மதுரை சித்திரைத் திருவிழா… பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய புதிய கட்டுப்பாடுகள்

Madurai Chithirai Festival: 2025 மே 12 அன்று நடைபெறும் மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை அடுத்து, அதிக அழுத்த நீர் மற்றும் வேதிப்பொருட்கள் கலந்த நீர் பயன்படுத்தக் கூடாது எனவும், சுத்தமான நீர் மட்டுமே குறைந்த விசை குழாய்களில் பயன்படுத்த வேண்டும் எனவும் கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

மதுரை சித்திரைத் திருவிழா... பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய புதிய கட்டுப்பாடுகள்

சித்திரைத் திருவிழா பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள்

Published: 

03 May 2025 08:45 AM

மதுரை மே 03: மதுரை சித்திரைத் திருவிழாவின் (Madurai Chithirai Festival ) முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம், 2025 மே 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்துகொள்கிறார்கள். இந்த நிகழ்வின்போது தண்ணீர் பீய்ச்சி அடிப்பது வழக்கம். ஆனால் அதிக விசைத்திறன் கொண்ட குழாய்கள் மற்றும் வேதிப்பொருள் கலந்த நீர் பயன்படுத்தக் கூடாது என கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. சுத்தமான நீர் மட்டுமே குறைந்த விசை குழாய்களில் பீச்சி அடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை (Court Order) நினைவுபடுத்தியும் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மே 12-ல் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம்

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாகக் கொண்டாடப்படும் “கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும்” வைபவம், ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும் மகா நிகழ்வாகவே மாற்றியமைந்துள்ளது. தங்கக் குதிரையில் கம்பீரமாக வந்தடைந்து, வைகை ஆற்றில் இறங்கும் அழகர் உற்சவம், இவ்வாண்டு 2025 மே 12ஆம் தேதி சித்திரா பௌர்ணமி நாளில் நடைபெற உள்ளது.

பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய புதிய கட்டுப்பாடுகள்

இந்த வைபவத்தின் போது, பக்தர்கள் நேர்த்திக் கடனாக அழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அதிக விசை கொண்ட குழாய்கள் (பம்புகள்) மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்படுவதால் சிலை சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், கோவில் பட்டர்கள் மீது அதிக அழுத்தத்தில் தண்ணீர் வீசப்படுவதால் சிரமம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

  • இதனைத் தடுக்க, அழகர் கோவில் நிர்வாகம் முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி:
  • அதிக விசைத்திறன் கொண்ட குழாய்கள் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்கக் கூடாது.
  • வேதிப்பொருட்கள் மற்றும் வாசனை திரவியங்கள் கலந்த தண்ணீரையும் பயன்படுத்தக் கூடாது.
  • பக்தர்கள் சுத்தமான தண்ணீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

ஐதீக முறையுடன் நேர்த்திக் கடனை செலுத்த வேண்டுகோள்

விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்த விரும்பும் பக்தர்கள், தோல் பையில் சிறிய குழாய் பொருத்தி, குறைந்த விசைத்திறனுடன் தண்ணீரை பீய்ச்சி அடித்து வழிபடலாம் என கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம்: நீதிமன்ற உத்தரவு

முன்னதாக, இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், அதிக விசை கொண்ட குழாய்கள் மற்றும் வேதிப்பொருட்கள் கலந்த நீர் பயன்படுத்த வேண்டாம் என நீதிமன்றம் கடுமையாக உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிவுறுத்தல்களை அனைத்து பக்தர்களும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும். மதுரை சித்திரை விழாவின் பண்பாட்டு பாரம்பரியத்தையும், பாதுகாப்பையும் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மதுரை சித்திரைத் திருவிழா

மதுரை சித்திரைத் திருவிழா 2025, ஏப்ரல் 29 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா மொத்தம் 12 நாட்கள் நீடிக்கிறது. முக்கிய நிகழ்வுகளில், 2025 மே 6 அன்று மீனாட்சி அம்மனின் பட்டாபிஷேகம் நடைபெறும்.

அதன் பின்னர், 2025 மே 8 அன்று மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரருக்கு திருமணம் நடைபெறும், இது திருக்கல்யாணமாக அழைக்கப்படுகிறது. 2025 மே 9 அன்று தேர் திருவிழா நடைபெறும், இதில் பெருமாள் தேர் ஊர்வலமாக வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கிறார்.

இறுதி நிகழ்ச்சியாக, 2025 மே 12 அன்று அழகரின் வைகை ஆற்றில் எழுந்தருளல் நிகழும். சித்திரைத் திருவிழா என்பது சைவம் மற்றும் வைணவம் என்ற இரு சமயங்களையும் ஒருங்கிணைக்கும் தனித்துவமான விழாவாகும். மதுரை மாநகரில் நடைபெறும் இந்த விழாவிற்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தங்கள் ஆரவாரத்துடன் பங்கேற்கின்றனர்.