Tamil Nadu CM MK Stalin: கல்வி நிலையங்களில் மூடநம்பிக்கை கூடாது.. முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை!

Tamil Nadu State vs Governor: சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழாவில், உச்சநீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புக்குப் பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டப்பட்டார். விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராகவும், கல்வி நிறுவனங்களில் மூடநம்பிக்கை பரப்புவோருக்கு எதிராகவும் கடும் எச்சரிக்கை விடுத்தார். உலகத்தரம் வாய்ந்த கல்வி, அறிவியல் அணுகுமுறை மற்றும் சமூக நீதி ஆகியவற்றை வலியுறுத்தினார்.

Tamil Nadu CM MK Stalin: கல்வி நிலையங்களில் மூடநம்பிக்கை கூடாது.. முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published: 

03 May 2025 22:11 PM

சென்னை, மே 3: உச்சநீதிமன்றத்தில் (Supreme Court) வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை பெற்றதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு (Tamil Nadu CM MK Stalin) இன்று அதாவது 2025 மே 3ம் தேதி சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டி வி.ஐ.டி வேந்தர் ஜி.விஸ்வநாதன், திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன், கோவை ஜிஆர்ஜி கல்வி குழும நிறுவனர் நந்தினி ரங்கசாமி, மதுரை தியாகராஜர் கல்விக் குழும நிர்வாக இயக்குனர் ஹரி கே தியாகராஜன் மற்றும் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பேசினார். இதை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராகவும், கல்வி நிலையங்களில் மூட நம்பிக்கையை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை:

ஆளுநருக்கு எதிராக பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ இந்த பாராட்டு விழாவில் நிறைய மாணவர்கள் உள்ளீர்கள். நாளைய தலைவர்கள் நீங்கள், நீங்களே யோசித்து பாருங்கள். தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகி மக்களுக்கு தேவையான திட்டங்களை தீட்டினால், சாதாரண மத்திய அரசின் ஏஜண்டாக நியமிக்கப்பட்ட, தற்காலிகமாக தங்கி இருக்கிற ஒரு ஆளுநர் அவற்றையெல்லாம் தடுத்து நிறுத்த முடியுமென்றால், மக்கள் போடுகிற ஓட்டுக்கு இங்கு என்ன மரியாதை இருக்கிறது..? தேர்தல் எதற்காக நடக்க வேண்டும்..? ஆளுநர் பதவி என்பது எந்த பதவியும் இல்லாத ஒரு ரப்பர் ஸ்டாம்ப். இங்கு கல்லூரிகள் இருக்கும் இடமானது மாநில அரசு சம்பந்தப்பட்டது.

ஆசிரியர்களுக்கு சம்பளம் தருவது மாநில அரசு, மாணவர்கள் அனைவருக்கும் அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பது மாநில அரசு. ஆனால் பல்கலைக்கழகத்தில் மட்டும் துணை வேந்தரை ஆளுநரை நியமிக்க வேண்டும் என்றால், எந்தவிதத்தில் நியாயம். அதனால்தான், உச்சநீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்று முடிவு எடுத்தேன். அங்கு நமக்கு சாதகமான தீர்ப்புகளை வழங்கினார்கள். எளிதாக சொல்லவேண்டுமென்றால், பூனைக்கு மணி கட்டி இருக்கிறார்கள். தீர்ப்பில் என்ன கூறியிருந்தார்கள் என்றால், ஒரு மசோதாவை ஆளுநர் நிறுத்தி வைக்க வேண்டுமென்றால் 3 மாதத்திற்குள் மாநில அரசுக்கு தெரிவிக்க வேண்டும். குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டுமென்றால், 3 மாதத்திற்குள் செய்ய வேண்டும்.

ஒரு மசோதா 2வது முறையாக ஆளுநருக்கு வந்தால் அதை, உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இது மாதிரியான கருத்துகளை தெரிவித்த உச்சநீதிமன்றம் நிறுத்திவைக்கப்பட்ட 10 மசோதாக்களுக்கு சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி தீர்வு வழங்கியது. இப்படி ஒரு கல்லில் பல மாங்காய்களை அடித்துள்ளோம். பிரதமரின் உரிமையை குடியரசு தலைவர் எடுத்துகொண்டால் சும்மா இருப்பார்களா..? நமக்கு ஆளுநருக்கும் தனிப்பட்ட பகை என்று எதுவும் உள்ளதா இல்லவே இல்லை.

தமிழ்நாட்டின் கல்வியை உலகளவில் மேம்படுத்த வேண்டும் என்று நான் வலியுறுத்தி பேசியது என்னவென்றால், உலகத்தரம் வாய்ந்த கல்வியை வழங்க வேண்டும். உலகத்திலிருந்து பல்வேறு மாணவர்கள் நம் மாநிலத்திற்கு கல்வி கற்க வரவேண்டும். கல்வி நிலையங்களில் அறிவியல் தொடர்பான கருத்துகள் மட்டுமே கற்பிக்கப்பட வேண்டும். பகுத்தறிவுக்கு எதிரான முட்டாள் தனமான கட்டுக்கதைகளை, மூட நம்பிக்கைகளை பரப்புகிற இடமாக கல்விக்கூடங்கள் இருக்க கூடாது. இரண்டே அஜெண்டாதான் இருக்க வேண்டும். ஒன்று Scientific Approach, இரண்டு Social Justice. இதற்கு எதிராக எது நடந்தாலும் அரசின் ரியாக்‌ஷன் கடுமையாக இருக்கும்” என்று தெரிவித்தார்.