GTvSRH: அபிஷேக் சர்மாவின் அதிரடி வீண் – 38 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி
GTvSRH : ஜபிஎல் 2025ல் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

GT Vs SRH
ஐபிஎல் 2025ல் (IPL) 51வது போட்டியில் புள்ளி பட்டியலில் 9 வது இடத்தில் இருக்கும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் (Sun Risers Hyderabad) அணியும் 4 வது இடத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans) அணியும் மோதுகின்றன. ஹைதராபாத் அணி கிட்டத்தட்ட ப்ளேஆஃப் வாய்ப்பை இழந்த நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணி தனது இருப்பை தக்க வைக்க போராடும் என எதிர்பார்க்கலாம். அதற்கு ஏற்ப டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணியின் சார்பாக சாய் சுதர்சன், சுப்மன் கில் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இருவரும் துவக்கம் முதலே அதிரடி காட்டினர். குஜராத் அணி பவர்பிளேயில் முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 82 ரன்கள் குவித்தது.
சச்சினின் சாதனையை முறியடித்த சாய் சுதர்சன்
🚨 SAI SUDHARSAN – FIRST PLAYER OF IPL 2025 TO SCORE 500 RUNS. 🚨 pic.twitter.com/ZePnLIuI2U
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 2, 2025
அதிரடியாக ஆடிய சாய் சுதர்சன், அன்சாரி வீசிய 7 ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் 23 பந்துகளில் 9 பவுண்டரிகள் அடித்து 48 ரன்கள் குவித்தார். இந்த போட்டியின் மூலம் 54 வது இன்னிங்ஸில் 2000 டி20 ரன்களை நிறைவு செய்தார். இதன் மூலம் சச்சினின் சாதனையை அவர் நிறைவு செய்தார். சச்சின் 59 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு சுப்மன் கில்லுடன் ஜாஸ் பட்லர் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக ஆடி குஜராத் அணியின் ரன்களை உயர்த்தினர். இந்த நிலையில் 13வது ஓவரில் சுப்மன் கில் ரன் அவுட்டானார். அப்போது அவர் 38 பந்துகளில் 10 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என 76 ரன்கள் விலாசினார்.அதனைத் தொடர்ந்து வாஷிங்டன் சுந்தர் களமிறங்கினார். மற்றொரு பக்கம் பட்லர் அதிரடியாக ஆடினார். இதனால் அணியின் ஸ்கோர் மள மளவென உயர்ந்தன. இந்த நிலையில் கடைசி ஓவரில் உனத்கட் பந்து வீச்சில் வாஷிங்டன் சுந்தர், டிவாட்டியா, ரஷித் கான் ஆகிய 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில், 224 ரன்கள் குவித்தது. அந்த அணியின் சார்பாக சாய் சுதர்சன் 48 ரன்களும் சுப்மன் கில் 78 ரன்களும், ஜோஸ் பட்லர் 64 ரன்களும் குவித்தனர். உனட்கட் அதிக பட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அபிஷேக் சர்மாவின் அதிரடி வீண்
இந்த நிலையில் 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி களமிறங்கியது. அந்த அணியின் அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் அதிரடியான தொடக்கத்தை கொடுக்க முயற்சித்தனர். ஆனால் ஹெட் 20 ரன்கள் எடுத்திருந்த போது பிரசித் கிருஷ்ணா பந்தில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து வந்த இஷான் கிஷனும் 13 ரன்களில் வெளியேறி ரசிகர்களை ஏமாற்றினார்.
ஒரு பக்கம் விக்கெட்டுகள் போனாலும் மற்றொரு பக்கம் அபிஷேக் சர்மா அதிரடி காட்டினார். அபிஷேக் சர்மா அதிரடியாக ஆடி 74 ரன்கள் குவித்து இஷான் சர்மா வீசிய 15வது ஓவரில் வெளியேறினார். இது இந்த சீசனில் அவரது இரண்டாவது அரைசதம் என்பது குறிப்பிடத்தக்கது. அவரைத் தொடர்ந்து அடுத்த ஓவரிலேயே ஹென்ரிச் கிளாசன் (23) அவுட் ஆனதும் ஹைதராபாத் அணியின் நம்பிக்கை குலைந்தது.
கேள்விக்குறியான ஹைதராபாத்தின் பிளேஆஃப் கனவு
இறுதியில், சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. மிடில் ஓவர்களில் பிரசித் கிருஷ்ணா (2 விக்கெட்டுகள், 19 ரன்கள்) சிறப்பாக பந்து வீசி முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த தோல்வியால், சன்ரைசர்ஸ் அணியின் பிளேஆஃப் செல்லும் வாய்ப்பு மிகவும் கடினமாகிவிட்டது. அதே சமயம், குஜராத் டைட்டன்ஸ் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் மூலம் குஜராத் டைட்டன் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.