Thiruvalleswarar Temple: குருபெயர்ச்சி 2025.. சென்னையில் செல்ல வேண்டிய குருபகவான் கோயில்!
2025 மே மாதம் குரு பெயர்ச்சியை முன்னிட்டு, சென்னையிலுள்ள திருவல்லீஸ்வரர் கோயிலுக்கு பக்தர்கள் அதிகளவில் வருகை தருவார்கள். சென்னையில் இருக்கும் குரு பகவானுக்குரிய தலம் என்பது இதன் சிறப்பாகும். 2025 ஆம் ஆண்டு குருபகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

பாடியநல்லூர் திருவல்லீஸ்வரர் கோயில்
ஜோதிட சாஸ்திரத்தை (Astrology) பொருத்தவரை நவகிரகங்களின் செயல்பாடுகளை பொறுத்து தான் தனிமனித வாழ்க்கையின் நிகழ்வுகள் இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த கிரகங்கள் 12 ராசிகளிலும் அவ்வப்போது பெயர்ச்சி அடைந்து பல்வேறு விதமான மாற்றங்களை உண்டாக்கும். அந்த வகையில் ஆண்டுக்கு ஒருமுறை குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைவார். இப்படியாக 2025 மே 11ஆம் தேதி வாக்கிய பஞ்சாங்கத்தின்படியும், மே 14 ஆம் தேதி திருக்கணித பஞ்சாங்கத்தின் படியும் குருபகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி (2025 Guru Peyarchi) அடைகிறார். பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தில் ஏதேனும் மாற்றங்கள் நிகழ்ந்தால் அதற்கு பரிகாரமாக பல்வேறு விதமான வழிபாட்டுத் தலங்கள் சொல்லப்படுகிறது. அந்த வகையில் சென்னையில் குரு பகவானின் தலமாக அறியப்படும் பாடியநல்லூர் திருவல்லீஸ்வரர் கோயில் பற்றி பார்க்கலாம்.
இந்த கோயில் ஆனது தினமும் காலை 6:30 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலையில் 4:30 மணி முதல் இரவு 8:30 மணி வரையும் பக்தர்களின் தரிசனத்திற்காக திறந்திருக்கும். திருவல்லீஸ்வரர் கோயில் உருவான வரலாறை பார்த்தோமேயானால், குரு பகவானின் மகனான பரத்வாஜர் ஒரு பிறவியில் பறவையான வலியனின் மகனாகப் பிறந்தார். தான் பறவையாக பிறந்ததை கண்டு வருத்தம் கொண்ட அவர் பல புண்ணிய தலங்களுக்கும் சென்று சிவனை வணங்கி வேண்டினார். அப்படியாக திருவல்லீஸ்வரர் கோயில் தற்போது அமைந்திருக்கும் இடத்திற்கு வந்த பரத்வாஜர் கொன்றை மரத்தின் அடியில் எழுந்தருளிய சிவலிங்கத்தை கண்டார்.
வழக்கம் போல் பூஜை வழிபாடு எல்லாம் மேற்கொண்ட நிலையில் அவருக்கு சிவன் காட்சி கொடுத்தார். அப்போதே தனக்கு விமோசனம் வேண்டும் என பரத்வாஜர் வேண்ட அப்படியே ஆகட்டும் என இறைவன் பறவைகளின் தலைவனாகும்படி அருளினார். அந்த கணம் முதல் இந்த கோயில் திருவலியநாதர் ஆலயம் என அழைக்கப்படுகிறது.
குரு தலமாக மாறிய கதை
ஒருமுறை குருபகவான் தான் செய்த தவறால் தனது தமையனின் மனைவியான மேனகையின் சாபத்தை பெற்றார். இந்த கோயிலில் உள்ள சிவனை வணங்கினால் பாவம் நீங்கி மோட்சம் கட்டும் என மார்க்கண்டே மகரிஷி குருபகவானிடம் தெரிவித்தார். அப்படியே இங்கு வந்த அவர் புனித தீர்த்தத்தில் நீராடிய பின் சுவாமியை வணங்க அவரது சாபம் நீங்கியது. அதுமட்டுமல்லாமல் விநாயகர் பிரம்மபுத்திரர்களாக அறியப்படும் கமலி வல்லி ஆகிய இருவரையும் இந்த தலத்தில் வைத்து தான் திருமணம் செய்து கொண்டார் என வரலாறு சொல்கிறது.
இந்த கோயிலில் உள்ள தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கினால் தோஷங்கள் நீங்கும் என்றும், இங்கிருக்கும் குரு பகவானை வணங்கினால் பாவங்கள் தீரும் என்றும் நம்பிக்கையாக உள்ளது. திருவல்லீஸ்வரர் கோயிலுக்கு வந்தால் முக்தி கிடைக்கும் என்பது பக்தர்களின் ஐதீகமாக உள்ளது.
மேலும் பிரகாரத்தில் சுவாமியை நோக்கியபடி தனி சன்னதியில் குரு பகவான் வீற்றிருக்கிறார. இக்கோயிலில் சித்திரையில் பிரம்மோற்சவம், தை கிருத்திகை மற்றும் குரு பெயர்ச்சி ஆகியவை வெகு விமரிசையாக கொண்டாடப்படும். சிவனின் தேவாரப் பாடல் பெற்ற 277 சிவ கோயில்களில் இது 254 வது தலமாகும்.
திருவல்லீஸ்வரரை தொடர்ந்து வழிபாட்டு வருபவர்களுக்கு திருமணத்தடை, பிணிகள் ஆகியவை நீங்கும் என்பது நம்பிக்கையாகும் .மேலும் வியாழக்கிழமை தோறும் இங்குள்ள குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவித்து வழிபட்டால் தோஷங்கள் நீங்கி துன்பங்கள் குறைந்து இன்பங்கள் பெருகும் என்பது ஐதீகமாக உள்ளது. வாய்ப்பு கிடைத்த அந்த கோயிலுக்கு சென்று வாருங்கள்.