Guru Peyarchi 2025: நன்மைகள் விளையும்.. குரு பெயர்ச்சிக்கான கடக ராசி பலன்கள்!

2025ம் ஆண்டு மே மாதம் குரு பெயர்ச்சி ரிஷபத்திலிருந்து மிதுன ராசிக்கு நடைபெறுகிறது. கடக ராசிக்காரர்களுக்கு மிதுனம் விரய ஸ்தானம் என்பதால், எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும். ஆனால், தொழில் மற்றும் படிப்பில் முன்னேற்றம் காணலாம். குடும்ப ஒற்றுமை குறைவதற்கான வாய்ப்பு உள்ளது.

Guru Peyarchi 2025: நன்மைகள் விளையும்.. குரு பெயர்ச்சிக்கான கடக ராசி பலன்கள்!

கடக ராசி பலன்கள்

Published: 

04 May 2025 13:52 PM

ஜோதிடத்தைப் பொறுத்தவரை 9 கிரகங்கள் தான் உலகம் செயல்பட காரணமாக சொல்லப்படுகிறது. வியாழன் கிரகத்தின் அதிபதியாக கருதப்படும் குரு பகவான் ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்வார். அப்படியாக 2025 ஆம் ஆண்டு வாக்கிய பஞ்சாங்கம் அடிப்படையில் மே 11 ஆம் தேதியும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி மே 14 ஆம் தேதியும் குரு பெயர்ச்சி (Guru Peyarchi 2025) நடைபெறுகிறது. இந்த முறை ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு குரு பகவான் செல்லவுள்ளார். அப்படியான நிலையில் ஜோதிடத்தில்  கடக ராசி காரர்கள் என்ன மாதிரியான பலன்களை பெறுவார் என்பதை பற்றி நாம் காணலாம். விசுவாவசு தமிழ் புத்தாண்டு தொடங்கிய காலகட்டத்தில் இருந்து லாப ஸ்தானத்தில் இருந்த குரு பகவான் குரு பெயர்ச்சியால் மிதுன ராசிக்கு மாறுகிறார். மிதுனம் கடக ராசியை பொறுத்த வரை விரய ஸ்தானமாகும்.

இந்த காலகட்டத்தில் வருமானத்தை விட எதிர்பாராத செலவுகள் இருக்கும். குடும்பத்தின் தேவைகள் படிப்படியாக அதிகமாகும். சில செலவுகள் சுப காரியங்களுக்காக இருப்பதில் நிம்மதி ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

தொழில் பலன்கள்

பணியிடங்களை பொருத்தவரை சனி பகவானையும் அவருடன் சேர்ந்திருக்கும் ராகுவையும் குரு பார்ப்பதால் அலுவலகத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் படிப்படியாக தீர்வு அடையும். அன்றாட கடமைகளில் கவனமாக செயல்படுவீர்கள். இதுவரை வெறுப்புடன் செயல்பட்டு வந்த உயர் அதிகாரி உங்களை பாராட்டுவார். பணியிடங்களில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்யும் வாய்ப்பு வெற்றிகரமாக நிறைவேறும். வெளிநாடு சென்று வேலை பார்க்க விரும்புவர்களுக்கு அதற்கான வாய்ப்பு அமையும்.

அதேசமயம் அஷ்டம ஸ்தானத்தில் சனி ராகு இணைந்துள்ளதால் வியாபாரத்தில் கடுமையான போட்டிகள் நிலவிய நிலையில் அவை படிப்படியாக குறையும். விற்பனையும் வருமானமும் எதிர்பாராத வளர்ச்சியை எட்டும். பார்ட்னர்களின் ஒத்துழைப்பால் புதிய பாதையில் பயணிப்பீர்கள். அதே சமயம் ராசிக்கு விரய ஸ்தானத்தில் குரு பகவான் சஞ்சரிப்பதால் 2025 அக்டோபர் 8ம் தேதி அவர் ஜென்ம ராசிக்கு மாறுவதாலும் இந்த காலகட்டத்தில் ஏற்படும் நன்மைகள் அனைத்தும் ஒரு அளவோடு தான் இருக்கும்.

வரவும் செலவும் சமமாக இருக்கும் என்பதால் சேமிப்பிற்கு சாத்தியக்கூறு இருக்காது. எனவே எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் திட்டமிட்டு செலவு செய்ய வேண்டும். வரவு செலவு கணக்குகளில் கவனமாக கையாள வேண்டும். யாரையும் நம்பி அதிக அளவிலான பணம் ஜாமின் கையெழுத்து ஆகியவை இருக்கவே கூடாது.

படிப்பில் முன்னேற்றம் உண்டாகும்

மாணவ மாணவியர்களுக்கு குரு பெயர்ச்சியால் தடையில்லா முன்னேற்றம் படிப்பில் உண்டாகும். விருப்பத்திற்கு ஏற்ப உயர்கல்வியை தேர்வு செய்வார்கள். நல்ல பண்புள்ள சக மாணவர்களின் நட்பு கிடைக்கும். கார்த்திகை மாதத்திற்கு பிறகு தேவையில்லாத விஷயங்களில் கவனம் செல்லும். எனவே மனதை கட்டுப்பாடாக வைத்துக் கொள்வதே நல்லது. விவசாயத்தைப் பொறுத்தவரை விளைச்சலும் வருமானமும் மனநிறைவை அளிக்கும் வகையில் இருக்கும்.கால்நடைகள் அபிவிருத்தி அடையும்.

குரு பெயர்ச்சியால் பெண்களுக்கு நேரடியாக நன்மைகள் கிடைக்காது. காரணம் குரு பகவான் விரய ஸ்தானத்திலும் ஜென்ம ஸ்தானத்திலும் மாறி மாறி சஞ்சரிப்பதால் அதேபோல் ராசிக்கு அஷ்டம் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி, ராகுவை குருபகவான் பார்ப்பதால் இதுவரை நிகழ்ந்த பல பிரச்சனைகளுக்கு முடிவுக்கு வரும். குழந்தை பாக்கியம் தொடர்பான நல்ல செய்திகள் வந்து சேரும். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் அனுசரித்து செல்வது குடும்பத்திற்கு நல்லது.

இந்த ராசிக்காரர்கள் வியாழன் மற்றும் சனி ஆகிய இரு நாட்களில் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று குரு, சனி மற்றும் ராகுவை தீபமற்றி வழிபாடு செய்தால் கைமேல் பலன் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

(ஜோதிட நம்பிக்கையின்படி இந்த கட்டுரையின் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)