கண்ணீர்விடும் மக்கள்.. வாகா எல்லையை மூடிய பாகிஸ்தான்.. சொந்த நாட்டிற்கே திரும்ப முடியாத நிலை!

Attari Wagah Border : பாகிஸ்தான் மக்கள் இந்தியாவில் வெளியேற அட்டாரி வாகா எல்லையை இந்தியா திறந்து வைத்திருக்கும் நிலையில், பாகிஸ்தான் தற்போது வரை மூடிவைத்துள்ளது. இதனால், தங்களது சொந்த நாட்டிற்கே திரும்ப முடியாமல், பாகிஸ்தான் மக்கள் எல்லையில் தவித்து வருகின்றனர்.

கண்ணீர்விடும் மக்கள்.. வாகா எல்லையை மூடிய பாகிஸ்தான்..  சொந்த நாட்டிற்கே திரும்ப முடியாத நிலை!

அட்டாரி வாகா எல்லை

Updated On: 

02 May 2025 08:06 AM

பாகிஸ்தான், மே 02 : அட்டாரி வாகா எல்லையை (Attari Wagah Border) பாகிஸ்தான் மூடியதால், அந்நாட்டு மக்கள் தாய்நாட்டிற்கு திரும்ப முடியாமல் எல்லையில் தவித்து வருகின்றனர். அந்நாட்டிற்கு செல்ல இந்தியா அனுமதி அளித்தும், பாகிஸ்தான் வாகா எல்லையை திறந்துவிடாமல், மூடி வைத்துள்ளது. இதனால், பாகிஸ்தான் மக்கள் தங்களது சொந்த நாட்டிற்கே திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  ஜம்மு காஷ்மீரில் பஹல்காமில் 2025 ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் இந்தியா உள்பட உலக நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

வாகா எல்லையை மூடிய பாகிஸ்தான்

இந்த கொடூர தாக்குதலுக்கு பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தாலும், இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானுக்கு முக்கிய பங்கு இருப்பதாக இந்தியா குற்றச்சாட்டி உள்ளது. இதனை அடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை மேற்கெண்டது. அதே நேரத்தில், பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது.

அதில், முக்கியமாக, இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்களை வெளியேற்ற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்கள் 2025 ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டும்  என்றும் அதன்பிறகு அட்டாரி வாகா எல்லை மூடப்படும் என்றும்  மத்திய அரசு அறிவித்தது.

அதன்பிறகு,  பாகிஸ்தானியர்கள் வெளியேற அவகாசத்தை மத்திய அரசு  நீட்டித்தது. மறு உத்தரவு வரும் வரை பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேறலாம் என்றும்  அதற்காக அட்டாரி வாகா எல்லை திறந்து வைக்கப்படும் என்றும்  மத்திய அரசு அறிவித்திருந்தது. இதனால் பாகிஸ்தான் மக்கள் நிம்மதி அடைந்தனர்.

சொந்த நாட்டிற்கே திரும்ப முடியாத நிலை

இருப்பினும், பாகிஸ்தான் அரசு அட்டாரி வாகா எல்லையை மூழுவதுமாக மூடியுள்ளது. இருநாடுகளுக்கு இடையேயான அட்டாரி வாகா எல்லையை கடக்கும் பகுதியை பாகிஸ்தான் மூடியுள்ளது. இதனால், தனது சொந்த நாட்டிற்கே திரும்ப முடியாத நிலை பாகிஸ்தான் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கண்ணீர் மல்க பாகிஸ்தானியர்கள் எல்லையில் திரண்டுள்ளனர்.

இதனால், பாகிஸ்தான் மக்கள் எல்லையில் சிக்கி தவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எல்லையில் சிக்கித் தவிப்பவர்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த சூரஜ் குமார் கூறுகையில், “நான் பத்து நாட்களுக்கு முன்பு 45 நாள் விசாவில் இந்தியா வந்தேன். சீக்கிரமாக வெளியே சொன்னார்கள். ன்று காலை 6 மணிக்கு அட்டாரிக்குத் திரும்பிச் செல்ல நான் சென்றபோது, ​​கதவுகள் மூடப்பட்டிருப்பதைக் கண்டேன்” என்று கூறினார்.

மற்றொரு பாகிஸ்தான் குடிமகனான ஹர்ஜ் குமார் கூறுகையில், “நான் காலை 5 மணி முதல் இங்கே காத்திருக்கிறேன். எல்லை மூடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அதிகாரிகள் கதவுகளைத் திறந்து எங்களைத் திரும்ப அழைத்துச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன். நாங்கள் மன அழுத்தத்தில் இருக்கிறோம். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மோசமடைவது கவலைக்குரியதாக உள்ளது” என்று கூறினார். 2025 ஏப்ரல் 23ஆம் தேதி முதல் தற்போது வரை 911 பாகிஸ்தானியர்கள் இந்தியாவில் இருந்து வெளியேறி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.