ஆன்லைன் ரம்மியால் வெடித்த மோதல்… கார் ஏற்றி ஒருவர் கொலை… 11 பேர் காயம்!
Ramanathapuram Crime News : ராமநாதபுரத்தில் இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் காரை ஏற்றி ஒருவர் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 11 பேர் காயம் அடைந்துள்ளனர். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணம் கொடுப்பது ஏற்பட்ட மோதலில், ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மாதிரிப்படம்
ராமநாதபுரம், மே 04 : ராமநாதபுரத்தில் காரை ஏற்றி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதில் 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆன்லைன் ரம்மி விளையாடியதில் பணம் கொடுப்பது தொடர்பாக இருதரப்பினருக்கு இடையே தகராறில், ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் தொடர்ந்து இளைஞர்கள் உட்பட பலரும் உயிரிழந்து வருகின்றனர். ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதே நேரத்தில், இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
ஆன்லைன் ரம்மியால் வெடித்த மோதல்
ஆனாலும், ஆன்லைன் ரம்மி தமிழகத்தில் பலரும் விளையாடி வருகின்றனர். இதற்கிடையில், 2022ஆம் ஆண்டு ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளுக்கு ஒழுங்குமுறை சட்டம் இயற்றப்பட்டது. இதில் பல்வேறு விதிமுறைகளை தமிழக அரசு விதித்தது. இருப்பினும், ஆன்லைன் ரம்மி விளையாடுவது நிற்கவில்லை.
பலரும் ஆன்லைன் ரம்மியில் அதிகபடியான பணத்தை முதலீடு செய்து வருகின்றனர். இதில் பணத்தை இழந்த வேதனையில் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். இதுவரை தமிழகத்தில் மட்டும் ஆன்லைன் ரம்மியால் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருப்பதாக தெரிகிறது. தமிழக அரசின் விதிமுறைகளுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், ராமநாரபுரத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. அதாவது, ஆன்லைன் ரம்மியால் ஏற்பட்ட மோதலில், ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் அம்மன் கோவில் கிராமத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடிதில் பணம் கொடுப்பது தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
கார் ஏற்றி ஒருவர் கொலை
இந்த மோதல் கைகலப்பாக மாறியது. இதனை அடுத்து, சாத்தையா என்பவர் மீது ராமநாதபிரபு என்பவர் காரை ஏற்றியுள்ளார். இதில் சாத்தையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும், 11 பேருக்கு காயம் அடைந்துள்ளனர். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த சாத்தையா உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, அம்மன் கோயில் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாட்டை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆன்லைன் சூதாட்ட தடை வழக்கை உச்ச நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.