Chennai Rains: வெயிலை விரட்டிய மழை.. குளிர்ந்த சென்னை… அடுத்த 3 மணிநேரத்தில் இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Tamil Nadu Weather Update: சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதக்கிய நிலையில், மே 4, 2025 அன்று மிதமான முதல் கனமழை பெய்தது. நுங்கம்பாக்கம், தாம்பரம் போன்ற பகுதிகள் கனமழையால் பாதிக்கப்பட்டன. ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. அடுத்த மூன்று மணி நேரத்தில் திருவள்ளூர், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களுக்கு லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Chennai Rains: வெயிலை விரட்டிய மழை.. குளிர்ந்த சென்னை... அடுத்த 3 மணிநேரத்தில் இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னையில் மழை

Published: 

04 May 2025 17:26 PM

சென்னை, மே 4: சென்னையில் (Chennai) கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதக்கிய நிலையில், இன்று அதாவது 2025 மே 4ம் தேதி சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மிதமானது முதல் பலத்தை மழை (Rain) பெய்துள்ளது. அதன்படி, சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம், தாம்பரம், ஆயிரம்விளக்கு, திருவல்லிக்கேணி, பழைய வண்ணாரப்பேட்டை (Old Washermanpet), தண்டையார்பேட்டை, பூந்தமல்லி, ஆலந்தூர், காசிமேடு, ராயப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் நல்ல மழை பெய்தது. இந்த திடீர் மழையால் காலை முதல் உலாவி வந்த வெட்கை நீங்கி, குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. சென்னையை தொடர்ந்து ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.

அடுத்த 3 மணிநேரத்தில் தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு..?

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்திற்குள் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் ஆகிய 4 மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதை தமிழ்நாட்டில் இன்று அதாவது 2025 மே 4ம் தேதி 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோயம்புத்தூர், நீலகிரி, அரியலூர், கரூர், பெரம்பலூர், திருச்சி, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அடுத்த சில தினங்களுக்கான வானிலை எப்படி..?

2025 மே 5ம் தேதியான நாளை தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

2025 மே 6ம் தேதியான நாளை மறுநாள் தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

2025 மே 7ம் தேதி தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

2025 மே 8ம் தேதி தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

2025 மே 9ம் தேதி மற்றும் 2025 மே 10ம் தேதி தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழ்நாட்டின் கடலோரப்பகுதிகள், வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் 2025 மே 4ம் தேதியான இன்று முதல் 2025 மே 8ம் தேதி வரை எச்சரிக்கை ஏதுமில்லை.