Cinema Rewind : ஒரே படத்தில் இந்தியன், முதல்வன், சிவாஜி…. இயக்குநர் ஷங்கர் பகிர்ந்த விஷயம்!
Director S. Shankar : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களை வைத்து பெரிய பட்ஜெட்டில் உருவாக்கி பாலிவுட். டோலிவுட் எனப் பல மொழி திரைப்படங்களுக்குச் சவால் விடும் விதத்தில் திரைப்படங்களை உருவாக்கியவர் இயக்குநர் ஷங்கர். இவர் பல ஹிட் படங்களைக் கொடுத்திருக்கிறார். இவர் முன்னதாக பேசிய வீடியோ ஒன்றில் தனது படங்களை எல்லாம் மார்வெல் படத்தொகுப்பைப் போல இணைக்க நினைத்தேன் என்று கூறியுள்ளார், அதை குறித்து முழுமையாகப் பார்க்கலாம்.

தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரைப் பிரம்மாண்ட பட்ஜெட்டில் படங்களை இயக்கி, பல கோடிகளை வசூல் செய்த இயக்குநர் எஸ். ஷங்கர் (S. Shankar). இவர் ஆரம்பத்தில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் படங்களில் உதவி இயக்குநராக (Assistant director) பணியாற்றி தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார். இவர் தமிழில் முதன்முதலாக 1993ல் வெளியான ஜென்டில்மேன் (Gentleman) என்ற திரைப்படத்தை இயக்கினார். அறிமுக இயக்குநராகத் தமிழில் படங்களை இயக்க தொடங்கிய இவர் முதல் திரைப்படத்திலே ஃபேமஸ் ஆனார். இந்த திரைப்படத்தில் நடிகர் அர்ஜுன் (Arjun), மதுபாலா, சுபஸ்ரீ மற்றும் நம்பியார் எனப் பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்த ஜென்டில்மேன் படமானது சுமார் 175 நாட்களாகத் திரையரங்குகளில் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதை ஒட்டி அடுத்தடுத்த திரைப்படங்களை இயக்க ஆரம்பித்தார். இயக்குநர் ஷங்கர் சமூக கருத்து, மக்களின் பிரச்னைகள், அரசியல் போன்ற சமூகம் சார்ந்த திரைப்படங்களை இயக்க ஆரம்பித்தார். இவ்வாறு இவரின் இயக்கத்தில் 1996ல் வெளியான படம்தான் இந்தியன், சமூகம், அரசியல் கருத்து மற்றும் ஆக்ஷன் போன்ற கலவையில் உருவாகிய திரைப்படமாக இது அமைந்துள்ளது.
இதைத் தொடர்ந்து ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், அந்நியன் எனப் பல திரைப்படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக ஆனார் ஷங்கர். இயக்குநர் ஷங்கர் முன்னதாக பேசிய வீடியோ ஒன்றில் தனது படங்களை ஹாலிவுட் மார்வெல் படங்களின் தொகுப்பைப் போல் இயக்க வேண்டும் என்று நினைத்தேன் என்று கூறியிருந்தார். அதைப் பற்றி விவரமாகப் பார்க்கலாம்
இயக்குநர் சங்கர் பேசிய விஷயம் :
முன்னதாக பேசிய வீடியோவில், இயக்குநர் ஷங்கரிடம் தொகுப்பாளர் “நீங்க ஷங்கர் யூனிவர்ஸ் பிளான் பண்ணியிருந்தீர்களா” என்று கேள்வி கேட்டிருப்பார் அதற்கு “ஆமாம், நான் 2007ல் எந்திரன் திரைப்படம் எடுக்கும் போது நான் இயக்கிய முதல்வன், இந்தியன், சிவாஜி என மூன்று திரை கதாபாத்திரங்களும் சமூக பிரச்சனைக்காகப் போராடுவது போல ஒரே படத்தில் எடுக்கலாமா என்று என்னுடைய உதவி இயக்குநர்களிடம் கூறினேன். அதற்கு அவர்கள் என்னை நகைச்சுவையாகப் பார்த்துச் சிரித்தார்கள். எனக்குப் பல யோசனைகள் வரும் அந்த விதத்தில் இதையும் அப்படியே விட்டு விட்டேன். அதற்குப் பிறகு 2, 3 ஆண்டுகள் கழித்து அவெஞ்சர்ஸ் முதல் பாகம் வெளியானது இதைப் பார்த்த நான் இந்த திட்டத்தை முதலிலே பண்ணியிருக்கவேண்டும் என்று நினைத்தேன்” என்று இயக்குநர் ஷங்கர் வெளிப்படையாகக் கூறியிருந்தார்.
கேம் சேஞ்சர் திரைப்படம் :
இயக்குநர் எஸ். சங்கர் இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் கேம் சேஞ்சர். இந்த திரைப்படத்தில் நடிகர் ராம் சரண் முன்னணி நாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தின் மூலமாகத்தான் இயக்குநர் எஸ். சங்கர் தெலுங்கில் இயக்குநராக அறிமுகமானார். ஆனால் இவரின் இந்த படமானது பயங்கர தோல்வியைச் சந்தித்தது, இந்த படத்தைத் தொடர்ந்து இயக்குநர் எஸ்.சங்கர் எந்த ஒரு படத்திலும் கமிட்டாகவில்லை என்று கூறப்படுகிறது.