MIS : ஒரு முறை முதலீடு செய்தால் மாதம் மாதம் வருமானம்.. வாழ்க்கை துணையுடன் இணைந்து சேமிக்க சிறந்த திட்டம்!

Post Office Monthly Income Saving Scheme | அஞ்சலகங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் மாதாந்திர வருமான திட்டம். இந்த திட்டத்தில் கணவன், மனைவி இணைந்து முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபத்தை பெற உதவியாக இருக்கும்.

MIS : ஒரு முறை முதலீடு செய்தால் மாதம் மாதம் வருமானம்.. வாழ்க்கை துணையுடன் இணைந்து சேமிக்க சிறந்த திட்டம்!

மாதிரி புகைப்படம்

Published: 

04 May 2025 15:46 PM

மனிதர்களின் வாழ்வில் பொருளாதாரம் (Economy) முக்கிய பங்கு வகிக்கிறது. சரியான பொருளாதாரம் இல்லை என்றால் எதிர்பாராத நேரங்களில் ஏற்படும் நிதி சிக்கல்களில் சிக்கி அவதிப்படும் சூழல் உருவாகிவிடும். எனவே எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பலரும் சேமிப்பு (Saving) அல்லது முதலீடு (Investment) செய்ய விரும்புகின்றனர். அதிலும் குறிப்பாக திருமணமான தம்பதிகளுக்கு அதிக பணம் தேவைப்படுகிறது. குழந்தைகளை வளர்ப்பது முதல் அவர்களது கல்வி, திருமணம் வரை பல தேவைகளுக்காக பணம் தேவைப்படுகிறது. இதனால் திருமணம் ஆன தம்பதிகள் தங்களுக்காகவும், தங்களது பிள்ளைகளுக்காகவும் ஏதேனும் ஒரு சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். அவ்வாறு தங்களது துணையுடன் சேர்ந்து முதலீடு செய்ய விரும்பும் நபர்களுக்கு அரசின் ஒரு சிறப்பு திட்டம் உள்ளது. அது என்ன திட்டம், அதில் எவ்வாறு முதலீடு செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அஞ்சலக மாதாந்திர வருமான திட்டம்

அஞ்சலகங்கள் மூலம் பொதுமக்களின் நலனுக்காக அரசு பல வகையான சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் இந்த அஞ்சலக மாதாந்திர வருமான திட்டம் (MIS – Monthly Investment Scheme). இந்த திட்டத்திற்கு அதிக வட்டி வழங்கப்படும் நிலையில், அதிக லாபம் பெற விரும்பும் நபர்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்த திட்டம் அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், நிதி இழப்பு ஏற்படும் அபாயமும் இதில் மிகவும் குறைவாகவே உள்ளது. எனவே, சிறந்த வருமானத்தை பெற விரும்பும் நபர்கள் ஒருமுறை இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் மாதம் மாதம் வருமானத்தை பெறலாம்.

முதலீடு செய்வது எப்படி

இந்த அஞ்சலக மாதாந்திர வருமான திட்டம், மாத வருமானம் பெற சிறந்ததாகும். இந்த திட்டத்திற்கு 7.4 சதவீதம் வட்டி வழங்கப்படும் நிலையில், இதன் மூலம் நல்ல தொகையை மாத வருமானமாக பெறலாம். இந்த திட்டத்தில் குறைந்தது ரூ.1,000 முதல் முதலீடு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. இதுவே இந்த திட்டத்தில் தனிநபர் அதிகபட்சமாக ரூ.9 லட்சமும் கூட்டு கணக்கு மூலம் ரூ.15 லட்சம் வரையும் முதலீடு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. இதில் இந்த கூட்டு கணக்கில் கணவன், மனைவி இணைந்து முதலீடு செய்து நல்ல லாபத்தை பெற முடியும்.

அதாவது அஞ்சலக மாதாந்திர வருமான திட்டத்தில் நீங்கள் உங்கள் மனைவியுடன் இணைந்து ரூ.15 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்த திட்டத்திற்கு 7.4 சதவீதம் வட்டி வழங்கப்படும் நிலையில், மாதாந்திர வருமானமாக ரூ.9,250 வரை பெறலாம். இதன் மூலம் ஆண்டுக்கு வட்டியாக மட்டுமே ரூ.1,11,000 வரை பெறலாம். தங்களது ஓய்வு காலத்தை திட்டமிடும் தம்பதிகள் இந்த திட்டத்தில் முதலீடு செய்வது அவர்கள் தங்களது கடைசி காலத்தில் நிதி பாதுகாப்பை பெற உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.