசு முயன்றது. ஆனால், தற்போது யுபிஐ இந்தியாவில் முக்கியமான ரீட்டெயில் பரிவர்த்தனை முறையாக வளர்ந்துள்ளதால், இது அனைவருக்கும் இலவசமாக இருக்க வேண்டிய தேவையிருக்காது எனக் கூறப்படுகிறது.

எம்டிஆர் மீண்டும் அறிமுகம் செய்யப்பட வேண்டுமா?

இதுவரை பெரிய வணிகங்களில் 50%க்கும் அதிகமான பரிவர்த்தனைகள் கார்டுகளின் மூலம் நடைபெறுகின்றன. எனவே, அவர்கள் யுபிஐ பரிவர்த்தனைகளுக்காக எம்டிஆர் கட்டணத்தை செலுத்துவது பெரிய சுமையாக இருக்காது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பேமெண்ட் கவுண்சில் ஆப் இந்தியாவின் தலைவர் விஸ்வாஸ் பட்டேல், அரசாங்கம் பெரிய வணிகர்களுக்கு பரிவர்த்தனை கட்டணங்களைத் தள்ளுபடி செய்வதை விமர்சித்தார். பணம் செலுத்தக் கூடிய வணிகர்கள் பணப்பரிவர்த்தனை சேவைக்கான கட்டணங்களை செலுத்த வேண்டும். அரசாங்க மானியங்களின் மீது முழுமையாக நம்புவதற்குப் பதிலாக அவர்களே செலுத்த வேண்டும் எனக் கூறினார்.

இந்த ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், டிஜிட்டல் பேமெண்ட் மானியங்களுக்கான ஒதுக்கீடு ரூ.3,500 கோடியில் இருந்து ரூ.437 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டு வங்கிகள் பெற வேண்டிய மானியத் தொகை இன்னும் நிலுவையாக உள்ளது. எம்டிஆர் கட்டணங்கள் குறித்து சமீபத்தில் புதிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ராவுடனான சந்திப்பில் ஃபின்டெக் நிறுவனத்தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கின்றனர். தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் வெளியிட்டுள்ள தகவலின் படி 2025 பிப்ரவரி மாதம் மட்டும் UPI மூலம் 16.11 பில்லியன் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு, மொத்தமாக ரூ.22 லட்சம் கோடி பரிவர்த்திக்கப்பட்டுள்ளது. ஜனவரியில் இந்த எண்ணிக்கை 16.99 பில்லியனாக இருந்தது.