அதிகரிக்கும் தெரு நாய்க்கடி தொல்லை… முதல்வர் ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு

Stray Dog Control:தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த, முதல்வர் மு.க. ஸ்டாலின் 9 அம்சத் திட்டத்தை அறிவித்துள்ளார். இதில் 500 கால்நடை மருத்துவர்கள் மற்றும் உள்ளாட்சி ஊழியர்களுக்குப் பயிற்சி, 100 அரசு கால்நடை மருத்துவமனைகளை மேம்படுத்துதல், 72 நாய்க்காப்பகங்கள் அமைத்தல், மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக்கள் அமைத்தல், சென்னையில் 10 புதிய மையங்கள் தொடங்கப்படுதல் மற்றும் கூடுதல் நாய் பிடி வாகனங்கள் கொள்முதல் செய்யப்படுதல் ஆகியவை அடங்கும்.

அதிகரிக்கும் தெரு நாய்க்கடி தொல்லை... முதல்வர் ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு

தெரு நாய்களைக் கட்டுப்படுத்த 9 அம்ச திட்டங்கள்

Published: 

03 May 2025 08:04 AM

தமிழ்நாடு மே 03: நகரங்களில் தெரு நாய்களின் (Street Dogs) எண்ணிக்கை அதிகரிப்பால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க, முதல்வர் மு.க.ஸ்டாலின் ( Tamilnadu CM M.K Stalin ) தலைமையில் 9 அம்ச செயல் திட்டம் அறிவிக்கப்பட்டது. 500 மருத்துவர்கள் மற்றும் உள்ளாட்சி ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். 100 அரசு கால்நடை மருத்துவமனைகள் மேம்படுத்தப்பட்டு, 72 நாய்க் காப்பகங்கள் அமைக்கப்படும். மாவட்ட அளவில் விலங்கு இனப்பெருக்க கட்டுப்பாட்டுக்கு கண்காணிப்பு குழுக்கள் செயல்படும். சென்னை மாநகராட்சியில் (Chennai Corporation) 10 புதிய மையங்கள் தொடங்கப்படும். கூடுதலாக நாய்ப் பிடி வாகனங்கள் கொள்முதல் செய்யப்படும் என முதல்வர் தெரிவித்தார்.

தெரு நாய்களைக் கட்டுப்படுத்த 9 அம்ச திட்டங்கள்

மாநிலம் முழுவதும் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்க, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் 9 அம்ச செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் வகையில் முக்கிய உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. நகர்ப்பகுதிகளில் தெருநாய்கள் அதிகரிப்பதால், பாதுகாப்பு சவால்கள் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது.

பயிற்சி, மருத்துவ வசதி, நிதியுதவி – முழுமையான அணுகுமுறை

முதல்வர் உத்தரவு படி, தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய 500 கால்நடை மருத்துவர்களும், நாய்களைப் பிடிக்க 500 உள்ளாட்சி ஊழியர்களும் பயிற்சிபெறவுள்ளனர். மாநிலம் முழுவதும் உள்ள 100 அரசு கால்நடை மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படுவதுடன், இனப்பெருக்கத்தடை அறுவை சிகிச்சை வசதிகள் ஏற்படுத்தப்படும்.

தெரு நாய்களைக் கட்டுப்படுத்த 9 அம்ச திட்டங்கள்

 72 நாய்க் காப்பகங்கள், தனியார் தொண்டு அமைப்புகளுடன் ஒத்துழைப்பு

நோயால் பாதிக்கப்பட்ட, காயமடைந்த, வயதான மற்றும் கைவிடப்பட்ட நாய்களுக்கு 72 காப்பகங்கள் அமைக்க உள்ளாட்சி அமைப்புகள் இடம் வழங்கும். இதன் பராமரிப்பை தொண்டு நிறுவனங்கள் மேற்கொண்டு, அதற்குத் தேவையான நிதியையும் அரசு ஒதுக்கவுள்ளது.

மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு

மாவட்டத்துக்குள் கூடுதல் அறுவை சிகிச்சை மையங்கள், நாய்க் காப்பகங்கள் நிறுவப்படும். விலங்குகள் இனப்பெருக்க கட்டுப்பாட்டிற்காக மாநில அளவில் தலைமைச் செயலர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பிலும் உள்ளூர் கண்காணிப்பு குழு செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் விரைவில் 10 புதிய மையங்கள்

சென்னையில் தற்போது செயல்படும் 5 மையங்களைத் தொடர்ந்து, 10 புதிய நாய் இனப்பெருக்க கட்டுப்பாட்டு மையங்கள் மற்றும் 10 கால்நடை மருத்துவமனைகள் விரைவில் தொடங்கப்படும். இதற்காக மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

நாய்ப் பிடி வாகனங்கள் உடனடியாக வாங்கப்படும்

நாய்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்வதை கருத்தில் கொண்டு, விரைவில் இனப்பெருக்கத் தடை அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய தேவையை பூர்த்தி செய்ய, கூடுதலாக நாய்ப் பிடி வாகனங்கள் உடனடியாக கொள்முதல் செய்யப்படும் என முதல்வர் தெரிவித்தார். இந்த முக்கிய ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் கே.என். நேரு, அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், மா. சுப்பிரமணியன் மற்றும் தலைமைச் செயலர் முருகானந்தம் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், தெருநாய்கள் காரணமாக ஏற்படும் பொதுமக்கள் அச்சம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.