IPL 2025: ஊக்கமருந்தில் சிக்கிய ஐபிஎல் பிரபலம்.. கிரிக்கெட்டில் இடைநீக்கம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Rabada's Drug Test Positive: ஐசிசி தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தைப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டதால், குஜராத் டைட்டன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஐபிஎல் 2025 போட்டியில் அவர் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடினார். இந்த சம்பவம் தென்னாப்பிரிக்கா மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. WTC இறுதிப் போட்டிக்கும் அவரது பங்கேற்பு கேள்விக்குறியாகியுள்ளது.

ஐசிசி தடைசெய்துள்ள ஊக்கமருந்தை பயன்படுத்தியதற்காக தென்னாப்பிரிக்காவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரும், ஐபிஎல் 2025 சீசனில் குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans) அணிக்காக விளையாடி வரும் வீரருமான ககிசோ ரபாடா (Kagiso Rabada) கிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, ஐபிஎல் 2025 (IPL 2025) சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக வெறும் 2 போட்டிகளில் மட்டும் விளையாடிய பிறகு, தனிப்பட்ட காரணங்களாக ரபாடா தென்னாப்பிரிக்கா திரும்பினார். இதுகுறித்து, குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில், ரபாடா சில நாட்களில் அணிக்கு திரும்புவார் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். இப்போது, இந்த செய்தி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
என்ன நடந்தது..?
2025 ஜனவரி மாதம் தென்னாப்பிரிக்கா டி20 லீக்கின்போது ககிசோ ரபாடா ஐசிசியால் தடைசெய்யப்பட்ட மருந்தை உட்கொண்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, ஐபிஎல் 2025 சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து ரபாடா நீக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கடந்த 2025 ஏப்ரல் 3ம் தேதி நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் ரபாடாவுக்கு பாதிப்பு இருப்பது தெரியவந்ததால், ஐபிஎல்லில் இருந்து விலகி தென்னாப்பிரிக்கா நாட்டிற்கு கிளம்பினார்.
ரபாடா வெளியிட்ட அறிக்கை:
Kagiso Rabada confirms in a statement through South Africa’s players union that he is currently serving a provisional suspension after testing positive for a recreational drug pic.twitter.com/gUd9Uu1Vhu
— Ali Martin (@Cricket_Ali) May 3, 2025
இதுகுறித்து ரபாடா வெளியிட்ட அறிக்கையில், “ நான் சமீபத்தில் இந்தியாவில் இருந்து தென்னாப்பிரிக்காவுக்கு தனிப்பட்ட காரணங்களுக்காக திரும்பினேன். இதற்கு காரணம், ஒரு போதைப்பொருள் சோதனையில் நான் ஊக்கமருந்து பயன்படுத்தி இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக நான் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளேன். கிரிக்கெட் விளையாரும் பெருமையை நான் ஒருபோதும் எளிதாக எடுத்துக்கொள்ள மாட்டேன். இது எனக்கு உயிரிலும் மேலானது. தற்போது தற்காலிக இடைநீக்கத்தை மேற்கொண்டாலும், விரைவில் களத்திற்கு திரும்புவேன். இந்த கடினமான நேரத்தில் எனக்கு ஆதரவளித்த கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு நன்றி” என்று தெரிவித்தார்.
எப்போது இடைநீக்கம் முடிவுக்கு வருகிறது..?
ரபாடாவின் இடைநீக்கம் எவ்வளவு காலம் அமலில் இருக்கும் என்பது இன்னும் தெரியவில்லை. ரபாடா பயன்படுத்தியது எந்த வகையான மருந்து என்றும், அதை எப்போது, எப்படி மருந்தைப் பயன்படுத்தினார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஐபிஎல் 2025 ல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு பெரும் அடியை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், வருகின்ற 2025 ஜூன் 11ம் தேதி நடைபெறவிருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டியில் அவர் பங்கேற்பது சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது. அவர் மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்ப முடியாவிட்டால் அது தென்னாப்பிரிக்க அணிக்கு ஒரு பெரிய இழப்பாக அமையும்.